(Reading time: 32 - 64 minutes)

ன்னோட பிள்ளைங்களையும் அப்படி வளர்க்கனும்னு தான் உங்க மாமா ஆசைப்பட்டாரு…. ராஜாவும் செல்வாவும் ஸ்கூலுக்கு போகும்போது, வீட்ல 2,3 கார் இருந்தும், ஸ்கூல் பஸ்ல தான் அவங்களை அனுப்புவாரு… பணக்காரங்க படிக்கிற ஸ்கூல்ல தான் எங்க பிள்ளைங்க படிக்கனும்னு அவர் நினைச்சதே இல்ல… பொதுவா நடுத்தரக் குடும்பத்து பிள்ளைங்க படிக்கிற ஸ்கூல், காலேஜ்ல தான் சேர்த்து படிக்க வச்சாரு… ஸ்கூல் பஸ்க்கு பிறகு, கார் இருந்தும் அவங்களுக்கு பைக் தான் வாங்கிக் கொடுத்திருக்காரு… எங்கக்கிட்ட வேலைப்பார்த்தவங்கக்கிட்ட மரியாதையா பழக தான் கத்துக் கொடுத்திருக்காரு… ஏழை, பணக்காரங்கன்னு எங்க பிள்ளைங்க வித்தியாசம் பார்க்காம எல்லோர்க்கிட்டேயும் நல்லா பழகனும்னு தான் அவர் எப்பவும் நினைப்பார்…. அப்படித்தான் ராஜாவும் செல்வாவும் வளர்ந்தாங்க…

ஆனா சில சூழ்நிலைகள் நம்மல மாத்திடும் இல்லையா..?? ரொம்ப ஏழையா இருக்கவனுக்கும், நிறைய பணம் வச்சிருக்கவனுக்கும் பணத்தோட அருமை தெரியாதுன்னு சொல்வாங்க… தினசரி தேவைக்கே திண்டாடுறவனுக்கு அதிகப்படி பணம் கிடைச்சா, அதுல தன்னோட தேவையை தீர்த்துக்க பார்ப்பான்.. சேர்த்து வைக்கனும்னு நினைக்க மாட்டான்… அதே போல பணத்துல புரள்றவனுக்கும், எல்லா தேவைகளும் நிறைவேத்திக்க பணம் இருக்கறதால அதோட அருமை புரியாது… ஆனா நடுத்தரக் குடும்பங்களுக்கு பணத்தோட அவசியம் புரியும்… அதே போல வசதியா வாழ்ந்து, திடிர்னு அடிமட்டத்துக்கு வர்றவங்களுக்கும் பணத்தோட தேவை என்னன்னு புரிய ஆரம்பிக்கும்…

எங்களுக்கும் கிட்டத்தட்ட அப்படி ஒரு நிலைமை ஒரு கட்டத்துல வந்துச்சு… அப்போ உங்க மாமா உயிரோட இல்ல… அப்போ ராஜா தான் எங்க தொழிலை கவனிச்சுக்கிட்டு இருந்தான்… அந்த நேரம் சில சதி வேலைகளால எங்க தொழிலில் நஷ்டம்… எங்கக்கிட்ட வேலை செஞ்சுக்கிட்டே முக்கியமான ரகசியங்களை போட்டி கம்பெனிக்கு கொடுத்துட்டாங்க… அதனால ஒரு பெரிய நஷ்டத்தை அப்போது சந்திச்சோம்… வேற சில பிரச்சனைகளும் அப்போ எங்களுக்கு இருந்ததால, கிட்டத்தட்ட நடுத்தெருவுக்கு வந்த நிலைமை தான்…. அந்த நேரம் நாங்க திரும்ப மீண்டு வரமாட்டோம்னே எல்லோரும் நினைச்சுட்டாங்க… பண உதவி செய்ய எல்லோரும் யோசிச்சாங்க… அப்போ அந்த நிலைமையை சமாளிக்க என்னோட பசங்க எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு எனக்கு தான் தெரியும்… அதுல இருந்து மீண்டு, இப்போ முன்னை விடவே நல்ல நிலைமையில இருக்கோம்… ஆனா அந்த நேரம் இருந்த சூழ்நிலை என்னோட பிள்ளைங்கக்கிட்ட வேற சில மனமாற்றத்தை கொண்டு வந்துச்சு…

