(Reading time: 32 - 64 minutes)

நீ சொல்றது உண்மை தான் யமுனா… அந்த சௌமியாவால தான் பிரச்சனை..” என்று நடந்ததை சுருக்கமாக நர்மதா சொன்னாள்..

“நினைச்சேன் நர்மதா..  ஆமாம் அதனால உனக்கும் செல்வாக்கும் நடுவுல ஒன்னும் பெருசா பிரச்சனையில்லையே..??”

“ரிஷப் அப்படி பேசினதுல நான் கொஞ்சம் அப்சட் ஆகிட்டேன் யமுனா.. அப்புறம் அத்தை தான் இப்போ என்கிட்ட செல்வா அப்படி நடந்துக்கிட்டதுக்கு ரீஸன் சொன்னாங்க..” என்று கோமதி கூறியதையும் சுருக்கமாக கூறினாள்.

அதை முழுவதுமாக கேட்ட யமுனா.. “நர்மதா.. கோமதி அம்மா சொன்னதை தான் நானும் சொல்றேன்… செல்வா பேசினது தப்பு தான்…  இல்லைன்னு சொல்லல… ஆனா ஏதோ கோபத்துல, டென்ஷன்ல தான் அப்படி பேசியிருப்பாரு… அவங்க பெரிய லெவல்ல பிஸ்னஸ் பண்றவங்க… ஒரு சின்ன தப்பு நடந்தாலும் அதால அவங்க பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்… அப்படி ஏதாச்சும் நடந்துடுமோங்கிற பயத்துல அப்படி பேசியிருப்பாரு… செல்வா முன்னாடி உன்கிட்ட பேசினதெல்லாம் வச்சு நீ அதை பெருசா எடுத்துக்கிறன்னு தான் எனக்கு தோனுது நர்மதா… பழசையே மனசுல போட்டு குழப்பிக்காம சகஜமா இரு… நான் முன்னாடியே ஒருதடவை சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கா.. செல்வா அப்போ  உன்கிட்ட அப்படி பேசினதுக்கே ஏதாச்சும் ரீஸன் இருக்கும்னு சொன்னேனே… இப்போ கோமதியம்மா சொன்னதை வச்சு பார்க்கும்போது, செல்வா அப்போ ஏதோ டிஸ்டர்பா இருந்திருப்பாருன்னு தோனுது.. அதான் உன்கிட்ட அப்படி பேசியிருக்கார்..” என்று செல்வாவிற்கு சாதகமாக பேசினாள்.

ஆனால் நர்மதாவால் அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை… அவனுக்கு எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் என்னிடம் எப்படி அதுபோல பேசலாம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்..

“ம்ம் எனக்கு ஏதோ பிரச்சனைன்னு போன் பண்ணிட்டு.. இப்போ ரிஷப்க்கு சாதகமா பேசிக்கிட்டு இருக்க.. நல்ல ப்ரண்டுடி நீ..” என்று செல்லக் கோபம் காட்டினாள்…

“நான் செல்வாக்காக பேசல… உனக்காக தான் பேசறேன்… செல்வாவோட தான் உன்னால சந்தோஷமா வாழ முடியும்… அது எனக்கு தெரிஞ்சதால தான், உனக்கு அதை புரிய வைக்க முயற்சி செய்றேன்..” என்று யமுனா சொன்னதை கேட்டும் கேட்காதது போல் இருந்தாள் நர்மதா.. பிறகு சிறிது நேரம் வேறு சில விஷயங்களை தோழிகள் இருவரும் பேசிக் கொண்டனர்.

ரவு வீட்டிற்கு வர தாமதமாகும் என்று செல்வா கோமதிக்கு அலைபேசி மூலம் தெரிவித்திருந்தான்… நர்மதா இந்த வீட்டிற்கு வந்த இத்தனை நாட்களில் செல்வாவிற்கு அதிகப்படியான வேலை இருந்தாலும், 9 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவான்…. தன் அன்னையுடனே இரவு உணவையும் முடித்துவிடுவான்… ஆனால் இன்று தான் அவன் வர தாமதமாகியது…

“சாப்படெல்லாம் டைனிங் டேபிளில் எடுத்து வச்சுடும்மா… செல்வாவே போட்டு சாப்பிட்டுப்பான்… செல்வா, ராஜா ரெண்டுப்பேரும் லேட்டா வந்தா அவங்களே தான் போட்டு சாப்பிட்டுப்பாங்க..” என்று கோமதி சொன்னார்..

“இல்ல அத்தை… ரிஷப் வரவரைக்கும் நான் முழிச்சிருக்கேன்..” என்று நர்மதா சொன்னதும், தான் பேசியதை அவள் சரியாக புரிந்துக் கொண்டதை நினைத்து மகிழ்ச்சியடைந்தார்.

மிகவும் களைப்போடு வீட்டுக்கு வந்த செல்வாவிற்கு, நர்மதா அவனுக்காக காத்திருப்பதை பார்த்ததும் களைப்பெல்லாம் எங்கோ காணாமல் போனது போல் இருந்தது… இருந்தும் அவள் இவ்வளவு நேரம் விழித்திருப்பதை பார்த்ததும் கவலையாக,

“எதுக்கு மது… ஏன் எனக்காக இவ்ளோ நேரம் முழிச்சிருக்க… நீ தூங்க வேண்டியது தானே..” என்றுக் கேட்டான்… இரண்டு நாட்களாக அவள் இவனிடம் பேசாததால், இவனாக போய் அவளிடம் ஏடாகூடமாக பேசி, திரும்ப அவளைக் கோபப்படுத்தக் கூடாதே என்று அமைதியாக இருந்தவன், அவள் கோபமாக இருப்பதையும் மறந்து இப்போது பேசினான்… ஆனால் அதற்குள் அவள் கோபம் ஞாபகம் வந்து, அவள் பதில் சொல்வாளா?? என்று அவன் எதிர்பார்த்திருக்க..

