(Reading time: 23 - 46 minutes)

" யோ அண்ணா , இப்படி கவிழ்த்திட்டிங்களே  !" என்று சந்தோஷ் அலறும்முன் மகனின் பேச்சை கேட்டு சமயலறையில் இருந்து வேகமாய் வந்தார் ஜானகிதேவி ..

" என்ன சொல்ற கண்ணா , நிஜம்மாவா ?" என்று சுபாஷிடம் வினவினார் ..

" நிஜம்மாத்தான் அம்மா , அதுவும் நம்ம வீட்டு வாரிசை காப்பற்றி , நேரில் பார்க்காமலே உங்ககிட்ட நல்ல பேரு வாங்கின பொண்ணுதான் " என்றான்  சுபாஷ் .. நேற்றிரவு கணவனிடம் என்னவென்று கேட்டதற்கு

" நாளை ஒரு சர்ப்ரைஸ் இருக்கு " என்றிருந்தான் .. அது இதுதான் என்று தெரிந்தவுடன் சந்தோஷத்தில் துள்ளினாள்  சைந்தவி ..

" ஹே சைந்து  பார்த்துடா .. "

" என்னங்க, நான்தான் சொன்னேன்ல எனக்கு சாஹித்யாவை ரொம்ப பிடிச்சிருக்கு .. அவ நம்ம வீட்டுக்கு மருமகளா இருந்தா நல்ல இருக்கும்னு . கடவுள் பாருங்க என் ஆசையை நிறைவேற்றி வெச்சிட்டார்  " என்றாள்  அவள் . மருமகளை வாஞ்சையுடன் பார்த்தனர் ரகுராமனும், ஜானகிதேவியும்  ! வீட்டில் இன்னொரு மருமகள் வந்தால், தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்று உரிமை போராட்டத்தில் அஞ்சும் பெண்களின் மத்தியில் தனக்கு சகோதரியாய் ஒருத்தி வரவிருக்கிறாள் என்று நினைப்பவளின் அன்பு பரிசுத்தமானது அல்லவா ?

" எனக்கு வந்த மருமகளும் , வரபோற மருமகளும் சொக்கத்தங்கம் .. நான் போயி பழனியாண்டவருக்கு  நன்றி சொல்லுறேன் " என்றபடி பூஜை அறையை நோக்கி நடந்தார் ஜானகிதேவி ..

" அட முருகா , அப்போ நான்தான் அவுட்டா ? குடும்பமே நம்ம சின்ன மருமகளுக்கு ஓகே சொல்லியாச்சே , அப்போ நாமும் ஜிங் சக்  போட வேண்டியதுதான் " என்று ரகுராமன் நினைக்கும்போதே அவரது உள்மனம்

" அதான் சின்ன மருமகன்னு சொல்லி நீயே , ஓகே சொல்லிடியே " என்று எள்ளி நகைத்தது .. சந்தோஷமாய் இரு மகன்களையும் அவர் அணைத்து  கொண்டார் .. " ரொம்ப சந்தோசம் கண்ணா , ரெண்டு பெரும் எப்பவும் இப்படியே இருக்கணும் " என்றார்.

" அப்பா , நான் இன்னைக்கு சாஹித்யா வீட்டுக்கு போகலாம் நினைச்சேன் அப்பா , அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிடு வரவா "என்று அனுமதி கேட்டான் சந்தோஷ் ..

" அவங்க வீட்டில் சம்மதம் தந்தா , தாராளமா கூட்டிட்டு வாப்பா .. ஆனா ஒன்னு சந்தோஷ் "

" என்ன அப்பா " என்று கேள்வியாய்  பார்த்த மகனின் தோளில்  கை போட்டுக்கொண்டே நடந்துகொண்டே பேசினார் ரகுராமன் . சுபாஷும் அவர்களை தொடர்ந்து நடந்துவந்தான் ..

