(Reading time: 32 - 64 minutes)

நீங்க சொல்றது எனக்கு புரியுது அத்தை.. ஆனா இதுல என்னோட தப்பு என்ன இருக்கு… நானா அந்த சௌமியாவை வீட்டுக்கு வரச் சொல்லல… அவ வீட்டுக்கு வருவான்னு கூட நான் எதிர்பார்க்கல.. வர்றவளை நான் ஏன் வந்தேன்னு கேக்க முடியுமா..?? அவளை ரூம்க்கு கூட்டிட்டுப் போனது தப்பு தான்… ஆனா இப்படியெல்லாம் இருக்கும்னு எனக்கு எப்படி தெரியும்… ரிஷப் இதுவரைக்கும் என்கிட்ட இதைப்பத்தியெல்லாம் சொன்னதேயில்லை… சொல்லியிருந்தா நானும் கொஞ்சம் கவனமா இருந்திருப்பேனே..??”

“அவன் ஏன் இதைப்பத்தி உன்கிட்ட சொல்லலன்னு தெரியல.. ஆனா கல்யாணமாகி பத்து நாள் கூட முழுசா முடியலையே… இதுக்குள்ளேயே ஏன் உன்கிட்ட இதெல்லாம் சொல்லி குழப்பனும்… மெதுவா சொல்லலாம்னு நினைச்சிருக்கலாம்… வீட்ல நானும், விஜியும் இருக்கோமில்ல… எங்களை  மீறி என்ன நடக்கப்போகுதுன்னு அவன் சாதாரணமா இருந்திருக்கலாம்… அந்த பொண்ணு ரூமை பார்க்கனும்னு சொன்னப்பவே, நானும் வேண்டாம்னு சொல்ல நினைச்சேன்… இருந்தாலும் நீ ஏதாவது தப்பா எடுத்துக்குவியோன்னு தான் அமைதியாயிட்டேன்.. இருந்தும் அந்த சௌமியா மேலயும் தப்பு இருக்கும்மா…

நாங்கல்லாம் இருந்தப்பவே செல்வா அந்த ரூமை பூட்டி வச்சிட்டுப் போறவன், இப்போ திறந்து வச்சிட்டுப் போறான்னா என்ன அர்த்தம்..?? உன்மேல அவன் நம்பிக்கை வச்சிருக்கான்னு அர்த்தம்… உனக்கு தெரியாம அவனுக்கு பர்சனல்னு எதுவும் இல்லைன்னு அர்த்தம்… செல்வா வரும்போது அந்தப் பொண்ணு அந்த கதவை திறந்து பார்த்திருக்கு… அது தப்பு தானேம்மா… அது உங்க பெட்ரூம், அந்த ரூம்ல உங்களோட தனிப்பட்ட விஷயங்கள் இருக்கலாம்.. நீயும் இல்லாத சமயத்துல அந்த ரூமை திறந்துப் பார்க்கலாமா..?? சொல்லு.. அப்படியும் செல்வா நீ யாருன்னு அந்தப் பொண்ணுக்கிட்ட கேட்ருக்கான்.. அதுக்கு பதில் சொல்ல அந்தப் பொண்ணு திணறியிருக்கா.. அவ பார்வை அவனுக்கு ஏதோ தப்பா தெரிஞ்சிருக்கு.. அதான் அவன் கோபப்பட்ருக்கான்.”

“நானும் சௌமியா செஞ்சத நியாயப்படுத்தல அத்தை… அவ செஞ்சது தப்பு தான்… ஆனா வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கிட்ட அப்படி கோபமா நடந்துக்கலாமா..?? அவ போனதுக்கு பிறகு கூட என்கிட்ட இனி இப்படி நடந்துக்காதன்னு சொல்லியிருக்கலாம்… ரிஷப் அந்த நேரத்துல எங்க ரெண்டுப்பேரை மட்டும் அசிங்கப்படுத்தல… அவரையும், அதே சமயம் உங்களையும் சேர்த்து தான் அவர் அசிங்கபடுத்தியிருக்காரு…”

“புரியுதும்மா… நான் செல்வா செஞ்சத நியாயப்படுத்தவே இல்ல…. அவன் பேசினது தப்பு தான், அவனையும் நான் திட்டினேன்… இருந்தாலும் எல்லாம் நடந்து முடிஞ்சுப் போச்சு… அவன் ஏற்கனவே ஆஃபிஸ் டென்ஷனோட விட்டுக்கு வந்திருக்கான்… இங்க அந்த சௌமியாவை பார்த்ததும் இன்னும் கோபத்துல பேசிட்டானே தவிர, அது அவனோட மனசுல இருந்து வந்த வார்த்தையா இருக்காது…

அந்த சௌமியா முன்னாடி அவன் பேசினது உனக்கு எப்படி இருக்கும்னு புரியுது.. ஆனா அதே இடத்துல உன்னோட ப்ரண்ட் யமுனா இருந்திருந்தா, இப்படியெல்லாம் நடந்திருக்குமா..?? அப்படியே நடந்திருந்தாலும் அவ உன்னை இப்படியெல்லாம் பேசியிருப்பாளா..?? உனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைச்சதுல அந்த சௌமியாக்கு பொறாமை இருக்கும்மா… அவ பார்வையிலேயும், அவ பேச்சிலேயும் அதை நல்லா புரிஞ்சுக்க முடியுது… இப்படி ஒரு பிரச்சனை நடக்கலைன்னாலும், அந்த பொண்ணு உன்னோட மனசை கஷ்டப்படுத்துற மாதிரி ஏதாவது பேசியிருப்பா.. அவ முன்னாடி அவமானம் பட்டுட்டோமேன்னு நினைச்சு வருத்தப்படாதம்மா.. அவ அப்படி பேசினா பேசிட்டுப் போறா..

