(Reading time: 26 - 51 minutes)

28. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

ந்தியா வீட்டிற்குள் நுழைந்ததும் அன்போடு வரவேற்றனர் கார்த்திக்கின் சுலோ பாட்டியும், சின்னா தாத்தாவும். அவளிடம் வந்த மது,

“நீயும் என்னை மறந்துட்ட சந்தியா! என் கூட பேசாத” என்று கோபித்துக் கொண்டு செல்ல, அவள் பின்னே சென்ற சந்தியா,

“பேச மாட்டேன்னு மெனக்கெட்டு வந்து சொல்ற பாரு… இதை கேக்க தான்  என் வேலை வெட்டியெல்லாம் போட்டுட்டு ஓடி வந்தேன்”, சிரித்துக் கொண்டே பேச்சு கொடுத்தாள்.

“நான் தியேட்டர்ல காதி கூட பேசுனதை வைத்து என்னை தப்பா நினைத்துட்ட தான? காதி உன்னை ஏமாத்தணும் ப்ளான் போட்டதை நான் சொல்லலைன்னு  கோபம். அதானே என்கூட பேசவே இல்லை” என்று குற்ற உணர்ச்சியில் வருந்தினாள் மது.

“மண்டு மது! உன்னைப் போய் தப்பா நினைப்பேனா? நீ சேலையை பிடிச்சுகிட்டு தூங்குற அப்பாவி குழந்தைன்னு தெரியாதா? ” என சீண்ட,

மது ரோஷமாய், “ஹே..நான் பிக் கேர்ள்! “ என்றாள்.

திரையரங்கில் தனக்கும் கார்த்திக்கிற்கும் நடந்த பேச்சு வார்த்தையை ஒன்று விடாமல் சந்தியாவிடம் சொன்ன மது, “உனக்கு சப்போர்ட் பண்ணியிருக்க கூடாதாம். அதிலிருந்து என்னை வேணும்னே அவாய்ட் பண்ண ஆரம்பித்து விட்டான். இவன் தான் அப்படின்னா வீட்டில் எல்லாருமே! மீராக்கா கூட. ப்ச்…. நீயும் ஊரில் இல்லை. தனியா கஷ்டமா இருந்தது தெரியுமா? “ என வருந்த,

“இந்த குழந்தையை அழவிட்டு, சக்கு, நிருவெல்லாம் எங்க போனாங்க?”, கேட்டாள் சந்தியா.

“அழுகை வந்தது என்னவோ உண்மை! ஆனா, நிரு என்னை அழவே விடலை சந்து. ஹி மேட் மை டே...எவ்ரிடே! “ முகம் மலர சொன்னாள் மது.

“அப்போ பேசாம நிருவை கல்யாணம் பண்ணிக்கோ!” என்று  கண்ணடித்தாள் சந்தியா.

“நிரு ஜீராவை சின்சியரா  லவ் பண்றார்“, சோர்ந்த குரலில் சொன்னாள் மது.

“ஜீரா எல்லாம் ஜூஜூபி. கலைச்சு விட்டுடுவோம்” என்றாள் சந்தியா.

“அய்யோ அது தப்பு. நிரு பாவம்!“ அதிர்ந்தாள் மது..

“சரி அப்போ...உன்னை எட்டு வருஷமா லவ் பண்றவனை கல்யாணம் பண்ணிக்கோ”, என்றாள் சந்தியா சாவகாசமாக.

“கண்டவனையும் கல்யாணம் செய்துக்க என்னால முடியாது ” கோபத்தில் வெடித்தாள் மது. “அவர் நிரு மாதிரி உன்னை அறிந்து, புரிந்து, தெரிந்து, தெளிந்தவர்….”, விளம்பரம் செய்தாள் சந்தியா...

“நிரு மாதிரின்னா... நிரு மாதிரி என்ன செய்தான் எனக்காக? நிருவை யார் கூடவும் கம்பேர் பண்ணாத சந்து! ஐ டோன்ட் லைக் இட் அட் ஆல்”, பட படவென பொரிந்து விழுந்தாள் மது. நிரஞ்சனின் மீது அவளுக்கிருந்த அன்பை கண்டு கொண்டாள் சந்தியா.

“என்னே பத்தி பேசுது?” கேட்டுக் கொண்டே நிரு அவர்களின் பேச்சில் இணைய,

“உங்களுக்கு ஆயுசு நூறு” என்றாள் சந்தியா.

“என்ன?”, நிரு

“ஜீரா உங்களுக்கு நோ சொன்னா… எங்க மதுக்கு எஸ் சொல்லுவீங்களா?”, சந்தியா.

“ஜீரா, மது ரண்டுக்கும் நான் எஸ் சொல்லுது” என்றான் நிரு சமாளிப்பாக.

அதே நேரம் கார்த்திக்கை தேடிக் கொண்டிருந்த சிவா, நிரஞ்சனை பார்த்ததும்,

“கொல்காப்பியா கார்த்திக் எங்க?” என கேட்க,

“கொல்காப்பியா?”, ஒன்றாக கேட்டனர் மதுவும், சந்தியாவும்.

“பின்ன தமிழை கொலை பண்றானே… அதான்  கொல்காப்பியன்..எங்க என் நண்பன்?”, நிரஞ்சனிடம் மீண்டும் கேட்டான் சிவா.

“கார்த்திக் மடில வேலே பாக்குது”, என்றான்

“மடில  வேலையா? ஒரு வேளை பாட்டு பாடி பால் கறக்கிறானோ? அமெரிக்காவில் இருந்து வந்து எங்க ஊரு மாட்டுக்காரனாகிட்டானா?

