(Reading time: 37 - 73 minutes)

“.நான் அதைலாம் மனசுல வச்சுகிடல...உங்க சின்ன பொண்ணுதான் நீங்க சொன்னதுக்கு பயந்து போய் இஷ்டம் இல்லாட்டாலும் என்னை கல்யாணம் செய்தாளே...அதான் திரும்பவும் உங்க கூட டச்ல இருந்தா சுயமா எதையும் யோசிக்க மாட்டா....நீங்க சொல்றதுக்கு மட்டும் தலை ஆட்டிகிட்டு இருப்பான்னு தோணிச்சு....அதோட என்னை உங்க கண்ணோட்டத்துல பார்பாளே தவிர எங்க ரெண்டு பேருக்கும் இடையில் ஒரு அன்டர்ஃஸ்டாண்டிங் வராதுன்னு புரிஞ்சுது...அதான் இவ்ளவு நாள்...அவள இங்க விடலை....எங்க ரெண்டு பேருக்கும் இடையில் ஓரளவு செட் ஆன பிறகு உங்க விஷயத்தை கவனிக்கலாம்னு நினச்சிருந்தேன்...அதோட அவ கன்சீவானதும்....இந்த நேரத்துல இந்த டார்ச்சர் வேண்டாம்னு பட்டுது... பெற்றோரை கனபடுத்தனும்கிறது கடவுளோட கட்டளையில்லையா...அதோட நாங்க எங்க பேரண்ட்ஸ்ட்ட எப்படி நடந்துகிறமோ அப்டிதான எங்க பிள்ளைங்க எங்கட்ட நடந்துப்பாங்க.... குழந்தை பிறந்த பிறகு இங்க எல்லாருமா  வரனும்னுதான் நினைச்சிருந்தேன்....” கவின் சொல்ல

“பொய் சொல்றீங்க....” வெடித்தாள் வேரி ”எங்க வீட்டை பத்தி பேசினாலே உங்க முகம் இறுகிரும்......”

“கொஞ்சம் இளக்கம் காமிச்சாலும் நீ பிடிவாதம் பிடிப்பதானே....அதான்”

“அப்ப எங்க வீட்டு மேல கோபம் இல்லாட்டாலும் கோபம்ங்கிற மாதிரி நடிச்சேன்னு சொல்றீங்க.....” கொதிக்க தொடங்கி இருந்தாள்.

“இல்ல....நீ அங்க போகனும்னு அப்ப ஆசைப்படுறது எனக்கு பிடிக்கலைனு காமிச்சேன்...அதைத்தான் இப்பவும் சொல்றேன்...டெலிவரிக்கு அப்புறம்தான் வரனும்னு நினைச்சேன்..”

“ஏன்டி நீ மாப்ளையை குற்றவாளி கூண்டுல நிறுத்தி விசாரிக்கிற மாதிரி பேசிகிட்டு இருக்க... அவருக்கு நம்ம வீட்ட பிடிக்கலைனா....சின்ன மாப்ளையை இப்படி தினமும் எங்கட்ட பேச விடுவாறா? நீங்க ரெண்டு பேரும் திருநெல்வேலியில எப்டி இருக்கீங்கன்னு காட்ட எங்களுக்கு எத்தனை போட்டா அனுப்பி இருப்பார் சின்னவர்...அதெல்லாம் பெரிய மாப்ள தராம ஃபாரின்ல இருக்கிற சின்ன மாப்ளைக்கு எப்டி கிடச்சுதாம்....?”

“அ...து...அவர் தம்பிக்காக இவர் அனுப்பி இருப்பார்...” சொல்லும் போதே மனது நெருடியது....எல்லாம் நடிப்பென்றால் வியனுக்குமே இவர்கள் போட்டோ எதற்காம்...? வியன் இவள் பெற்றொரிடம்  பேச வேண்டும் என்ற அவசியமென்ன?..

“நம்ப கூடாதுன்னு முடிவு செய்துட்டா கடவுள் நேர்ல வந்து நின்னாலும் நம்பாது மனசு...” அம்மா சொல்ல உண்மைதானோ என்று தோன்றியது வேரிக்கு.

எனிவே இப்ப....” கவின் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “ஷ்ஆ” என்ற வேரி வயிற்றைப் பிடித்தாள்.

“ வலிக்குது....” அவ்வளவுதான் அடுத்த சில நிமிடங்களில் துடித்துவிட்டாள் வேரி வலியில்....

ஸ்கேன், டெஸ்ட் என எதையெல்லமோ எடுத்தார்கள் மருத்துவர்கள்.

இறுதியில் கவினை தனியாக அழைத்துப் பேசிய மருத்துவர்...”இது சூடோ சொமடிக் பெய்ன்....உண்மையில் அவங்களுக்கு உடம்புல எந்த ப்ராப்ளமும் இல்லை...பட் மனசுல எதோ அதீதீத பயம் இல்லைனா ஃஸ்ட்ரெஸ் அதை அவங்க பாடி இப்டி எக்ஸ்ப்ரெஸ் செய்யுது...அதை சரியாக்கினா எல்லாம் சரி ஆகிடும்..” என்று முடித்தார்.

இரவு மருந்தின் விளைவில் வேரி தூங்க அவள் அருகில் அமர்ந்திருந்த கவினின் கண்கள் அவள் மீது.....மனமோ என்ன செய்ய என்று சிந்தித்துக் கொண்டிருந்தது.

 “எனக்கு கவின்  வேணும்...” தூக்கத்தில் மெல்ல முனங்கியபடி திரும்பி படுத்தாள் வேரி. அவளது அடிமனதின் பயம் இவனுக்கு புரிவது போல் இருந்தது. இவன் கொன்றுவிடுவான் என பயந்து ஓடிவந்துவிட்டு....கவின் வேண்டும் என்கிறாள்.