அதுவும் அப்போ செல்வா காலேஜ் தான் படிச்சிட்டு இருந்தான்… அந்த வயசுக்கு மீறிய அந்த பிரச்சனையை அவனும் சேர்ந்து சமாளிக்க வேண்டியதா போச்சு, அந்த நேரம் அவன்  பணத்துக்கு மட்டும் தான் இந்த உலகத்துல மதிப்பு கொடுக்கிறாங்க… அது இல்லன்னா நமக்கு மதிப்பு கிடைக்காதுன்னு ஒரு மனநிலைக்கு வந்துட்டான்… பணம் இருந்தா தான் நல்லா பழகுவாங்க… இல்லன்னா நம்மள துச்சமா நினைக்கிறாங்கன்னு ஒரு முடிவுக்கே வந்துட்டான்ம்மா..” கோமதி சொல்லிக் கொண்டிருந்த போது,

“நான் பணக்காரன்னு தானே என்னை காதலிக்கிற… நீ நினைக்கிற மாதிரி நான் இப்போ பணக்காரன் இல்ல.. வேற ஏதாவது பணக்காரனா பார்த்து லவ் பண்ணு..” அன்று கல்லூரியில் செல்வா பேசியது நர்மதா காதில் ஒலித்தது..

“அந்த நேரம் அவனோட பக்குவப்படாத வயசும், அந்த சூழ்நிலையும் இப்படி ஒரு மனநிலையில் அவன் இருந்தான்… ஆனா இப்போ காலம் அவனை கொஞ்சம் கொஞ்சமா மாத்திடுச்சு… இருந்தும் முழுசா அவன் மாறல… திரும்பவும் எந்த சூழ்நிலையிலும் அப்படி ஒரு நிலைமைக்கு நாங்க போயிடக் கூடாதுங்கிறதுல அவன் எப்போதும் கவனமா இருப்பான்…

ராஜாவும் அந்த நேரம் ரொம்பவே தடுமாறித் தான் போனான்… ஆனா அவனோட வயசும், அவன் வேலையை  கையாள்ற விதமும், அவனுக்குள்ள பக்குவத்தை வளர்த்திருக்கு.. எல்லாத்தையும் நிதானத்தோட தான் அவன் செய்வான்… அதே சமயம் அதை சரியாகவும் செய்வான்.. செல்வா அப்படியில்ல…  செல்வாக்கும் ராஜாக்கும் 5 வயசு வித்தியாசம்… அவனுக்கு வயசு இப்போ 26 தான் இல்லையா..?? எல்லாத்தைலேயும் ஒரு வேகம், பயம், ஜாக்கிரதை உணர்வு எல்லாமே அவன்கிட்ட இருக்கும்…

தூரமா இருந்து பார்க்கிறவங்களுக்கு செல்வா தான் எங்கக் கூட நெருக்கமா இருக்க மாதிரியும், ராஜா வேலை வேலைன்னு எஙகக் கூட நேரத்தை செலவளிக்காத மாதிரியும் தோனும்… ராஜா எப்போதும் தனிமையை விரும்புவான்… ஆனா வேலை நேரத்துல மட்டும் தான் வேலையை பார்ப்பான்… மத்த நேரம் எதுக்காக ஒதுக்கிறானோ, அதுல தான் கவனத்தை செலுத்துவான்… ஆனா செல்வா அப்படிக்கிடையாது, எங்கக் கூட நேரத்தை செலவளிச்சாலும், அவன் மனசு வேலையை பத்தியே தான் யோசிச்சுக்கிட்டு இருக்கும்… இப்போக் கூட பாரு, ராஜா நான் எல்லாத்தையும் குன்னூர்ல இருந்து பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டுப் போயிருக்கான்.. அப்படி அவன் பார்க்கவும் செய்வான்… ஆனா அண்ணன் ஊர்ல இல்ல, அதனால நாம தான் எல்லாத்தையும் பார்த்துக்கனும்னு ஒரு நினைப்பு செல்வாவுக்கு உண்டு… அதான் வீட்ல கூட இருக்கறதில்ல…  எப்பவும் ஆஃபிஸே கெதின்னு இருக்கான்..