" நம்ம அஞ்சு விரலும் ஒரே மாதிரி இல்லை சந்தோஷ் .. அதே மாதிரி தான் மனுஷங்களும் . நம்ம வீட்டு பழக்கவழக்கம் மாதிரி எல்லாரும் இருப்பாங்கன்னு இல்லை சந்தோஷ் .  சாஹித்யாவுடைய அம்மா அப்பா ஸ்ட்ரிக்ட் ஆபிசரா இருக்கலாம் , அல்லது எங்களை மாதிரியும் இருக்கலாம் . எப்படி இருந்தாலும் பார்த்து பக்குவமா நடந்துக்கோ.. உன் செயலால் அந்த பொண்ணுக்கு கெட்ட  பெயரோ மனஸ்தாபமோ ஏற்படவே கூடாது ! என் பையன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு , இருந்தாலும் அப்பான்னு ஒரு ரோல் எடுத்தா கொஞ்சாமாச்சும்  பொறுப்பா பேசனும்ல " என்று தீவிரமாய் ஆரம்பித்த பேச்சை நகைச்சுவையாய் முடித்தார் அவர் .

" ஐ லவ் யூ அப்பா ... கண்டிப்பா உங்க வளர்ப்பு தப்பா போச்சேன்னு பீல் பண்ணுற மாதிரி எப்பவும் நடந்துக்க மாட்டேன் .. அதுவும்  இந்த விஷயத்துல அண்ணாவும் எனக்கொரு எடுத்துகாட்டு தான் அப்பா .. இதுவரை அண்ணா, உங்களுக்கு தலைகுனிவு வருற மாதிரி நடந்துகிட்டதே இல்லை ..நானும் அப்படித்தான் இருப்பேன் " என்றதும் தந்தை , மகன்கள்  இருவரும் விக்ரமன் சார் படத்தில் வர்ற மாதிரி அன்பை மாரியை  பொழிந்தனர் .

" சந்தோஷ் , எனக்கொரு ஐடியா தோணுது , நீ சைந்தவியை கூட்டிகிட்டு சத்யாவை பார்க்க போயேன் ! சைந்தவிதான்  சத்யாவை பார்க்கனும்னு ஆசைப்பட்டது போல இருக்கும் .. அப்பறம் நைட் நாம எல்லாரும் டின்னர் போறோம்ல "

" ஆமா , கிரி அண்ணாகூட காலையில் சொன்னாங்க அண்ணா "

" ம்ம்ம் ரொம்ப நாள் ஆச்சு கண்ணன் பெரியப்ப்பாவை பார்த்து .. ! எல்லாரும் ஒண்ணா  போகும்போது முடிஞ்சா சத்யாவின் குடும்பத்தையும் கூப்பிடு ..  எப்படி ஐடியா " என்று கண்சிமிட்டினான் சுபாஷ். மகனின் திட்டத்தில் வாயை பிளந்தார் ரகுராமன் ..

" எப்படி டா இப்படி எல்லாம் ?"

" ஹா ஹா , என் தம்பிக்காக நான் இதை கூட யோசிக்க மாட்டேனா அப்பா ?" என்று  சிரித்தான் சுபாஷ் ...

காரில்,

" என்ன சந்தோஷ் .. ரொம்ப நெர்வஸா இருக்கியா ?"

" ஆமா அண்ணி .. ! எதுவும் சொதப்பாமல் இருக்கணும் "

" நீ வாயை திறக்காத வரை நிச்சயமா எந்த பிரச்சனையும் இருக்காது சந்தோஷ் . பட் தயவு செஞ்சு சத்யாவை பார்த்ததும் ஓவரா வழியாத .. உன் முகம் பார்த்து யாருக்கும் சந்தேகம் வந்துவிட கூடாது " என்றாள்  சைந்தவி குறும்பாய் ..

" ஹான் .. யாரு யாரை கலாய்க்கிறது ன்னு ஒரு நியாயம் வேணாமா அண்ணி ? நீங்க அண்ணனை சைட் அடிக்காததா ? ஹ்ம்ம் ஏதோ எனக்கு உதவி செய்றிங்க அதுனால அமைதியா இருக்கேன் " என்றவன் பெரிய மனதாய் அவளை மன்னித்தான் ..

