(Reading time: 37 - 73 minutes)

பேசிக்கொண்டு இருந்த மாலினியிடம் சென்ற வேரி

“அம்மா.....”தன் அம்மாவை பின்னோடு சென்று வேகமாக அணைத்தாள். “உங்களுக்கே என்னை பிடிக்கலைனா....யாருக்கும் என்னை பிடிக்கவே முடியாதுன்னு நினச்சேன்மா...”

இவர்களது பாசமும் நேசமும் தரைக்கும் நாற்காலிக்கும் புரியவா செய்கிறது? இவள்  இழுத்த வேகத்தில் நாற்காலி சரிய மாலினி அதோடு சேர்ந்து விழ....இருந்த மன தவிப்பு அதனோடு சேர்ந்த குழப்பம்....இப்பொழுது ஏற்பட்ட அதிர்ச்சி அனைத்தின் காரணமாக மயங்கி சரிய ஆரம்பித்தாள் மகள்.

“ஹேய்....குல்ஸ்....”கவின் இவளை நோக்கி ஓடி வர ஆரம்பிப்பது புரிந்தது. அடுத்து இரு நிமிடத்தில் சற்று விழிப்பு வர இப்பொழுது இவள் கவினின் கைகளில் பயணிக்கிறாள் என்பது புரிந்தது. நிம்மதியாய் மயங்கிப் போனாள்.

மீண்டும் விழிப்பு வந்த போது மருத்துவமனைப் படுக்கையில் வேரி...

“ஷாக்...அதுல பயந்துட்டாங்க...வேற ஒன்னும் இல்லை....எதுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் காலைல கூட்டிட்டு போங்க..” மருத்துவர் விடை பெற

“அம்மா இதெல்லாம் நீங்க ஏன் என்ட்ட சொல்லவே இல்லமா...?” அழுகையும் கெஞ்சலுமாக ஆரம்பித்தாள் வேரி

“உன் பக்கத்துல என்னைக்கு என்னை வரவிட்ட நீ......இப்ப இதுவா முக்கியம்...? நீ மிர்னுட்ட பேசப்போறேன்னுதான ரூமுக்குள்ள போன....நாங்க பேசுறதை யார் ஒட்டு கேட்க சொன்னா...? மாப்ளைட்ட எல்லாத்தையும் சொல்லனும்னு எனக்கு தோணிச்சு....நீ குறுக்க வந்து....இப்டி ஹாஸ்பிட்டல் வரைக்கும் கதைய கொண்டு வந்துட்ட....”

“போங்கம்மா......எனக்குதான் இப்ப எல்லாம் தெரியனும்.....நீங்களும் பாட்டியும் செய்தது எல்லாம் தப்பு....ஆனா அதோட காரணம் பாசம்னு இப்பதான் எனக்கு புரியுது...எப்ப யாரு கல்யாண பத்திரிக்கை கொடுத்துட்டு போனாலும் பாட்டியும் சரி நீங்களும் சரி....எதாவது ஏமாந்தவன் கிடச்சாதான இவளுக்கு கல்யாணம்னு என்ட்டயே சொல்லுவீங்க...” குறை சொல்லும் தொனியில் முடித்தாள். ஆனால் அது விளக்கம் கேட்கும் கேள்வி.

“அது...இத பேச வேற நேரமே கிடைக்கலையா உனக்கு?” கவினின் முன்பு வேரி இப்படி பேசுகிறாளே என்று இருக்கிறது மாலினிக்கு.

“சொல்லுங்க...இன்னைக்கு எனக்கு எல்லாம் தெரிஞ்சாகனும்....” இப்பொழுது குரல் உயர்ந்து வெளி வந்தது மகளின் பிடிவாதம்.

‘அது நல்......பொண்ணுக்கு கல்யாணத்துக்கு 100 பவுன் போடுறாங்க இல்லனா 1 கிலோ தங்கம்னு வந்து சொல்லிட்டு போறப்ப....உனக்கு எவ்ளவு போட்டா கல்யாணத்துக்கு மாப்ளை கிடைக்கும்னு கவலையா இருக்கும்...நம்ம வசதிக்கு நாம எவ்ளவுதான் செய்துட முடியும்...? அதான் அந்த நேர டென்ஷன்ல எதாவது சொல்லிருப்போம்...இப்பதான் எல்லாம் சரியா போச்சே...”

“ஒன்னும் சரியா போகலை...எல்லாம் நாசமாதான் போச்சு....” விரக்தியில் வெடித்தாள் மகள்.

“வேரிமா பொறுமையா பேசு...இதென்ன வார்த்தை..?.” அப்பா அதட்டினார்.

“ஆமா இப்ப பேசுங்க..முன்னால அம்மா கன்னாபின்ன்னு பேசுறப்ப எங்க போனீங்களாம்....? மிர்னிக்குதான இந்த மாப்பிள்ளைய பார்த்தீங்க எனக்கு எதுக்கு கல்யாணம் செய்து வச்சீங்க...?அதுவும் அவரை மிரட்டி உருட்டி...” கோபத்தில் கொதித்தாள்.

“அ....து” வேரியின் அப்பா இப்பொழுது கவினின் முகம் பார்த்தார் தர்மசங்கடமாய்....

“சொல்லுங்க மாமா...எப்படினாலும் ஒருநாள் இந்த கேள்விக்கு நீங்க பதில் சொல்லித்தான ஆகனும்..?” இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது போன்ற குரலில் கவின்.