என்ன.. அத்தை இன்னைக்கு புள்ளைங்க புகழ ஓவரா பாட்றாங்களேன்னு தோனுதாம்மா..” கோமதி கேட்டதற்கு, இல்லை என்பது போல் நர்மதா தலையசைத்தாள்.

“இதை சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கும்மா.. எப்போ கம்பெனி நஷ்டத்துக்கு சில சதி வேலைகள் தான் காரணம்னு தெரிஞ்சுதோ… அப்பவே முக்கியமான, ரகசியமான பைல்ஸ் எல்லாம் செல்வா வீட்ல வைக்க ஆரம்பிச்சிட்டான்… ராஜாவுக்கும் அப்போ அது சரின்னு பட்டுது… ஆனா ஒருக்கட்டத்துக்கு மேல ராஜா இப்படி செய்ய அவசியமில்லன்னு சொல்லிட்டான்… ஆனா செல்வா கேக்கமாட்டான்… ஆஃபிஸ்ல பொதுவா அவன் யாரையும் நம்பமாட்டான்… எல்லாமே வீட்ல இருக்கறது தான் பாதுகாப்புன்னு சொல்லுவான்.. ராஜாவும் இவனோட இஷ்டப்படியே விட்டுட்டான்… நான் கூட செல்வா ஏன்ப்பா இப்படி இருக்கான்னு ராஜாக்கிட்ட கேட்டதுக்கு, விடுங்கம்மா போக போக அவன் சரியாயிடுவான்னு அவன் என்னை சமாதானப்படுத்துவான்…

வீட்ல அவனோட ரூம் தான் பாதுகாப்புன்னு முக்கியமானதையெல்லாம் அங்க வைச்சிருப்பான்… அனாவசியமா யாரும் வீட்டுக்கு வர்றத அவன் விரும்பமாட்டான்… நம்ம கம்பெனியோட ஆடிட்டர் மனைவி அப்புறம் வக்கீலோட மனைவி இவங்களோட மட்டும் தான் நாங்க நல்லா பேசி பழகுவோம்… புதுசா யாரோடவும் பழகாதீங்கன்னு சொல்லுவான்… அதுக்காகவே எதுன்னாலும் எங்களை தனியா எங்கேயும் அனுப்பமாட்டான்... வீட்டு வேலையாளுங்கக் கூட செல்வா வீட்ல இருக்கும்போது தான் அவனோட ரூமை சுத்தம் செய்வாங்க… அதுவும் அந்த ஃபைல்ஸ் வச்சிருக்க ரூமை அவனே சுத்தம் செஞ்சுக்குவான்… நானும், விஜியும் கூட அவன் இல்லாதப்ப அவனோட ரூமுக்கு போகமாட்டோம்… எங்களை வர வேண்டாம்னு அவன் சொன்னதில்ல… இருந்தும் தெரியாம நாங்க ஏதும் தப்பு செஞ்சிடக் கூடாதேன்னு கவனமா இருப்போம்… இப்ப சொல்லு அப்படி கவனமா எல்லா செய்றவன், அன்னைக்கு அந்த ரூம்ல புதுசா ஒருத்தரை பார்த்தா என்ன செய்வான்…??”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.