(Reading time: 17 - 34 minutes)

நேரம் செல்லச் செல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு அவள் சென்று கொண்டிருந்த தருணத்தில் அருகே ஏதோ சத்தம் கேட்க புரண்டு படுத்தாள்.  அப்போது எதிரே ஒரு உருவம் மங்கலாகத் தெரிந்தது.  கண்களைக் கசக்கிப் பார்த்தபோது அவளுக்கு மிக அருகில் தெரிந்தது அந்த உருவம்.  அது, வினோத்.  அவன் கண்களில் வேட்டையாடும் வெறி.

இதற்குள் அவளது தூக்கம் எங்கோ சென்றிருந்து, தான் எத்தகைய இக்கட்டில் மாட்டியிருக்கிறோம் என்று அறிந்துகொண்டாள்.  ஒரு வெற்றிச் சிரிப்புடன் அவளருகே வந்தான் வினோத். 

“எவ்வளவு நாள் உன்னைப் பார்த்ததிலிருந்து காத்திருக்கிறேன்!  இன்று பட்சி மாட்டிவிட்டது” என்று கூறிக்கொண்டே அவளை அணைக்க முயன்றான் வினோத்.

தன் பலம் கொண்டமட்டும் எவ்வளவோ போராடிப்பார்த்தும் முடியவில்லை அவளால்.  காய்ச்சலால் துவண்டிருந்த உடல் என்னால் இனி முடியாது என்று கையை விரித்தது.  பெண்மை போகும்முன் உயிரேனும் போய்விடாதா என்று அவள் நினைத்துக்கொண்டிருக்கும்போதே அவளது எண்ணம் முற்று பெறாமலேயே மயக்க நிலைக்கு சென்றாள் சாயா.

கண்விழித்துப் பார்க்கும்போது அவள் இருந்தது மருத்துவமனையில், தோழிகள் சூழ.  அவளைவிட்டுத் தனியே செல்ல மனமில்லாததால் பாதிவழியே அவர்கள் அனைவரும் திரும்பியதால் அவளைக் காப்பாற்ற முடிந்தது.  வினோத் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டான் என்றும் அறிந்துகொண்டாள் சாயா.

சாயாவை மருத்துவமனையில் இருந்து அனுப்பியவுடனேயே ஊர் திரும்பிவிட்டனர் அனைவரும்.  ஆனால் அதன் பின்பு தான் அவளிடம் ஏகப்பட்ட மாற்றங்கள்.  ஆண்களைப் பார்த்தாலே ஒதுக்கமும் கிலியும் வந்து ஒட்டிக்கொண்டது; பேச்சும் குறைந்து போனது; தனக்குள்ளேயே ஒரு வட்டம் போட்டு வாழ ஆரம்பித்தாள்.  என்றுமே சிரிக்கும் கண்கள் சோக கீதம் வாசித்தன.

ஏதேதோ பிதற்றிய சாயாவிற்கு அவளது சித்தி திலகவதி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், மாற்ற முயற்சித்தும் அனைத்துமே உபயோகமில்லாது போனது.   கணவரும் அக்காவின் குடும்பமும் விபத்தில் இறந்ததற்குப் பிறகு அவரது வாழ்வின் ஒரே பற்றுகோல் சாயா மட்டுமே.  அவளை இப்படிக் காண்கையில் தவித்தது அந்தத் தாயுள்ளம். 

அவளுக்குத் திருமணம் முடித்தால் சரியாகிவிடுவாள் என்று எண்ணி வரன் பார்க்கையில் கிட்டியது கதிரவனின் தாயின் அறிமுகம்.  அவரும் மகனுக்குப் பெண் பார்ப்பதாகக் கூற, இருவருக்கும் பொருத்தம் பார்க்கப்பட்டன.  எல்லாம் சரியாக இருக்கவும், அனைத்தையும் முடிவு செய்துவிட்ட பின்பே சாயாவிடம் அவளது திருமணம் தெரிவிக்கப்பட்டது.

சாயாவும் தனக்குத் திருமணம் வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்துப்பார்த்தாள்.  கடைசியில், சித்தியின் தற்கொலை முயற்சியால் ஒப்புக்கொண்டாள்.

