(Reading time: 32 - 63 minutes)

ஜோஷ்வாவுக்குள் மறுபடியும் கடல் அலையின் இரைச்சல்கள்…” அவன் என்ன சொல்ல வந்தான்…இவள் வேண்டுமென்றுதான் பேச்சை இடைமறித்தாளா…அல்லது இதெல்லாம் சாதாரணமா நடந்ததுதானா….எனக்கு தான் குழப்பமா…” என்று தனக்குள் குழம்பினான். அடுத்து ஒரு குடும்பம் இவர்களை நோக்கி வாழ்த்துடன் வரவும் தற்காலிகமாக இவனது குழப்பம் ஒத்தி வைக்கப்பட்டது!.           

இரு மனமும் இரு வழிகளில் பயணிக்க திருமண விருந்தும் ஒரு முடிவுக்கு வந்தது.புதுமணத் தம்பதிகளை உறவினர் படைசூழ மணமகன் ஜோஷ்வாவின் இல்லத்தில் இனிதே அழைத்து வந்தனர். சிறியவர்கள் கேலியில் சலசலக்க…பெண்வீட்டு பெரியவர்கள் பெண்ணிடம் அறிவுரை அரங்கேற்ற…எல்லாம் இனிதே முடிந்த சந்தோஷத்தில் சிலர் விடைபெற அந்நிகழ்வும் சிறிது நேரத்தில் முடிவுக்கு வந்தது.! ஜோஷ்வாவின் தந்தை விடைபெறும் உறவினர்களை கவனிக்க சென்றுவிட்டார்.  இரு வீட்டு உறவினர்கள் கூட்டம் குறைந்ததும் ஜொஷ்வா தன் அம்மாவை நோக்கி,

“அம்மா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நான் ரூமுக்கு போறேன்” என்று சொல்லிவிட்டு கீழே ஹாலின் வலது பக்கத்திலிருந்த அவன் அறையை நோக்கி செல்லத் துவங்க

“ஜோஷ்வா அபிகேல் தனியா இருக்காடா .அவளை..”

“அம்மா பிளீஸ்…அப்புறம் பேசலாம்” சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் அவன் அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டான்.

தனியே சோபாவிலிருந்து எழுந்து நின்றிருந்த அபிகேலிடம்

“தப்பா நினச்சுகாதம்மா..உனக்கு தான் அவனைப் பற்றி நல்லா தெரியுமே. வா நாம மேலே ரூம்ல போகலாம். நீயும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு”

 “பரவாயில்லம்மா. நான் ஒன்னும் நெனைக்கல. எனக்கும் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கணும் போல இருக்கு. ஈவ்னிங்க் நாம ரிசப்ஷன் வைக்காததால எல்லோருமே கல்யாணத்துக்கு வந்துட்டாங்க. ரொம்ப நேரம் நின்னிட்டிருந்ததால கொஞ்சம் டயர்டா இருக்கு.”  என்று சிரித்த முகத்துடன் அபிகேல் சொல்லவும்

“நீ எப்பவுமே இப்படி சிரிச்ச முகமாகவே இருக்கணும்” என்று அவள் கன்னத்தில் கை வைத்து சொன்னவாறே

“ சரி வாமா மேலே போகலாம்” என்று இருவரும் மாடிபடியேறினார்கள்.

மாலை 5:30 மணி.

அறையின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்தவாறே ஜோஷ்வா எழுந்து வந்து கதவை திறந்தான்.

அவனது அப்பா நின்று கொண்டிருந்தார்.

“என்ன ஜோஷ்வா நீ இன்னும் ரெடியாகலையா..நாம ஆறு மணிக்கு கிளம்பணும். அங்க மேல ரூம்ல மாமியாரும் மருமகளும் ஒரு மணி நேரமா மேக்கப் பண்ணிட்டிருக்காங்க. சீக்கிரம் ரெடியாகிட்டு வா.”

“எங்கப்பா போறோம்..எங்கிட்ட ஒண்ணும் சொல்லல”

“பக்கத்துல தான்பா போறோம்.நீ ரெடியாகிட்டு வா.எனக்கு ஒரு ஃபோன் பேசணும். நான் பேசிட்டு வந்திடுறேன்.’ என்று அவர் போய்விட..

“இனியும் எங்க போக போறோம்” இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துடன் பாத்ரூமை நோக்கி போனான். புத்தாடை அணிந்து புத்துணர்ச்சியோடு ஹாலை நோக்கி ஜோஷ்வா செல்ல..சோபாவில் இருந்த அபிகேல் எழும்பி நின்றாள்.

சந்தனம் நிறச் சேலையின் விளிம்பில் தங்க நிறத்தில் பூக்கள் மினுமினுக்க தலையில் மல்லிகை சரம் சூழ கழுத்தில் இவன் அணிவித்த தாலியின் மேலே சந்தன நிறக்கற்கள் பதித்த ஒரு பூ வடிவில் மின்னும் நெக்லஸ்,அதே வடிவில் காதில் கம்மல் மட்டும் அணிந்து வேறு ஆபரணங்கள் அணியவில்லை எனினும் தங்கப்பதுமை போன்ற தேவதை ஒருத்தி வளர்பிறை நிலவின் மேலிருந்து எழுந்து நிற்பது போன்றிருந்தது அவள் எழுந்து நின்றது. முதல்முதலாக அவளை இப்படி நேரில் பார்க்கவும் கண் எடுக்க முடியாமல் ,அவளின் மேல் நிலைத்து நிற்பேன் என்று விழியும் இமையும் அடம்பிடிக்க..அவன் தலையை குலுக்கியவாறே வாசலை நோக்கி சென்றான்.

அரை மணி நேரம் கழித்து ‘அன்பின் அலை’ என்ற பெயர் பதித்த கட்டிடத்தின்

முன்னால் சென்று இவர்களது வண்டி நின்றது. எல்லோரும் கீழே இறங்கவும் ஷாரோன் இவர்களை நோக்கி சிரித்தபடி நடந்து வந்தான். ஷாரோனின் நடையில் ஒரு சின்ன மாற்றம் இப்போது ஜோஷ்வாவின் கண்களுக்குத் தெரிகிறது. ஷாரோனுடன் அந்த விஜியம்மாவும் சேர்ந்து வர ஜோஷ்வாவின் பெற்றோர் ஷாரோனிடமும் விஜியம்மாவிடமும் நல்ல தெரிந்தவர்கள் போலப் பேச ஜோஷ்வாவுக்குள் மறுபடியும் குழப்பம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.