செண்பகமே செண்பகமே.. தென்பொதிகை சந்தனமே...,

என சிவா பாட, நிருவிற்கு ஆர்வக்கோளாறு அதிகமாகி,

“நைஸ் சாங். நான் பாடுது…ஷேன்  பேகமே...ஷேன்  பேகமே”, பாடிக் காட்டினான்.

“பேகமா? மதக் கலவரத்தை உண்டு பண்ணுவ போலயே! முதல்ல நான் ஓடுது… அப்புறமா நீ பாடுது” என்று சிவா தப்பிக்க முயன்றான்.

அவனை வழி மறைத்த சந்தியா, “என்ன ப்ரோ? எல்லாரோடவும் ஜாலியா இருக்கிறதை விட்டுட்டு வீக்கென்ட்லயும் வேலை வேலைன்னு பிஸியா இருந்தா நல்லாவா இருக்கு!” எரிச்சலாக சொன்னாள்

“அண்ணனை பத்தி தப்பா நினைச்சிட்டியேம்மா….நினைச்சிட்டியே...அந்த தப்பை எந்த நாளும் செய்யவே மாட்டேன்ம்மா!” என செவாலியர் சிவாஜி கணேசன் பாணியில் சொன்னான்...

“டேய் அண்ணா! நான் சொன்னது உனக்கில்லை. வேண்டியவங்ககிட்ட சொல்லிடு”, மிரட்டுவது போல சொல்லி விட்டு நகன்றவளுக்கு மனம் என்னவோ தீராத தேடலில்…. தன்னை போல தீராத தேடலில் இருந்த அலைகளை ஜன்னல் வழியே கண்டதும் சற்று இளைப்பாறியது….எந்த அறையில் இருந்து பார்த்தாலும்  கடல் தெரியும் வண்ணம் வடிவமைக்கப் பட்டிருந்தது அந்த வீடு. கார்த்திக் அவளைப்பற்றி பேசிய வார்த்தைகள் மதுவின் மூலம் தெளிவாக தெரிந்த பின்னும் முன்பு போல ஆத்திரம் வரவில்லை… முதன் முதலில் தெரிந்து கொள்ளும் போது தான் அதிர்ச்சியாய் இருக்கும்... மீண்டும் அதை எதிர்கொள்ளும் பொழுது கவலை அளித்தாலும், “இது தானா..” என பக்குவப்பட்டு தேறிவிடும் மனது.

தன்ராஜ் கோபத்தில் வார்த்தைகளை அளவில்லாமல் விடுபவர் தான்.

“உங்கப்பன் வீட்டு சொத்தா?”

“உங்கப்பனை மாதிரி ஒண்ணுமே வாங்கிப் போடாமலா இருக்கேன்… நல்லா சாப்பிட வேண்டியது தான?”

என மற்றவர் முன்னிலையில் அதுவும் புகுந்த வீட்டார் முன் இதை தன்ராஜ் சொல்லும் பொழுது லக்ஷ்மி உடைந்து விடுவார்…சந்தியா அம்மாவை திட்டுவாள்…

”ஏம்மா உங்களுக்கு சுயமரியாதையே கிடையாதா..உங்களை மட்டம் தட்டி பேசுறாங்க. உரிமையில் உங்களை மட்டும் தான் திட்டலாம்...ஆனா, நம்ம தாத்தாவை  திட்டலாமா?.. நீங்க சும்மா இருக்கீங்க” என கேட்க,

“உங்கப்பா வார்த்தை வாயில்ல தான் இருக்கும்..மனசுல இருக்காது….எங்க அண்ணன்ங்க சரியா பாக்கலைன்னு தாத்தாவை கடைசி காலத்துல நம்ம வீட்டில வச்சு பாத்தவருடி உங்கப்பா. கல்யாணம் ஆன நாள்ல இருந்து தனக்குன்னு அரையணா கூட வைத்தது கிடையாது. வெயில்லயும் பனிலையும் கிடந்து சம்பாதிச்சு வாங்கின இந்த வீட்டை கூட என்  பேரில் கிரயம் பண்ணார்.  ப்ச்…சொத்து சுகத்துக்காக பார்க்கலை...என்ன தான் கோபத்தில் வெடிச்சாலும் அடுத்த நிமிஷமே பச்ச பிள்ளை மாதிரி லக்ஷ்மின்னு தேடி வர்றப்போ மனசு இளகி போகுது… என்னை விட்டா அவரும் எங்க போவாரு” என்பார் லக்ஷ்மி.

“ம்ம்...இப்படியே செல்லம் குடுத்து கெடுங்க. நான் மட்டும் உங்க இடத்தில இருந்தேன் பேசுன வாய்க்கு நாலு நாள் சாப்பாடே போடாம காயப் போட்டிருப்பேன்.. ”,  என்பாள்  பதிலுக்கு.

பழைய நினைவுகளை அசை போட்ட வண்ணம், “அம்மா செய்வது எதனால்...சகித்து போறதா...அளவில்லாத காதலா? ஏமாளித்தனமா?” யோசித்தவளுக்கு கார்த்திக்கின் வார்த்தைகள் அவளை வருத்தியதை விட அவன் உணர்ச்சிகளை புதைத்து ஒதுக்கம் காட்டுவது அதிகமாக வருத்தியது.

“சாப்பிட வாம்மா” சுலோ பாட்டியின் கனிவான அழைப்பில் சிந்தை  கலைந்து நட்பாக புன்னகைத்தாள்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.