(Reading time: 37 - 73 minutes)

வளுக்குள்ளோ அறுபட்டதுபோல் துடித்துக் கொண்டிருந்த உள்மனதில் ரகசிய சாரல். காயமாறல். இதயம் அழுத்திய பாறை காணாமல் போதல்...

இனி அவனை பார்க்கவே முடியாது என்று தவித்துக் கொண்டிருந்த அதற்கு அவனது இப்பிடிவாதம் ஔஷதம்.

சே...எவ்ளவு ஈசியா இந்த மனம் அவன்ட்ட விழுந்து போகுது....கேடுகெட்ட மனம்...

பசி தோன்றியது வயிற்றில்.

இவ்ளவு நேரமும் உணர்வற்று மரத்துப்போய் இருந்த உடல்...? ஆக இவள் மனமும் உடலும் இவ்வளவு நேரமும் துக்கமனுஷ்டித்தது இவனை பிரிந்ததற்காக தானா...?இவன் வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிட்டதாமா? மனமும் உடலும் எவ்வளவு எளிதாய் அடிமைகோலம் பூண்கிறது...

உன்கூடதான் இருப்பேன்னு சவால்விட்டுவிட்டு இவன் எங்கு போய்விட்டான்? மெல்ல அறைக்கு வெளியே தலையை நீட்டினாள். வரவேற்பறை ஸோபாவில் கற்சிலையாய் அவன்.

அழையா விருந்தாளியாய் வெறுப்பவர் சூழ உட்கார்ந்து இருப்பது என்றால்....சற்று தொலைவில் அம்மாவும் அப்பாவும் கையை பிசைந்து கொண்டு நிற்பது தெரிந்தது....இந்த அம்மா இவனை என்னவெல்லாம் பேசினார்...அவர் முன் இப்படி இவன் வந்து நிற்கவேண்டும் என்றால்.....அவன் மீது இரக்கம் வருகிறது ஒரு புறம்....

ஆமா கத்தியால குத்த வந்தவனுக்கு ஓங்கி குத்றப்ப கை வலிக்குமேன்னு கவலைப்படு...என்று இடித்துரைத்தது மறுபுறம்.

“சின்னவளே சாப்ட வா....அப்டியே மாப்ளய சாப்ட கூப்டு....”

வேற யாரு....இந்த அம்மாதான்...அறைக்குள் வந்து நின்றார்.

அதற்குள் அப்பாவின் குரல் வெளியே கேட்டது “சாப்ட வாங்க மாப்ள..”

“அன்னைக்கு உங்கள சீன்னு விட்டுட்டுபோனாரு அவர்தான் உங்களுக்கு மாப்ளையோ...?”

இவள் குரல்தாழ்த்தி எல்லாம் பேசவில்லை.

“ஷ்ஷ்...என்னைக்காவது உங்க அப்பா கூட சண்ட போட்டுட்டு உன் பாட்டி வீட்டுக்கு வந்து நின்னுருக்கனாடி....இல்ல அப்பாவ பத்தி உன் பாட்டிட்ட குறை சொல்லிருப்பனாடி....?”

விக்கித்துப் போனாள் மகள். அம்மாவின் வாய் நீளம் பிரசித்தம்...ஆனால் அப்பாவை விட்டுகொடுத்து இதுவரை அம்மா பேசியதே கிடையாது.... இதை இவள் கவனித்ததே இல்லையே...

அதற்குள் அம்மாவின் விரல்கள் இவள் கையில் தோளுக்கு கீழிருக்கும் பகுதியை தொட....

“அத்தை” என்றபடி வந்து நின்றான்  கவின்.

அம்மாவிற்கு கோபம் வந்தால் அவ்வளவுதான்....கையின் சதைப் பற்றான இடத்தை கிள்ளி திருகிவிடுவார்....அது இவளுக்கு இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது...அவனிடம் அதை முன்பு சொன்னதும் சேர்த்துதான்...

இந்த கிள்ளல் வலி கூட இவளுக்கு வந்துவிட கூடாது என்று காப்பாற்றி, பின்  கழுத்தை வெட்ட போகிறானாமா?!!!!

“அது....சாப்ட வாங்க மாப்ள...ரெண்டு பேரும் வாங்க...” அம்மா சமாளித்துவிட்டு இவளை பார்வையால் மிரட்டிவிட்டு விலகிச் சென்றார்.

இவள் வெடுக்கென்று வெளியேற எந்த முகாபாவமும் இன்றி உணவு மேஜையில் அவன். 

சாப்பாட்டு தட்டை தவிர எதையும் பார்க்கவில்லை இவள்.

அவன் மொபைல் சிணுங்க.. எடுத்தான்.

“ உங்க வீட்லதான் இருக்கோம் மிர்னு....சாப்டுகிட்டு இருக்கோம்...முடிஞ்சதும் அவளே கூப்டுவா... “

மீண்டுமாய் உணவைத் தொடர்ந்தான்.

திருநெல்வேலி வீட்டிலிருந்து கிளம்பும் முன் மிர்னாவிற்கு விஷயத்தை விளக்கி ஃபோன் செய்யவேண்டும் என்று கூட வேரிக்கு தோன்றவில்லை. அவளது நிலை அப்படி.