இங்கு அருளின் கைகளை  பிடித்துகொண்டு தனது மொத்த உணர்வுகளையும் கொட்டி தீர்த்துவிட்டாள்  சாஹித்யா ..

" இதுதான் நடந்தது அருள் .. சந்தோஷை தவிர யாருமே என் மனசுல இப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வரவில்லை .. இதுக்கு பேருதான் காதல்ன்னா நான் சந்தோஷை உயிருக்குயிரா காதலிக்கிறேன் .. ஆனா இதெல்லாம் விட எனக்கு எங்க நாம பிரிஞ்சிடுவோமோன்னு பயம்மா இருக்கு அருள் ..  " என்று அவன் தோள்  சாய்ந்தாள்  அருள் .. தன் மனதில் இருக்கும் எண்ணங்களை சொல்வதற்கு இதுவே சரியான தருணம் என்று நம்பினான் அருள் ..  தன் தோளில்  சாய்ந்திருந்தவளின்  கூந்தலை கோதியபடியே பொறுமையாய் குழந்தைக்கு அறிவுரை கூறுவது போல எடுத்து சொன்னான் அருள் ..

" இது பாரு அம்மு .. நீயும் நானும் ஒரே வீட்டில் தான் வளர்ந்தோம் , நமக்கு வேறு வேறு அம்மா அப்பான்னு இதுவரை நினைச்சதே இல்லை .. நம்மளை நாம என்னைக்கும் பிரிச்சு பார்த்தது இல்லை .. ஆனா நீங்க ரெண்டுபேரும் அண்ணன் தங்கச்சியான்னு கேட்டா நமக்கு எவ்வளவு கோவம் வரும்ன்னு ஞாபகம் இருக்கா ? அதுக்கு காரணம் நம்ம நட்பு தானேடா ? நட்பு என்ற உறவே போதுமானதாக இருக்கும்போது அதை மத்தவங்க வேறு பெயர் வெச்சு கூப்பிடறது நமக்கு பிடிக்கல .. இது சரியான விஷயம்தான் .. ஆனா நம்ம நட்பை தவிர மற்ற எல்லா உறவுமே உயர்ந்தது இல்லைன்னு நினைக்கிறது எந்த வகையில் சரியாகும் சொல்லு ?"

" ..."

"  நம்ம, அம்மா அப்பாவை எடுத்துக்கோ அர்ஜுனப்பாவும் ரவியப்பாவும் ப்ரண்ட்ஸ்  தானே ? அவங்க என்ன கல்யாணத்துக்கு பிறகு பிரிஞ்சா போயிட்டாங்க ?  நீ சொல்றமாதிரி அவங்க ரெண்டு பேருமே ஆண்கள் அதுனாலதான் சேர்ந்து இருக்கிறாங்கன்னு வெச்சுக்குவோம் .. சுமிம்மா ரவியப்பாகிட்டயும் சுஜிம்மா அர்ஜுனப்பாகிட்டையும் அன்பு பாராட்டுறது இல்லையா ?  சொல்லபோனா, ஏதோ கூடவே பிறந்த அண்ணன் தங்கை மாதிரி தானே இருவரும் பழகுறாங்க ? நாளைக்கு என் வருங்கால மனைவியை  உன்னை அக்க மாதிரியும் நான் சந்தோஷை சகோதரன் மாதிரி பார்த்தாலே பிரச்சனை  வராதா ? ஆணும் பெண்ணும் பேசினா காதல்ன்னு சொல்லுற காலத்தில் நாம இருக்கலாம் .. ஆனா ஒரு காலத்தில் பெண் என்பவள் ஆணை நிமிர்ந்தே பார்க்க கூடாதுன்னு சொன்ன நிலையில் நாம இல்லையே .. சந்தோஷ் என்ன அந்த காலத்து கிழவனா ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.