னி,

சொல்ல வேண்டியதை சொல்லி முடித்துவிட்டு மேலும் தேம்ப ஆரம்பித்தாள் சாயா.  அவள் கூறியதைக்கேட்டு கதிரவனுக்குள் சினம் கரைபுரண்டு ஓடியது.  அந்த வினோத் மட்டும் இப்போது அவன் கையில் கிடைத்திருந்தால் அப்போதே மடிந்திருப்பான்.  ஆனால், அவனது கோபத்தைப் பின்னுக்குத் தள்ளி கவலை கொள்ள வைத்தது அங்கிருந்தவளின் கதறல்.

மெல்ல அவளிடம் சென்று அருகே அமர்ந்து தோளைத் தொட்டான்.  அவளுள் மெல்லிய நடுக்கம் ஓடியது, ஆனால் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை.  அவளுக்கு நடந்ததைக் கேட்டபின் ரணமாய் வலித்தது இதயம் அவனுக்கு.  மென்மையாக சாயாவைத் தன் தோளில் சாய்த்து தேற்ற ஆரம்பித்தான், மனத்துக்குள் அவளுக்காக அழுதுகொண்டே.

அது ஏனோ, பெண்களுக்கு இவ்வாறு இருக்க வேண்டும் என்று வரைமுறை எல்லாம் வகுத்த இந்த சமுதாயம் அதை ஆண்களுக்கும் வகுக்க மறந்துவிட்டது.  இரட்டை அளவுதல் கொண்டு ஆயிரம் கட்டுப்பாடுகளை மாதர்களுக்கு விதித்து, “தையலை உயர்வு செய்” என்று தம் பிள்ளைகளுக்குப் போதிக்க மறந்துவிடுகின்றனர்.  ஒரு பெண் நெறி தவறுகிறாள் என்றால் அங்கே ஒரு ஆணும் நெறி தவறி இருக்கிறான் என்று தானே பொருள்?  ஆனால் நாம் அந்த பெண்ணை மட்டும் குற்றவாளியாக்குவது ஏன்?  இந்தக் கண்ணோட்டமும் அதற்கு ஏற்றாற்போல இருக்கும் சமூக நடப்புகளும் தான் இன்னும் பாலியல் வன்முறைகள் பெருகிவர காரணமோ?  இன்னும் பல எண்ணங்கள் அவன் மனதுக்குள் எழுந்தன. 

இத்தனை கட்டுப்பாடு வாய்ந்த சமுதாயத்தில் வளர்ந்ததாலோ என்னவோ, சாயாவிற்கு அந்த சம்பவத்திற்குப்பின் தன்னைப் பற்றிய கழிவிரக்கம் பிறந்தது.  வெளியுலகம் தெரியாமல் வளர்ந்ததால், இதனை விட மிகப் பெரிய கொடுமைகளை அனுபவித்து சாதித்தவர்களைப் பற்றி அவளுக்கும் தெரியவில்லை, எடுத்துரைக்கவும் யாருமே இல்லாமல் போயினர்.  அவளது சித்தி எவ்வளவோ முயன்றும் அவரால் அவளது அடிப்படைப் பிரச்சனை என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் போயிற்று.  நண்பர்களையோ, காணவே மாட்டேன் என அடம்பிடித்தாள் சாயா.  அவ்வாறு இல்லாமல், அவர்களை சந்தித்திருந்தாலேனும் அவளுள் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.  ஆனால், அதனை அவள் செய்யவே இல்லை.

இப்படி ஒரு துன்பத்தை தன் மனதில் வைத்து எத்தனை நாள் தவித்திருப்பாள்?  சாயாவின் அத்தனை துன்பத்தையும் அந்த நொடியில் அனுபவித்தான் கதிர்.  அந்த நிமிடம் மனதுக்குள் சத்தியம் செய்து கொண்டான் அவன்.  இவள், பூ போன்று மென்மையானவள்.  இவளை வேகமாக வீசும் காற்று கூட காயப்படுத்தாம பார்த்துக்கொள்ள வேண்டுமென்று.  அதற்கு சாயாவை இந்த சோகத்திலிருந்து மீட்டெடுப்பது என்று முடிவு செய்தான். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.