டுத்த நாள் வேரி விழித்த போது கவின் கண்ணில் தட்டுப் படவில்லை. நேரம் செல்ல செல்ல பொறுக்க முடியாமல் அருகில் இவளுக்காக உணவு எடுத்து வைத்துக் கொண்டிருந்த அம்மாவிடம் கவின் எங்கே என்று கேட்டாள். நிச்சயம் திட்டு கிடைக்கும் என்று தெரியும்.

அம்மாவும் அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் “அவர் இருக்கிறப்ப கடுகா பொறிஞ்சிட்டு...இப்ப என்ன அவர தேடுற....என் முன்னால அவர்ட்ட நீ கோப படலாமா? நம்ம வீட்டுக்கு அவர் வந்திர்க்கப்ப அவர் முன்னாலயே அவரை என்ட்ட குறை சொல்றியே உனக்கு என்ன அறிவு இருக்கு..? “ என்று இவளது கேள்விக்கானவிடை தவிர்த்து மீதி எல்லாவற்றையும் சொன்னார்.

“நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை...”

“ஆனாலும் உங்க பாட்டியவிட உனக்கு அதிக செல்லம் கொடுத்து வச்சிருக்கார் மாப்ள...இப்ப இந்த வாய் பேசுற நீ....? முன்னல்லாம் என்ட்ட பேசவே பயப்படுவ...”

“ம்...முன்னல்லாம் பூதம் மாதிரி உர் உர்னு முழிச்சுகிட்டு புஸ் புஸ்னு மூச்சுவிட்டுகிட்டு.... குண்டு குண்டா ஒரு பீரங்கி மாதிரி வர்ற ஒருத்தங்களை என் அம்மான்னு என் பாட்டி சொல்லுவாங்க... இப்ப 60 கேஜி ரோஜாப்பூவ காமிச்சு இதுதான் உன் அம்மான்னு சொன்னா ஆசை ஆசையா இருக்குல்ல... என் அம்மா...”

படுக்கை அருகில் நின்றிருந்த அம்மாவை இடையோடு கட்டினாள்.

அம்மாவும் பதிலுக்கு இவளை கட்டிக் கொண்டார். இவள் தலையில் விழுந்தது இரண்டு துளி கண்ணீர்.

“அம்மா ஒரு பேச்சுக்கு அழகாயிட்டீங்கன்னு சொன்னேன்...அத நம்பி அழுதுல்லாம் காமிக்காதீங்கம்மா....பார்த்தா  பயமாயிருக்குல்ல...” சொல்லிகொண்டிருக்கும் போதே கவின் அவன் அம்மாவிடம் இப்படித்தான் பேசுவான் என்பது ஞாபகம் வருகிறது இவளுக்கு.

“மிர்னு மாதிரியே பேசுற வேரு...நம்ம வீட்ல வளந்திருந்தன்னா அவள மாதிரியே தான நீயும் இருந்திருப்பன்னு தோணும்....மாப்ள வீட்ல உன்னை எப்டி வச்சிருக்காங்கன்னு எனக்கு இப்ப புரியுது...”

“........”

“உன் மாமியாரும் நீயும் இருக்கிற போட்டோலாம் சின்ன மாப்ள அனுப்பி இருந்தார்...”

“ம்...”

வேரி மனதில் அனைத்து காட்சிகளும் ஓட்டம்.

தலையை சிலுப்பிக் கொண்டாள்.

“எது எப்டியோ...அதை இதை சொல்லி இன்னும் உங்க ஆசை மாப்பிள்ளை எங்க போனார்னு சொல்லவே இல்லை.”

 மொபைலை எடுத்து நீட்டினார் அம்மா.

“கூப்டு...அவரே சொல்லுவார்...”

இவள் கை நீளவே இல்லை.

அடுத்த மூன்று நாட்களும் கவின் கண்ணில் படவில்லை.

நான்காம் நாள் இவள் மருத்துவமனையைவிட்டு டிஸ் சார்ஜ் ஆகி கிளம்பினால் இவளது கார் வீட்டிற்கு செல்லாமல் நேராக சென்று நின்ற இடம் மதுரை ஏர்போர்ட்.

பிரேசில் கிளம்புகிறார்கள் என புரிந்துவிட்டது வேரிக்கு. இவள் மிர்னாவிடம் செல்ல வேண்டும் என்று ஆசைப் பட்டதற்காகவா?

கவின் இவளை தேடி இவள் வீட்டிற்கு வந்த பிறகு அவனை சந்தேகப் படுவது இன்னும் கஷ்டமாகிக்கொண்டே போனது அவளுக்கு.

ஒருவேளை இவள் நிலத்திற்காக இவளை திருமணம் செய்தாலும்...அதன் பின் உண்மையில் இவளை நேசிக்க தொடங்கிவிட்டானோ.....? இதுதான் இப்போதைக்கு நம்பும்படியாக இருக்கிறது இவளுக்கு..

அவன் பிறந்த நாளன்று இவள் நிலத்தை பதிந்து கொடுத்த போது அவன் நடந்து கொண்ட விதம் நிச்சயமாக அவளது நிலம் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை காண்பிக்கிறதே....அதோடு அலுவலகத்தில் அந்த நபர் இந்த இடப்பிரச்சனையைப் பற்றி குறிப்பிட்ட போது... கவின் மறுக்கவில்லையே...என் மனைவிக்கு தெரிந்துவிடக் கூடாது என்று தானே சொன்னான்.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.