19. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி
புகழ் சென்னைக்கு திரும்பி வந்ததில் நால்வருக்கு பெருமகிழ்ச்சி. முதல் ரெண்டு பேரு நம்ம யாழினியும் குமரனும்தான். அடுத்தது ஆயிஷாவின் பெற்றோர். சஹீபாவிடம் தங்கள் மகளின் புகைப்படங்களைக் காட்டி கண் கலங்கி அவர்கள் நின்ற காட்சியை சஹீபாவால் மறக்கவே இயலாது.
தன்னை மகளாக ஏற்றது மட்டுமின்றி அதற்காக பெற்ற மகளின் புகைப்படங்களை கூட மறைத்துவைத்து தன் மீது பாசம் பொழிந்தார்களே!அவர்களின் அன்பு எத்தனை மகோன்னதமானது? தான் அவர்களின் சொந்த மகள் இல்லை என்ற எண்ணம் கொஞ்சம் இல்லாமல் பேணிக் காத்து தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து செய்தவர்கள் நிச்சயம் இறைவனுக்கு சமமானவர்கள். கடந்த காலத்தை மறந்து தான் யாரென்றே அறந்திடாத பெண்ணொருத்தி சமூகத்தில் பாதுகாப்பாக வாழ்ந்திட முடியுமா? நிச்சயம் கடினமே! அதை உணர்ந்தவள் கடவுளுக்கும் தன் நன்றியைச் சொன்னாள்.
புகழின் பேச்சுக்கு அரை மனதாக சம்மதித்து தான் அவள் அங்கு வந்தாள். ஆனால், தங்களை அவள் ஏற்று கொள்வாளா என்ற பதட்டத்திலும் ஏக்கத்திலும் தவித்த அவ்விரு ஜீவன்களின் அன்பினை உணர்ந்தப்பின், எந்தவொரு வற்புறுத்தலும் இல்லாமலேயே அவள் ஆயிஷாவாக இருக்க சம்மதித்தாள். அதை புகழிடமும் சொன்னாள்.
“ நீ சொன்னதுக்காகத்தான் வந்தேன் புகழ். ஆனா, இந்த அப்பா அம்மாவின் கண்ணீரை பார்த்ததும் மனசுக்குள்ள பொத்தி வைச்ச ஏதோ ஒன்னு உடைஞ்சே போச்சு..அன்னைக்கு நான் எனக்கு சம்பந்தம் இல்லாத இடத்தில் மாட்டிக்கிட்டேனோனு பயத்துல ஓடி வந்தேன். ஒருவேளை கொஞ்சம் நிதானமா அவங்களுடைய வார்த்தைகளை கேட்டிருக்கனும்னு இப்போ தோனுது.. நீதான் பாவம்ல.. என்னையும் சமாளிச்சு,அவங்களுக்கும் தைரியம் சொல்லி.. பார்க்க கொஞ்சம் ப்ளே பாய் மாதிரி இருந்தாலும்..”என்று பேசிக் கொண்டிருந்தவளை,
“என்ன ப்ளே பாயா?” என்று அதிர்ச்சியுடன் குறுக்கிட்டான் புகழ்.
“ஐ மீன்.. விளையாட்டுப் பிள்ளை..”
“ஹும்கும்.. கொஞ்சம் நேரத்துல நான் பயந்தே போயிட்டேன்.. நீ தமிழ்லயே பேசு தாயீ.. இங்க்லிஷ் ரொம்ப வில்லங்கமா இருக்கு..”என்று அவன் போலியாய் பயப்படவும் வாய்விட்டு சிரித்தாள் சஹீபா.
“ஹா ஹா.. லூசு.. நீ தீராத விளையாட்டு பிள்ளைனு நினைச்சியாக்கும்.. அப்படியெல்லாம் உன்ன பார்த்து சொல்லுவேனா? என்னத்தான் விளையாட்டு பையன் மாதிரி இருந்தாலும், உனக்குன்னு கொஞ்சம் பொறுப்பான குணமும் இருக்குனு சொல்ல வந்தேன்.. இனி நான் இங்க ஆயிஷாவாகவே இருக்கேன் புகழ்…இது இந்த அப்பாஅம்மாவுக்காக மட்டுமில்ல.. உனக்காகவும்தான்”என்றாள் கண்களில் நேசத்தை தேக்கி வைத்து.
“ஹையா.. அப்போ நீ என் மேல ஐ லவ் யூவா?” துள்ளலாய் அவன் கேட்க,
“ச்ச..ச்ச..நீ எனக்கு முறைப்பையன் மாதிரி..அவ்வளவுதான்..”என்றாள் ஆயிஷா. அவளின் அலட்சியமான தொனியில் கடுப்பாகி புகழ் முறைக்கவும்,
“பார்த்தியா சொன்னேன்ல? நீ முறைக்கிற முறைப்பையன்தான்!”என்றாள். அதன்பின் ஆயிஷா அந்த குடும்பத்தில் ஒருத்தியாய் இணைந்து கொண்டாள். அவளுக்கு மேற்கொண்டு படிப்பதில் நாட்டம் இருப்பதை உணர்ந்த அவளின் வளர்ப்பு பெற்றோரும் அவளுக்கு பிடித்தபடியே அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தந்தனர்.
இரண்டு வாரங்கள் கடந்திருந்த நிலையில், நண்பனின் காதலி என்ற முறையில், காதலனின் தோழி என்ற முறையில் யாழினிக்கும் ஆயிஷாவுக்கும் இடையே மெல்லிய நட்பொன்று உருவாகியிருந்தது. கதைகளில் சொல்வது போலவோ அல்லது படங்களில் காட்டுவது போலவே உடனே அவர்கள் நெருக்கமாகிவிடவில்லை. பரஸ்பர அறிமுகங்களுக்குப் பின் இப்போதுதான் கொஞ்சம் மனம் விட்டு பேசும் நிலையில் இருந்தனர் இருவரும்.
“உனக்கு ஏதாச்சும் கிஃப்டு தரனும்னு எனக்கு அடிக்கடி தோணுது புகழ்..ஏதாச்சும் கேளேன்”
“ஒன்னு இருக்கு ஆயிஷா..”
“சொல்லு சொல்லு..”
“இந்த யாழினி, தமிழைப் பத்தி இப்போதெல்லாம் பேசுறதே இல்லை.. நானாக பேசினால் கொஞ்சம் பேசிட்டு பேச்சை மாத்துற.. தமிழ்கிட்ட போட்டு வாங்கலாம்னு பார்த்தா, நானும் யாழினியும் நேத்து கூட பேசிக்கிட்டோமேனு சொல்லிக்கிற ரேஞ்சுல சந்தோஷமா பேசுறான் அவன்.. அவ அவனைப் பத்தி பேசினாலே வலிக்கிதுன்னு சொல்ல, இவனோ விடிய விடிய கூட யாழினி புராணம் கேட்க தயார்னு சொல்லுற மாதிரி இருக்கான்..என்னத்தான் நடக்குதுன்னு தெரியனும்.. நீ கொஞ்சம் யாழினிட்ட பேசிப் பாரேன்.. இது நடந்துச்சுனா, இதுவே நீ எனக்கு கொடுக்கற பெஸ்டு கிஃப்ட்..”என்றான் அவன்..அன்று புகழுடன் பேசியதை நினைவு கூர்ந்த ஆயிஷா, தன்னெதிரே அமர்ந்திருந்த யாழினியை யோசனையாய் பார்த்தாள்.
“யாழு..”
“சொல்லு ஆயிஷா..”
“நீ..”
“நான்..?”
“நீ..”
“அட சொல்லும்மா”