“ஒருநாள் இவ்வளவு நேரம் முழிச்சிருப்பதால ஒன்னுமில்ல… நீங்க போய் ஃப்ரஷ் ஆகிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன் ..” என்று அவள் பதிலளித்ததும் அவன் முகம் பிரகாசமானது…

தன் அன்னை நர்மதாவிடம் பேசியிருப்பார்கள் என்பதை யூகித்தவன், தான் இன்னும் அவளிடம் மன்னிப்பு கேட்காத்தை உணர்ந்து,

“சாரி மது… ஐ அம் ரியலி சாரி… நான் மனசுல எதையும் நினைச்சிக்கிட்டு பேசல… ஏதோ டென்ஷன்ல அப்படி பேசிட்டேன்… உனக்கு அது எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு எனக்கு புரியுது மது… ஐ அம் வெரி சாரி..” என்று அவளிடம் மன்னிப்பை யாசித்தான்..

“பரவாயில்ல விடுங்க… அத்தை நீங்க கோபப்பட்டதுக்கான காரணத்தை என்கிட்ட சொன்னாங்க… முன்னமே எனக்கு இதெல்லாம் தெரிஞ்சிருந்தா.. நானும் கவனமா இருந்திருப்பேன்… ஆஃபிஸ்ல இருக்க டென்ஷனை வீட்ல காமிக்கிறது சகஜம் தான்… நானும் ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வந்ததும், என்னோட டென்ஷனை அம்மாக்கிட்டேயும், தம்பிக் கிட்டேயும் காமிச்சிருக்கேன்…  நாம கோபத்துல பேசறது கூட பரவாயில்ல… ஆனா அது மத்தவங்களை காயப்படுத்தக் கூடாது.. நீங்க என்கிட்ட பேசனுதுக்காகன்னு மட்டுமில்ல… பொதுவா யார்க்கிட்டேயும் இப்படி பேசாம இருந்தா நல்லது.. அதனால யோசிச்சுப் பேசுங்க..”

“புரியுது மது… நான் பேசினது தப்பு தான்… உன்னோட ப்ரண்ட் உன்கிட்ட அப்படி பேசினதுமே நான் என்ன பேசியிருக்கேன்னு நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்.. உன்கிட்ட மன்னிப்பு கேட்க துடிச்சேன்… ஆனா அது முடியல… நீ என்கிட்ட பேசாம இருந்தது கஷ்டமா இருந்துச்சு… நான் அப்படி பேசினதுக்கு, பனிஷ்மெண்ட்டா உன்னோட உப்பு காஃபிய கொடுத்திருந்தா கூட நான் குடிச்சிருப்பேன்… ஆனா நீ பேசாம இருந்ததை தான் என்னால தாங்கிக்க முடியல..” என்று அவன் சொன்னதும், அவனை அவள் ஆச்சர்யமாக பார்த்தாள்..

உண்மையிலேயே அவன் அப்படி பேசியதற்கு வருத்தப்படுகிறானா..!! என்று அவள் ஆச்சர்யப்பட்டாள்… உப்பு காஃபிய கூட குடிப்பானாமே என்று உள்ளுக்குள் மகிழ்ந்தவள்,

“இன்னொரு முறை இப்படி நடந்தா… கண்டிப்பா மசாலா காஃபி தான்…  இப்போ சாப்பிடவாங்க..” என்று மனதின் மகிழ்ச்சியை மறைத்து அவனிடம் பேசினாள்.

“கண்டிப்பா இப்படி இனி நான் பேசமாட்டேன் மது” என்று அவனும் உறுதி அளித்தான். இருந்தும் திரும்ப இவள் மனதை வருத்தப்படுத்துவது போல் அவன் நடந்துக் கொள்வானோ என்று ஒருப்பக்கம் நர்மதாவிற்கு பயமாகத் தான் இருந்தது..  ஏனோ அவன் அப்படி பேசினால் அதை நர்மதாவால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை..

ஆனால் செல்வா ஒரு போதும் இனி அந்த தவறை செய்வதில்லை என்பதில் அவன் உறுதியாக இருந்தான்… நர்மதா மேல் அளவில்லா காதல் இருந்தும், எவ்வாறு இப்படி பேசினோம் என்று அவனே அவன் மீது கோபமாக இருந்தான்… இனி இப்படி ஏதாவது பேசி, நர்மதா இவனை விட்டு விலகி செல்வதை அவன் விரும்பவில்லை… அதனால் இனி கவனமாக நடக்க வேண்டுமென்று நினைத்திருந்தான்…

நர்மதா மீது இருக்கும் காதலால் நர்மதாவிடம் செல்வா அவ்வாறு நடக்கப்போவதில்லை… ஆனால் பணத்தை தான் எல்லோரும் பெரிதாக நினைக்கின்றனர் என்ற அவனின் எண்ணம் மனதை விட்டு மாறாத போது, அந்த எண்ணம் திரும்ப யாரை காயப்படுத்தி பார்க்க இருக்கிறதோ..?? அதனால் யார் கோபத்திற்கு அவன் ஆளாக காத்திருக்கிறானோ..?? அவர்கள் நர்மதாவிற்கு வேண்டியவர்களாக இருக்கும்பட்சத்தில் நர்மதாவும் தான் அவனிடம் கோபப்படாமல் இருப்பாளா??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.