(Reading time: 17 - 34 minutes)

2017 போட்டி சிறுகதை 05 - உயிரென நான் இருப்பேன் - லேகா

This is entry #05 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - லேகா

Fixing heart 

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன.  இதோ, இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாகப் போகிறான்.  நினைக்கும் போதே சுளீர் என வலித்தது

எவ்வாறு ஏற்றுக்கொள்வாள் அவள்வாழ்வில் என்றேனும் மறக்கக்கூடியவனா அவன்?  அந்த நிகழ்வு?  அவளது நெஞ்சத்துள் பற்பல கேள்விகள் அலையலையாய் தோன்றினஆனால், அவள் கேட்கும் அமைதியை அந்தக் கேள்விகள் தரமுடியாதவாறு மலையென தடுத்து நின்றான் அவன்.

மந்திரங்கள் ஒலிக்க, மதி கலங்கி இவள் அமர்ந்திருக்க, மங்கலநாணே பூட்டிவிட்டான் இவன்.  முடிந்தது!  இனி எதுவுமே செய்ய முடியாது.  தன் வாழ்க்கை இனி இவனோடு தான் என்று நினைக்கும்போதே உள்ளுக்குள் எங்கோ கசந்து வழிந்தது.  அத்தோடு, நெருப்பில் தூக்கிப்போட்டாற்போல ஒரு உணர்வு.

அருகில் நின்று தனது கடமையை முடித்துவிட்ட திருப்தியில் கண்கலங்கிய சித்தியைப் பார்த்தபோது, நெஞ்சில் தாங்கமுடியாத சுமையாய் கணத்தது அந்தத் திருமாங்கல்யம். 

இதோ அதோ என்று எல்லையில் திரண்டிருந்த கண்ணீரில் ஒரு துளி, “இனி முடியாது என்னால்” என குனிந்திருந்த அவளது கண்களிடம் விடைபெற்றுப் புதியதாக அவளது கழுத்தை அலங்கரிக்கத் தொடங்கியிருந்த பொற்றாலியின் மேல் விழுந்தது.  அவ்வளவு பேர் மத்தியில் அவளையோ அவளது எண்ணத்தையோ புரிந்துகொள்ளக்கூடியவர் எவருமே இல்லையோ என்று புளுங்கியது அவள் மனம்.

நினைவு தெரிந்ததிலிருந்து பல கனவுக்கோட்டைகள் கட்டிவைத்து எதிர்பார்த்திருந்த நாள் இன்று அவளுக்குள் அதற்கான எந்தவொரு பரவசத்தையும் ஏற்படுத்தாமல் தன் போக்கில் சென்று, அவளிடம் விடைபெற இரவென்னும் பெயர் கொண்டு வந்து நின்றது.

சூரியன் மறைய மறைய தான் தனியே சந்திக்கவேண்டிய கதிரவனை நினைத்து தனக்குள் பயந்து நடுங்கிப்போனாள் சாயா.  “ஆண்டவா!  இன்றைய நாளை எப்படியாவது எதுவும் நடக்காமல் கடத்திவிடு.  இனி வரும் காலங்களிலும் எனக்கு உறுதுணையாக இரு” என்று தனது இஷ்ட தெய்வத்திற்கு மட்டுமல்லாது, உலகிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும் அவசர மனு போட்டாள் அவள்.

சுற்றிலும் நின்று தன்னை கேலி செய்து தங்களுக்குள் சிரித்துக்கொண்டிருந்த யாருமே சாயாவின் கருத்தில் பதியவில்லை.  அப்போது, “என்ன இங்கே சத்தம்?  நீங்கள் என் பொண்ணை இப்போவே பயப்படுத்திருவீங்க போல.  சிறிது நேரம் அவள் தனியாக இருக்கட்டும்.  எல்லாரும் கொஞ்சம் வெளியே போய் பேசுங்கள்” என்று கூறி அனைவரையும் அனுப்பிவிட்டார் அவளது சித்தி திலகவதி.

பின், “சாயும்மா…” என்று பாசத்துடன் விளித்து அருகே வந்த சித்தியை நோக்கி அக்கினிப் பார்வை ஒன்றை ஏவுகணையென எறிந்தாள் சாயா.  “நான் என்ன சொல்லியும் நீ கேட்கவில்லையே” என கேட்டது அவளது பார்வை.

சாயாவின் கண்களிலிருந்த அந்த விரக்தியைக் கண்டு தவித்துப்போனார் அந்தத் தாய்.  பெற்றால் தான் பிள்ளையா?  தமக்கையின் புதல்வியானாலும் இம்மண்ணில் அவள் அவதரித்த நாள் முதல் அவளைக் காத்து வளர்த்தவரன்றோ இவர்? 

‘என்றாவது நான் செய்தது தான் சரி என்று அறிந்துகொள்வாய் சாயும்மா’ என்று நினைத்துக்கொண்டு, குரலில் கடுமை காட்டி, “ம்ம்… சீக்கிரம் தயாராகு.  அங்கே மாப்பிள்ளை எவ்வளவு நேரம் காத்திருப்பார்?  உன்னோட பிடிவாதத்தை எல்லாம் விட்டுவிட்டு பொறுப்புடன் அவரது மனமறிந்து நடக்கப்பார்” என்றார்.

மேலும், தக்க அறிவுரைகளைக் கூறி கதிரவன் இருக்கும் அறையினுள் அவளை அழைத்துச் சென்று விட்டு வந்தார்.  அவர் கூறுவது புரிந்தாலும் அதற்கு மறுத்து சொல்வதற்குக்கூட இயலாதவாறு மரத்துப்போயிருந்தாள் சாயா.

பல வருடங்களாக தான் உபயோகப்படுத்திய அறையென்றாலும், அன்று அதனுள் காலடி எடுத்து வைக்கும்போது வேறாய் தெரிந்தது.  ஒவ்வொரு அடியிலும் பூமி தன்னை உள்வாங்கி விடாதா என்ற அவள் இதயத்தின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி அவளை இறுதியாக அவன் அமர்ந்திருந்த கட்டிலின் அருகில் சேர்ப்பித்தன கால்கள்.

இயந்திரமாக அவனிடம் பால் சொம்பைத் தந்துவிட்டு நின்றாள்.  இதயத்துடிப்பு குதிரையின் வேகத்தை மிஞ்சியது.  அதனை அருகே இருந்த மேசையில் வைத்துவிட்டு தன் மனைவியாகிவிட்டவளை நோக்கி கரத்தை நீட்டித் தொட முயன்றான் கதிரவன்.  பேயைக் கண்டதுபோன்ற திகைப்புடன் “வேண்டாம்” என முனங்கிக்கொண்டு பின்னடைந்தாள் சாயா.

கதிருக்கு இது அதிர்ச்சியே.  இருந்தும் உடனடியாக சுதாரித்துக்கொண்டு, “என்னம்மா? பிடிக்கலையா?” என்று காதலும் அக்கறையும் வழிய கேட்டான்.  தாபம் தான் அவள் மிரண்டதிலே வந்த வழியாக ஓடிவிட்டதே!  பயம் போலும் என்று நினைத்திருந்தான் அவன்.

“வேண்டாம்.  என்னை விட்டுடுங்க” என்று தரையில் அமர்ந்து கதறி அழ ஆரம்பித்தாள் சாயா.  இதனைக் கண்டு மேலும் குழம்பிப்போனான் கதிரவன். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.