(Reading time: 25 - 49 minutes)

'ப்பான்னு கூப்பிட்டேன். இது சும்மா செண்டிமெண்ட்டுக்காகவோ இல்லை நீங்க இதுக்கு மேலே எதுவும் செய்யாம இருக்கறதுக்காகவோ இல்லை. சத்தியமா இல்லை.  எனக்கு கேமரா முன்னாடி மட்டும்தான் நடிச்சு பழக்கம்'

அவன் பேச பேச மூச்சடைப்பது போல் இருந்தது அரவிந்தாட்சனுக்கு. தொடர்ந்தான் சஞ்சா.  

எனக்கும் அப்பா இல்லை. அதனாலே இதுக்கு முன்னாடி நடந்தது எல்லாத்தையும்...... எல்லாத்தையும் மறந்திட்டு அஹல்யாவுக்கு தாலி கட்டின நிமிஷத்திலே இருந்து உங்களை என் அப்பாவா ஏத்துகிட்டேன். நீங்களும் என்னை மகனா பார்ப்பீங்கன்னு நம்பறேன். இதை உங்ககிட்டே சொல்லத்தான் கூப்பிட்டேன்' அழகான புன்னைகயுடன் அழுத்தம் திருத்தமாக, அவர் முகத்தை நேருக்கு நேராக பார்த்து சொல்லி விட்டு, அவர் கைகளுக்கு அன்பாலே ஒரு விலங்கிட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் சஞ்சா.

அவனிடமிருந்து கனவிலும் இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்த்திருக்கவில்லை அரவிந்தாட்சன். கால்கள் அந்த இடத்திலேயே வேரூன்றி விட்டதை போல் வெகு நேரம் அப்படியே நின்றிருந்தார் அரவிந்தாட்சன்.

எல்லாம் சரி ஆகி விட்டாதென்ற நிம்மதி அவனுக்குள்ளே. தீக்ஷா ரிஷியிடம் ஒட்டிக்கொண்டது கூட ஒரு வகையில் நல்லது தான். அவள் சேர வேண்டிய இடம் அதுதானே. இந்த நிமிடம் வரை தீக்ஷா ரிஷியின் குழந்தை இல்லை என்பதை நிரூபிப்பதை விட இந்த விஷயங்களை அப்படியே புதைத்து விடுவதையே விரும்பினான் சஞ்சா. ஒரு வேளை உண்மைகள் தெரிந்தால் தான் சந்திரிக்காவின் வயிற்றில் பிறந்தவன் இல்லை என்ற வலி அவனது நண்பனை காலத்துக்கும் புன்னகைக்க விடாமல் செய்து விடாதா???

கூடத்தில் உறவினர்கள் கூட்டம் நிறைந்திருக்க யோசித்தபடியே சமையல் அறைக்குள் நுழைந்தான் சஞ்சா.

'ஜானகிமா....' அழைத்தான் அவன். அழகான புன்னகையுடன் திரும்பினார் அவர். அவர் தான் ரிஷியை பெற்ற அன்னை.

கடந்த ஒன்றரை வருடங்களாக அந்த வீட்டின் சமையல் வேலை செய்துக்கொண்டிருக்கிறார் ஜானகி. அம்மாவுக்கு முட்டு வலி வந்த பிறகு வீட்டு வேலைகள் முழுக்க முழுக்க ஜானகி அம்மாவின் பொறுப்புதான்.

வீட்டில் நிறைய வேலை ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவாராக ஜானகி அம்மாவை அவனால் பார்க்க முடியவில்லை. அவருடைய அன்பு அவனை ரொம்பவுமே ஆட்கொண்டிருந்தது.

'ஜானகிமா... நாளைக்கு சமையல் முழுக்க உங்க கையாலே தான் இருக்கணும். உங்க கை மணம் யாருக்கு வராது. நாளைக்கு நான் ரிஷியை சாப்பிட வர சொல்லி இருக்கேன். அவன் உங்க சமையலை சாப்பிட்டு அப்படியே அசந்து போய் நிக்கணும்.' சொன்னான் சஞ்சா. அவர் தான் ரிஷியை  பெற்றவள் என்று தெரியாமலே சொன்னான் சஞ்சா.

மெல்ல தலை அசைத்த ஜானகிக்கு பேச்சே வரவில்லை. 

சஞ்சா ரிஷியின் உயிர் நண்பன் என்று தெரிந்துதான் இந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்தார் ஜானகி. அவ்வபோது மகனை பற்றிய செய்திகள் யார் மூலமாவது அவர் காதை  எட்டும் போது கிடைக்கும் மகிழ்வே அவருக்கு போதுமானதாக இருந்தது. அவர் வேலைக்கு சேர்ந்ததிலிருந்து இந்த வீட்டுக்கு  ரிஷி வந்ததில்லைதான்.

''எத்தனை வருடங்கள் ஆகி இருக்கும்.???? என் கையால் என் மகன் சாப்பிட்டு எத்தனை வருடங்கள் ஆகி இருக்கும்???' நாளை வரப்போகிறானா என் மகன்???? என் கையால் சாப்பிடவும் போகிறானா??? அவர் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்கவில்லை.

ரவு. அவர்களது அறையில் ரிஷியின்  மடிக்கணினியில் குழந்தைக்கு ஏதோ ஒரு கார்டூனை ஓட விட்டு காட்டிக்கொண்டிருந்தாள் அருந்ததி. அப்போது கை நிறைய பொருட்களுடன் அறைக்குள் வந்தான் ரிஷி. 'பட்டு செல்லம்... ஓடி ஓடி வா' என்றபடி. அவன் பின்னாலேயே வந்தனர் சந்திரிக்காவும் ராமனும்.

'இந்த கிஃப்ட்ஸ் எல்லாம் என் பொண்ணுக்கு தான்...' சொல்லியபடியே எல்லாவற்றையும் கட்டிலின் மீது போட்டான் அவன். அங்கே குழந்தைக்கான உடைகளும், விளையாட்டு பொருட்களும் நிறைந்து இருந்தன. தீக்ஷாவிடம் உற்சாகம் பொங்கியது.

குழந்தையுடன் குழந்தையாக மாறி அவன் விளையாடிக்கொண்டிருக்க, அவன் ஒவ்வொரு முறை 'என் பொண்ணு.... ' என்று சொல்லும் போதும்... ' நீ அப்பா பொண்ணுடா' என்று சொல்லும் போதும்... சந்திரிக்காவின் முகத்தில் ஓடி மறையும் அந்த தவிப்பை கவனிக்க தவறவில்லை அருந்ததி.

'ரிஷி அவனது ரத்த பந்தகளிடம் உறவு கொண்டாட கூடாது' என்று நினைக்க கூடியவர் இல்லை சந்திரிகா என்ற போதிலும், ரிஷியின் அம்மா என்ற ஸ்தானத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்ற தவிப்பு அவரிடம் இருப்பதில் நிறையவே நியாயம் இருப்பதாகவே தோன்றியது அருந்ததிக்கு.

நீ... என்... அம்மா இல்லை...' நேற்று தீக்ஷா சொன்ன போது சந்திரிக்காவுக்கு எழுந்த கோபமும் அதனாலேயே என்று புரிந்திருந்தது அருந்ததிக்கு. அது ஏதோ ரிஷியின் உதடுகள் வழி வெளி வந்த வார்த்தைகளாகவே அவர் நினைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.