(Reading time: 32 - 63 minutes)

ஜோஷ்வாவின் அருகில் வந்து அவன் தந்தை வந்தமர்ந்ததும் அவருக்கு தோசையை பறிமாறியவாறே “இன்னும் 7 நாள் தான் கல்யாணத்துக்கு இருக்கு. அப்பாவும் பிள்ளையும் பிசினஸ் வேலையெல்லாம் மாற்றி வச்சுட்டு கல்யாண வேலையையும் பாருங்க”

“ என்ன கிரேஸி அதான் எல்லாமே பார்த்து பார்த்து ஆர்டர் கொடுத்தாச்சு. இன்னும் என்ன பாக்கி இருக்கு..” என்று ஜோஷ்வாவின் தந்தை ஜேக்கப் கேட்க

“ஆங்க்..இன்னும் என்ன பாக்கி இருக்கா. உங்க அருமை புத்திரன் தான் கல்யாணனும்னு நினப்பே இல்லாம தினமும் ஆபிஸ் வந்திட்டிருக்கான்.நாளையிலிருந்து அவன் வீட்டிலிருக்கட்டும்.நீங்க சொல்லுங்க.:

“அம்மா நான் ஒன் வீக் எப்படி வீட்டுல சும்மா இருக்குறது….நான் என்ன பொண்ணா..? அப்படி எல்லாம் சும்மா இருக்க முடியாது.”

“ஜோஷ்வா எனக்கு கிடைகாத சந்தர்ப்பம் எல்லாம் உனக்கு கிடைக்குது..கல்யாணம் முடிஞச பிறகு தொந்திரவு இல்லாம சும்மா எல்லாம் வீட்டுல இருக்க முடியாதப்பா..யான் பெற்ற இன்பம் எல்லாம் உனக்கும் வேண்டாம்பா..அதனால் பேச்சுலரா,..தனியா…நிம்மதியா..இருக்குற சந்தர்ப்பத்த நழுவ விட்டுடாத.கெட்டியா பிடிச்சு என்ஜாய் பண்ணிக்க “ என்று வசனம் போல ஜோஷ்வாவின் தந்தை சொல்ல..அவருடைய மனைவி கையில் கரண்டியுடன் அவதாரம் எடுத்து முறைக்க.. இவர் அவசரமாக

“ஹேய் புஜ்ஜுகுட்டி நான் எதுவுமே மீன் பண்ணி சொல்லலடா…யான் பெற்ற இன்பம்னு தானே சொன்னேன்..துன்பம்னு சொல்லலல…என்று இழுக்க…

“ஆங்க் இந்த புஜ்ஜூ பஜ்ஜி எல்லாம் எங்கிட்ட வேண்டாம். எண்ணையில போட்டு தாளிச்சிடுவேன்.ஒழுங்கா நல்ல அப்பாவா நம்ம பையனை கல்யாணக்களை உள்ள பையனா மாற்ற பாருங்க..” அம்மாவின் குரல் எகிறி சொன்னாலும் முகம் சிரித்துக்கொண்டே தான் இருந்தது.

“இது தான் என் அப்பா அம்மா! எவ்வளவு அன்பும் ஜாலியுமாய் இத்தனை வருஷம் ஈருடல் ஓருயிரா வாழ்ந்திட்டிருக்காங்க. நானும் என் அப்பா மாதிரி இருக்க முடியுமா..?அதெப்படி..என் கல்யாணம் தான் நிற்க போகுதே..”என்று மனதில் மறுகியபடியே..” ஒக்கேப்பா..ஓக்கேம்மா நான் கொஞ்சம் நடந்திட்டு தூங்கப்போறேன். குட் நைட்” என்று சொல்லிவிட்டு எழுந்து வாஷ்பேசனை நோக்கி போனான்….

நாட்களை நாள்காட்டி நகர்த்த…மணித்துளிகளை கடிகாரம் கடத்த…என்ன நடக்குமோ..என் நிலை என்னவோ…எது வந்தாலும் சரியே என்று எதிர் நீச்சலில்லா எதிர் நோக்கோடு ஏழு நாட்கள் ஏழு யுகமாய் கழிந்து இதோ இன்று திருமண நாள்…!