நாங்க யாரும் உன்னை அந்தப் பொண்ணு சொல்ற மாதிரி நினைக்கல… செல்வாவும் உன்கிட்ட அப்படி பேசினதுக்கு ரொம்ப வருத்தப்பட்றான்ம்மா.. உங்க கல்யாணம் எதிர்பாராத விதமா நடந்துச்சு… இப்போ நீங்க ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு உங்க வாழ்க்கையை சந்தோஷமா வாழனும்… இந்த நேரத்துல இப்படி சின்ன சின்ன பிரச்சனையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு பாராமுகமா இருக்கறது நல்லதாம்மா.. இது உன்னோட அம்மா, அப்பாக்கு தெரிஞ்சா கஷ்ட்ப்பட மாட்டாங்களா..?? செல்வா அவன் பேசினதுக்கு வருத்தப்பட்டு உன்கிட்ட மன்னிப்பு கேக்க நினைக்கிறான்… அவன் தப்பை உணரும் போது, நீ அவனை மன்னிக்கக் கூடாதா..?? நீ படிச்சப் பொண்ணு புரிஞ்சிப்பன்னு நினைக்கிறேன்…” என்றவர், அவள் யோசிக்கவும் கொஞ்சம் அவகாசம் கொடுத்து அங்கிருந்து சென்றார்.

கோமதி சொல்லியதெல்லாம் நர்மதாவிற்கு சரியென்று பட்டாலும், அவர் இந்த ஒருமுறை நடந்ததை வைத்து தானே பேசுகிறார்… முன்பு செல்வா காயப்படுத்தி பேசியதெல்லாம் அவருக்கு தெரியுமா..?? அவன் ஒன்றும் என் காதலை ஏற்றுக் கொண்டதால் இந்த திருமணம் நடக்கவில்லை.. ஏதோ திருமணம் நடந்துவிட்டது என்ற ரீதியில் தான் தன்னை அவன் ஏற்றுக் கொள்ள நினைப்பதாக தான் அவளுக்கு தோன்றியது… இருந்தும் அடிமனதில் அவனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லாததால் தான் இப்படி தன்னை காயப்படுத்துவதாக நினைத்தாள்…. இருந்தும் தன் மகன் செய்தது சரியென்று நினைக்காமல், அவன் செய்த தவறை மன்னிக்க சொல்லி கோமதி கேட்டது நர்மதாவிற்கு மகிழ்ச்சியை கொடுத்தது… அவருக்காகவாவது அவனை மன்னிக்கலாம் என்று நினைத்தப்படி இருந்த போது, அவளின் அலைபேசி அடித்தது… அதில் தெரிந்த யமுனாவின் பெயரை பார்த்ததும், முகத்தில் ஒரு புன்சிரிப்போடு அந்த அழைப்பை ஏற்றாள்.

“ம்ம் சொல்லு யமுனா..”

“எப்படியிருக்க நர்மதா..??”

“ம்ம் நல்லா இருக்கேன்… நீ எப்படியிருக்க..??”

“நானும் நல்லா தான் இருக்கேன்… அப்புறம் ரெண்டு நாள் லீவுக்குப் பிறகு சௌமியா இன்னைக்கு தான் ஸ்கூல்க்கு வந்தா… வந்தவ என்னென்னவோ சொல்றா..??”

“என்ன சொன்னா..??”

“நீ அந்த வீட்ல சந்தோஷமா இல்லையாம்… உன்னை அங்க யாரும் நல்லப்படியா நடத்தலையாம்… செல்வா உன்கிட்ட ரொம்ப ஹார்ஷா பேசறாராம்… அதுவும் அவ முன்னாடியே ரொம்ப திட்டினாராம்.. என்னால அவ சொல்றதை நம்பவே முடியல..” என்று யமுனா சொல்லிக் கொண்டிருக்க,

“அந்த சௌமியா என்னல்லாம் சொல்லியிருக்கா” என்று நர்மதா மனதில் யோசித்துக் கொண்டிருந்தாள்.

“அங்க என்ன நடந்துச்சு நர்மதா..?? அந்த சௌமியா உனக்கு இன்விடேஷன் வக்கனும் அட்ரஸ் சொல்லுன்னு என்கிட்ட கேட்டப்பவே எனக்கு அவ அங்க வர்றதுல விருப்பம் இல்ல… சாதரணமாவே நம்மள பார்த்து அவ பொறாமைப் படுவா.. இதுல நீ வசதியான வீட்டுக்கு  மருமகளா போகப் போறதுல அவளுக்கு இன்னும் பொறாமை… அவ உன்னோட கல்யாணத்துக்கு வரலன்னதுமே நான் சந்தோஷப்பட்டேன்… இப்போ உன்னோட வீட்டுக்கு அவ வரன்னு சொன்னதும், எதுக்கு சௌமியா நீ நேரா போய் இன்விடேஷன் வைக்கனும், நர்மதாவுக்கு போன்ல சொன்னாலே அவ கல்யாணத்துக்கு வந்துடுவா.. நீ சொல்லனும்னு கூட அவசியமில்லை.. நான் சொன்னாலே போதும்னு சொல்லிப் பார்த்தேன்… ஆனா அவ தான் கேக்கல…. எனக்கென்னமோ அவ தான் ஏதாவது பிரச்சனையை கிளப்பிவிட்டிருப்பாளோன்னு சந்தேகமா இருக்கு..” என்று யமுனா சரியாக யூகித்து சொன்னதும் நர்மதாவிற்கு சிரிப்பு வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.