“கல்யாண நேரத்துல மிர்னி காணாமல் போனதும்...அவ ஏதோ வம்பு பண்ணிட்டானு எனக்கு புரிஞ்சிது.... இதுக்கு மேலயும் அவளை கட்டாயபடுத்த முடியாது...கூட்டத்துல வந்து இஷ்டம் இல்லைனு சொல்லிடுவான்னு தோணிட்டு... “மகளுக்கும் மருமகனுக்கும் பொதுவாக மாலினிதான் பதில்சொல தொடங்கினார்.

“ அதுவரைக்கும் மிர்னி வாழ்க்கை இப்டி பெரிய இடத்துல செட்டிலாகுதுன்னு சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும்...சின்னவளுக்கு சாதாரண உயரத்துல பார்க்கிறதே நமக்கு கஷ்டமே....பெரியவள இவ்ளவு பெரிய இடத்துல கொடுத்துட்டு சின்னவள ரொம்ப வசதி கம்மியான இடத்துல கொடுத்தா எப்டி இருக்கும்னு ஒரு பக்கம் ஒரே கவலை..”

இப்படி எல்லாம் அம்மா யோசித்தார்களா? எனக்கு என் குழந்தை எப்படி முக்கியமாக படுகிறதோ அப்படித்தான் அம்மாவுக்கும் நானும் இருந்திருக்கிறேனா? வேரியின் மனம் ஒப்பிட்டுக் கொண்டிருந்தது.

“அந்த நேரம்தான் இந்த எண்ணம்...”

மாலினி தொடர்ந்தார்.

“அப்படி தோனி இருக்க கூடாது...ஆனா வேரி மேல உள்ள பாசம்...கல்யாணம் நிக்க கூடாதுன்னு எங்க பக்கம்லாம்...வேற பொண்ண பார்த்து கல்யாணம் செய்துருவோம்னு  யாரோ பேசுறது காதுல விழவும்....இந்த சூழ்நிலைய பயன்படுத்தி நம்ம வேரிய இந்த மாப்ளைக்கு செய்து கொடுத்துட்டா....பெரிய இடத்துல அவ செட்டிலாயிடுவா.... இந்த அளவுக்கு பெரிய இடம் பாக்க முடியலைனாலும்....மொத்த சொத்தையும் வித்து கொடுத்தா மிர்னிக்கு ஓரளவு பெரிய இடத்தையே முடிச்சுடலாம்னு தோனிட்டு.... இருக்குற பதற்றத்துல வேரிய பத்தி பெருசா விசாரிக்க மாட்டாங்க.... ஏற்கனவே வெளிய யாருக்கும் அவ கால் விஷயம் தெரியாது...இப்டில்லாம் தோனவும் வேரிய பத்தி பேசிப் பாப்போம்னு பேசினேன்.....”

“மாப்பிள்ளயை வேற முட்டாள்னு நினச்சேன்....அதனால ஈசியா ஏமாத்தலாம்னு நினைச்சேன்...சொல்லுங்க...” கவினின் சதியில் இவளை எவ்வளவு எளிதாய் தள்ளிவிட்டார்கள்? கோபமாகவும் வந்தது வேரிக்கு.

“வேரிமா...” என்றார் அப்பா...இது கெஞ்சலா அதட்டலா...?

“ம்...முதல்ல பேச தொடங்குறப்ப ஒரு எதிர்பார்ப்பா இருந்தது,” மிகவும் இறங்கிய குரலில் குற்ற குறுகுறுப்போடு தொடர்ந்தார் மாலினி

“அது நடக்காதுன்னு தெரியவும்.... ரெண்டு பொண்ணுக்கும் இல்லாம போகுதே இந்த இடம்னு ஒரு ஆதங்கம்.... அப்பல்லாம் எங்களுக்கு ஆரம்பத்துல பண வசதி மட்டும் இருந்திருந்தா....வேரி ஒரு நல்ல ஹாஸ்பிட்டல்ல பிறந்திருப்பா...அவ கால் இப்படி ஆகி இருக்காது...அந்த நைட் ப்ரச்சனை வந்தே இருக்காது... .இப்டில்லாம் நான் என் பிள்ளைய பிரிஞ்சு கஷ்ட பட்டிருக்க வேண்டாம்னு எனக்கு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை ......... பணக்காரங்க வீட்லயும் துக்கமும் இழப்பும் வரலாம்னு எனக்கு தெரியலை... ஒரு வசதியான வாழ்வு என் பிள்ளைக்கு வாசல் வரை வந்துட்டு இல்லாம  போறதான்னு... ஒரு வேகம்... முன்னெல்லாம் எனக்கு தெரிஞ்சவரை சந்தோஷமா இருக்க ஒரே வழி பணக்காரங்களா இருக்கிறதுதான்...அதான் ஏமாற்றத்துல ரொம்பவே அதிகமா பேசிட்டேன்..... பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறதுங்கிற மாதிரி....  நான் தப்பு செய்ய என் பண ஆசை காரணமாயிட்டு....வியன் கூட மிர்னி போனதை காரணம்காட்டி அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்துடலாம்னு கூட  எனக்கு அடுத்து தோனிட்டு...மிர்னிட்ட அதை சொன்னதும்தான் அவ வீட்டுக்கே வராம போய்ட்டா.... மன்னிச்சுக்கோங்க மாப்ளை...நான் செய்தது தப்பு...ஆனால் இப்ப அதை சரி செய்ய என்ன செய்ய முடியும்னு தெரியலை....

“ சரி விடுங்க அத்தை....”

கவின் ஆறுதல் படுத்தினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.