இவனுக்குள் இப்போதும் மனதுக்குள் பூகம்பம் தான்! “ஒரு வேளை சர்ச்ல ஃபாதர் மனசம்மதம் கேட்கும் போது சம்மதம் இல்லைனு சொல்வாளோ..?” என்று ஊர்கிறது இவனது மனப்பேருந்து!.

ஆலயத்தில் ஆராதனையும் பிரார்த்தனையும் தொடர்ந்து குருவானவர் மனசம்மதம் கேட்கையில் இவனது இருதயத்துக்குள் இடி முழக்கங்கள்! அக்கணம் அவள் “சம்மதம்” என்று சொல்ல இவனுக்குள் முழக்கங்கள் மாறி ஆச்சர்ய அலை மின்னல்கள்…!ஆனாலும் இவன் அவள் முகம் பார்க்கவில்லை. ஒருவழியாய் திருமணம் முடிந்து மண்டப மணமேடையில் வந்து நின்றாகிவிட்டது. இன்னும் இவன் இயல்பாய் இவள் முகம் பார்க்கவில்லை. அவள் அடிக்கடி இவனை பர்ப்பது இவனுக்கு புரிகிறது..யார் யாரோ வந்து வாழ்த்து சொல்கிறார்கள் . இவன் கருத்து யாரிடமும் இல்லை. வெறுமனே சிறிதாய் சிரித்து வைத்து “தாங்க்ஸ்” என்று வந்து வாழ்த்தியவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

திடீரென்று ஜோஷ்வாவின் பார்வை மேடை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த நபர் மீது பதிந்து ‘திக்கென்று’ விழித்து நின்றது..”இதோ அவன்!..” அன்றைக்கு அபிகேலுடன் பைக்கில் வைத்து பார்த்தவன் இவர்களை நோக்கி சிரித்த முகத்துடன் வந்து கொண்டிருந்தான்.!

அருகில் வந்ததும் “அக்கா, அண்ணா ரெண்டு பேருக்கும் என்னோட வாழ்த்துக்கள். இது நானே உங்களுக்காக ப்ரிப்பேர் பண்ண ஒரு சின்ன கிப்ட்” என்று இவர்களிடம் நீட்டினான். ஜோஷ்வாவுக்கு அவன் வாயிலிருந்து ‘அக்கா’ என்று கேட்டதும் மனதில் மழைத்துளி தூறலாய் நனைந்தது.!

பின்பு அந்த பைக்காரன் ஜோஷ்வாவிடம் “அண்ணா என் பெயர் ஷாரோன். நான் அக்காவோட…”

“ஏண்டா ஷாரோன் நீ லேட்டா வந்த…” என்று அபிகேல் இடைமறிக்க..

“சாரி அக்கா ..விஜியம்மா உங்க வெட்டிங்க் மாஸ் ஃபுல்லா பார்க்கணும்னு ஆசைப்பட்டு சீக்கிரமா சர்ச்சுக்கு வந்துட்டாங்க. நான் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்திட்டு அன்னம்மா அக்காவை பார்த்துக்க சொல்லிட்டு வந்தேன். அதான் லேட்டாயிடுச்சு..”

“ஓ..உங்களுக்கு மேரேஜ் ஆகி குழந்தைங்களும் இருக்காங்களா..? என்று ஜோஷ்வா ஆச்சர்யத்துடன் ஷாரோனிடம் கேட்க “அண்ணா..அது வந்து..” ஷாரோன் ஏதோ சொல்ல தொடங்க..இப்போது அபிகேல் “ஷாரோன் அங்கப்பாரு விஜியம்மா உன்னை கூப்பிடுறாங்க.” என்று மண்டபத்தின் வாசலில் நின்ற ஒரு பெண்மணியை காட்டி கூறினாள். ஷாரோனும் திரும்பிப் பார்க்க அந்த பெண்மணி கையசைத்து வா என்று கூப்பிடுவதை பார்த்து

“சாரி அண்ணா.விஜியம்மா கூப்பிடுறாங்க.நான் என்னன்னு போய் கேட்குறேன். ஈவ்னிங்க் பார்க்கும்போது பேசலாம்.” என்று சொல்லிவிட்டு அவன் மேடைபடியிறங்கி கீழே போனான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.