(Reading time: 17 - 34 minutes)

பின் வந்த நாட்களில் சாயாவை பழைய நிலைக்குக் கொண்டு வருவதே கதிருக்குப் பிரதானமாகிப்போனது.  முடிந்தவரையில் வீட்டிலேயே இருந்தான், சாயாவின் தனிமையைக் குறைக்க அருகே வசிக்கும் குழந்தைகளை அழைத்து வந்து பேச வைத்தான், அவளை சிறு வேலைகளில் உதவிக்கு அழைத்தான். 

இவை பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்திவிடவில்லையெனினும், முன்பு இருந்ததைவிட சிறு முன்னேற்றம் ஏற்பட்டது.  சாயாவும் அதற்குப் பின் அவனிடம் ஒரு பாதுகாப்பை உணர்ந்ததால் ஒதுக்கம் காண்பிக்கவில்லை.  இதுவே கதிருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றிதான்.

அன்றும் அதே போல குழந்தைகளுடன் வீட்டின் முன்னறையில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான் கதிரவன்.  சாயாவும் அவர்கள் சாப்பிடுவதற்கு பலகாரம் கொடுத்துவிட்டு அவர்களைப் பார்க்குமாறு அமர்ந்துகொண்டாள். 

இருவருடைய உறவிலும் ஒரு நட்புணர்வு இருந்தாலும் இன்னும் அவர்களுக்கு நடுவே ஒரு இரும்புத்திரை இருந்தது.  ஆனால் சாயா தான் சொல்வதைக் கேட்பாளா என்ற தயக்கம் இருந்ததால், அவளிடம் தான் கூறவேண்டியதைக் கூற இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டான்.

“அஜய், பவித்ரா, தாரணி, நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லவா” என்று கேட்டான் கதிர்.

கதை என்றவுடன் மகிழ்ச்சியுடன் கேட்க ஆரம்பித்தனர் அனைவரும்.  சாயாவும் தான்.

“ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.  அப்போது, தண்ணீர் நிறைந்த ஒரு கோப்பையை மாணவர்களிடம் காட்டி, “நான் கையில் வைத்திருக்கும் இந்த கோப்பையின் எடை என்ன?” என்று கேட்டார். 

பலர் பலவிதமான பதில்களைக் கூறினர்.  ஆனால் அந்த ஆசிரியர் சொன்னார், “என்னுடைய காட்சிக்கோணத்தில் கூறினால், இதன் எடை அவசியமில்லை.  இந்தக் கோப்பையை நான் எவ்வளவு நேரம் ஏந்துகிறேன் என்பதில் தான் இதன் எடை நிர்ணயிக்கப்படுகிறது” என்றார்.”

“அது எப்படி” என்று கேட்டாள் பவித்ரா.

“சொல்கிறேன்.  நீ கேட்டது போலவே அங்கும் ஒரு மாணவன் கேட்டான்.  அதற்கு அவர், “நான் இதனை ஒரு நிமிடமோ இரு நிமிடமோ பிடித்திருந்தால், இதன் எடை மிகக் குறைவானது.  ஒரு மணி நேரம் பிடித்தால், எனது கை கொஞ்சம் வலிக்கும்.  அதுவே நான் நாள் முழுக்க பிடித்திருந்தால் கையே மரத்துப்போய் இந்தக் கோப்பையை கீழே போட்டுவிடுவேன்.  இந்த மூன்று நேரத்திலுமே அதன் எடை மாறவில்லை.  ஆனால், நான் பிடித்திருக்கும் நேரம் மாறுபடுகிறது.  எவ்வளவு நேரம் அதனை சுமக்கின்றேனோ, அவ்வளவு எனக்கு அது சுமையாகத் தெரிகின்றது” என்று அவர் கூற, அனைவரும் அதனை ஆமோதித்தனர். 

அவர்களைப் பார்த்த அந்த ஆசிரியர், “இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால், நமது துன்பமும் இந்த கோப்பைத் தண்ணீரைப் போலவே.  சிறிது நேரம் அதைப் பற்றி நினைத்தால் பரவாயில்லை.  சில மணிநேரம் நினைத்தால், மனதில் வலி பிறக்க ஆரம்பிக்கும்.  அதுவே, நாட்கணக்கில் நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் நாம் முழுவதுமே மரத்துப்போய் அதிலிருந்து வெளியே வரும்வரை வேறு எதுவுமே செய்யமுடியாதவர்களாகி விடுவோம்.  எனவே, நீங்கள் யாருமே உங்களது கவலைகள், துக்கங்கள் போன்றவற்றை அன்றோடு முடித்துவிட வேண்டும்.  அடுத்த நாளுக்கு எடுத்துச் சென்றால் துன்பம் தான் அதிகரிக்கும். சரியா?” என்று முடித்துவிட்டு சாயாவைப் பார்த்தான் கதிர்.

ன்றிரவு கதிர் உறங்கியபின்னும் உறங்காமல் யோசித்துக்கொண்டிருந்தாள் சாயா.  அவளுக்குப் புரிந்தது, கதிர் தனக்காகவே இந்தக் கதையைக் குழந்தைகளிடம் சொன்னான் என்று.  பல நாட்களாக அவனைப் பார்க்கிறவள் தானே அவளும்.  அவளை நோக்கும்போது அவன் கண்களில் வழியும் காதலும் அவள் அறிந்ததே.  இருந்தும் தன் மனக்கலக்கத்தால் அதனை அவள் அப்போது கவனிக்கவில்லை. 

அவனிடம் அந்த சம்பவத்தைக் கூறியதிலிருந்தே அவளது மனம் அவன் பக்கம் சாய ஆரம்பித்திருந்தது என்றே சொல்லவேண்டும்.  ஆனால் இது சாயா அறியாதது.

கதிரோடு இருக்கும்போது எதைப் பற்றிய கவலையும் அவளை நெருங்குவதில்லை.  அவளைக் கொத்தித் தின்னும் அந்த ஞாபகங்கள் கூட.  அதனால், கதிரின் அருகாமையை தன் கவலைகளை மறக்க வைக்கும் ஒரு வழியாக எடுத்துக்கொண்டாள் அவள்.  இருளாக இருந்த அவள் வாழ்வின் ஒளியென வந்து அவள் நிழலை அவளுக்கே திருப்பித் தந்தான் கதிர்.

சுய இரக்கத்தால் அவளது வாழ்வை மற்றுமல்லாது அவனது வாழ்வையும் பாழடிக்கிறோம் என்று அவளுக்குத் தோன்றியது.  சாயாவை ஒதுக்குவதென்றால் அன்றே அவளை விலக்கி வைத்திருப்பான்.  ஆனால், அதிலிருந்து அவனது நடவடிக்கைகளைக் காண்கையில் தெரிந்தது, அவனுக்கு சாயாவின் கடந்த காலம் ஒரு பொருட்டல்ல என்று.  இத்தகைய நம்பிக்கையை அவளுக்கு யாரும் அளிக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.