ஆனால் பேருந்தில் வைத்து அழைத்தாள். மிர்னா இணைப்பை ஏற்கவில்லை. பயிற்சி நேரத்தில் மொபைல் சைலன்ட் மோடில் இருக்கும்...இவளும் அறிந்ததே....அதோடு பயணத்தில் வைத்துப் பேசக்கூடியதா இது..?

கவின் இவளை தொடர்புகொள்ளகூடாது என்பதால் மீண்டுமாய் மொபைலை ஸ்வ்ட்ச் ஆஃப் செய்திருந்தாள் வேரி.

இன்னும் ஆன் செய்யவில்லை. ஆக மிர்னா கவினை தொடர்பு கொண்டிருக்கிறாள் போலும். எந்த தகவலைப் பெற யாரை தொடர்பு கொள்வதாம்?

சாப்பாட்டைவிட்டு எழுந்துவிட்டாள் வேரி.

“மாப்ள சாப்டுகிட்டு இருக்கார்...எங்க போற நீ உட்காரு....இவ்ளவு கொஞ்சமாவா சாப்டுவ...ஒழுங்கா சாப்டு...” இவள் கையை பிடித்து சட்டென இவள் அம்மா இழுக்க நிலை தடுமாறி  வேகாமாக நாற்காலியில் அமர்ந்தாள்.

அதை கவின் பார்த்த பார்வையில்.....

நிச்சயமாக வேறுயாராவது இப்படி செய்திருந்தால் கவின் கை நீட்டுவதை இவள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பது புரிகிறது.

“அவ போகட்டும் அத்தை...இவ்ளவுதான் சாப்டுவா....கொஞ்ச நேரம் கழிச்சு பால் குடிப்பா....சரியாதான் இருக்கும்...”

வேகமாக சென்று தன் அறைக்குள் புகுந்தாள். மனம் மட்டும் இன்னும் உணவு மேஜையில்.... காரணம் இல்லாமல் இல்லை.

“அது....அவ எங்கம்மா வீட்ல வளந்தா....அங்க மாடு உண்டு....வீட்டு பால் நல்லது நல்லதுன்னு எங்கம்மா அவளை வெறும் பாலும் தயிரும் மட்டுமே கொடுத்து வளத்துட்டாங்க....சரியான பால்கொழுக்கட்டை இது....” அம்மா மாலினி  இவளைப் பற்றி பேசிக்கொண்டு போக

வாய்விட்டு சிரித்தான் கவின்.

“என்னாச்சு....மாப்ள?”

“பி கேன்னா பால்கொழுக்கட்டையோன்னு தோணுது....மிர்னு வியனுக்கு வச்சிருக்கிற பெயர்...என்ன அர்த்தமா இருக்கும்னு நாங்க பெரிய ஆராய்ச்சியே செய்துகிட்டு இருக்கோம்...”

“அச்சோ...அது...பெரியவளுக்கு  இவளவிட சூட்டிகை அதிகம்...வாயும் அதுக்கு ஏத்தமாதிரி கொஞ்சம் அதிகம்....இருந்தாலும் யார்ட்ட என்ன பேசனுன்னு தெரிஞ்சு நடந்துப்பா....யார் மனசும் கஷ்டபடுற மாதிரி நடந்துக்க மாட்டா...ஆனா ஏன் இப்ப இப்படி பேசிகிட்டு இருக்கான்னு புரியலையே...” தவிப்பாய் ஒரு மன்னிப்பு கோரும் குரலில் மாலினி பேச

“விடுங்க அத்தை ...இதுக்கு போய்....யார்ட்ட பேசனும்னு அவ தெரிஞ்சுதான பேசுறா....? நீங்க இப்டிலாம் மாமாட்ட பேசமாட்டீங்களோ...?” கவின் குரலில் கிண்டல்...

“நீங்க வேற.. விடுங்க தம்பி...” அம்மாவின் குரலில் சிரிப்பும், உவகையும் அதனோடு இழையோடிய வெட்கமும்....

அறைக்குள் படுத்திருந்த வேரிக்கு இது தன் வீட்டு உணவு மேஜைதானா என சந்தேகமே வருகிறது.

“இன்னைக்குத்தான் உங்க அத்தை சிரிச்சே நான் பார்க்கிறேன்...இப்டி அடிக்கடி இங்க வந்து போய் இருங்க மாப்ள...” இந்த அப்பா வேறு...

“ஆகா அத்தை நீங்க மாமாவ இப்டில்லாம் பேசுறதே இல்லைனு மறைமுகமா மாமா கம்ளய்ண்ட் கொடுக்றாங்க பாருங்க.......எப்டி அத்த இப்டி...அப்படி ரெண்டு வாயாடி பொண்ணுங்களுக்கு இப்படி ஒரு அம்மாவா?” கவின் கிண்டலாகத்தான் கேட்டான்.

ஆனால் மாலினி சற்று சீரியஸான தொனியில் துவக்கினார்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.