(Reading time: 25 - 49 minutes)

ந்திரிகா தனது கணவரிடம் புலம்பிய அந்த வார்த்தைகளும் அவளுக்குள்ளே ஓடிக்கொண்டே இருந்தது, 'நான் சொல்ல மாட்டேன் அவன்கிட்டே... என் வாயாலே சொல்ல மாட்டேன்... என் பையன்.... என் உயிர் அவன்......  நானே எப்படி அவன்கிட்டே போய் நீ என் வயித்திலே பிறந்த பையன் இல்லைடான்னு எப்படி சொல்லுவேன். உன்னை பெத்தவ இப்போ உயிரோட இல்லைடா. இது உன் கூட பிறந்த அண்ணனோட குழந்தைடான்னு எப்படி சொல்லுவேன். உன்கிட்டே இருந்து இதை இத்தனை நாளா மறைச்சிட்டேன்டா எப்படி சொல்லுவேன்? துவண்டு போயிடுவான் அவன். மாட்டேன். கண்டிப்பாமாட்டேன்....'

கண்களை மூடித்திறந்து ஒரு பெருமூச்சை வெளியிட்டாள் அருந்ததி. 'இது ரிஷிக்கு தெரியாமல் இருப்பதே நல்லது' என்றாள் தனக்குள்ளே

.'அதான் சஞ்சா எல்லாத்தையும் பார்த்துக்கறேன்னு சொல்லி இருக்கானில்லையா? அவனே பார்த்துக்கட்டும். அவன் சரியா செய்வான்..' நேற்று சந்திரிகா சொன்னாரே. அப்படி என்றால் சஞ்சாவுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்திருக்க வேண்டுமோ? அவனது திடீர் திருமணதிற்குமே இதுவும் ஒரு வகையில் காரணமோ?.

'எத்தனை அழகான நண்பன் அவன். பார்த்துக்கொள்வான் அவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான்' தன்னாலே ஏதோ ஒரு நிம்மதி பரவியது அவளுக்குள்ளே

ஆனால் அவள் அறிந்திருக்கவில்லை. ரிஷியை பெற்றவள் உயிரோடிருக்கிறாள் என்று அவள் அறிந்திருக்கவில்லை. அதை அறியாமல் நாளை சஞ்சாவே அவரை இவர்களிடமே கொண்டு வந்து விட்டு செல்லப்போகிறான் என்று தெரிந்திருக்க வில்லை அவளுக்கு.

சில நிமிடங்கள் குழந்தையுடன் விளையாடி விட்டு அப்பாவும் அம்மாவும் உறங்க சென்று விட தனது கன்னத்தில் கை வைத்துக்கொண்டு ஏதோ யோசனையுடன் தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் மனைவியின் முன்னால் வந்து அமர்ந்தான் ரிஷி.

அவனது மடியில் இருந்தாள் தீக்ஷா. அவனது குறுகுறு பார்வையில் கலைந்து கணினியில் கண்களை பொருத்திக்கொண்டாள் அருந்ததி.

'அப்பா....' என்றது குழந்தை 'அம்மாக்கு என்ன கிஃப்ட்.???'

'அம்மாக்கா???" என்றபடி அவன் அவள் முகம் பார்க்க 'உங்கப்பா எனக்கு கிஃப்ட் எல்லாம் வாங்கி தரமாட்டாரு' என்றாள் கணினியில் இருந்து பார்வையை விலக்காமல்

.'அடிப்பாவி..... நீ தானேடி சொன்னே  இந்த பூ புடலங்காய் இதெல்லாம் வாங்கிட்டு என் பின்னாடி வரக்கூடாதுன்னு...' தனக்குள்ளே சொல்லிக்கொண்டவன்...

'பட்டு பாப்பா... அம்மாக்கும் ஒரு கிஃப்ட் வெச்சிருக்கேன். அம்மா முன்னாடி ஒரு தடவை எனக்கிட்டே வேணும்னு கேட்ட கிஃப்ட். அது என் பாக்கெட்லே இருக்கு. இப்போ வெளியே எடுத்திடலாமா???' என்றான் அவளை பார்த்தபடியே  

'என்னதாம் அது?' அவளுக்குள் ஆர்வம் பிறக்க தவறவில்லை. எப்படியும் நிமிர்வாள் என அவன் காத்துருக்க ஆர்வம் தாளாமல் கொஞ்ச நேரத்தில் அவள் மெல்ல மெல்ல விழி நிமிர்த்த தனது பாக்கெட்டிலிருந்து அதை வெளியில் எடுத்து வைத்தான் ரிஷி. அது ஒரு மெஹெந்தி கோன்..

'அம்மா கிஃப்ட்...' அதை எடுத்து அவளிடம் நீட்டியது தீக்ஷா.

சின்ன புன்னகையுடன் அதன் கன்னம் வருடி சொன்னாள் அருந்ததி 'எனக்கு இப்போ வேண்டாம்டா அங்கே வெச்சிடு...'

'படப்பிடிப்பு இடைவெளியில் நடிகை ஆத்ரிக்காவின் கையில் மருதாணி கோலம் வரைந்த முனிவரான நடிகர். படபிடிப்பு இல்லாத நேரங்களிலும் இருவரும் ஒன்றாக இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இலவு காத்த கிளியானாரா வசிஷ்டர் மனைவி.????'

இப்படிதான் ஒரு முறை அவனுடன் சேர்ந்து நடித்துக்கொண்டிருந்த நடிகை ஆத்ரிக்காவுடன் அவனை இணைத்து கிசுகிசுக்கள் பரவின. கிசுகிசு பற்றியெல்லாம் கவலை பட்டுக்கொண்டிருப்பவள் இல்லைதான் அருந்ததி. ஆனாலும் அவன் தனது கையில் மருதாணி கோலமிட்டால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தை அவளால் தடுக்க முடியவில்லை.

'நீ அவளுக்கு போட்டு விட்டியோ இல்லையோ எனக்கு தேவை இல்லை. என் கையிலே இப்போ டிசைன் போட்டு விடறே' ஒரு முறை கையில் கோனுடன் அவனுடன் மன்றாடியது நினைவிலாடியது. அப்போது கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை அவன்.

'எதுக்கு? உன்னையும் என்னையும் சேர்த்து பேப்பர்லே வர்றதுக்கா??? வாய்ப்பே இல்லை.   எப்பவாவது சூரியன் மேற்கு பக்கம் உதிக்கும் போது நான் உன்னை லவ் பண்றேன்னு எனக்கு தோணிச்சுன்னா. அப்போ நானே மருதாணி கோனோட உன் கிட்டே வரேன் இப்போ ஆளை விடு...'

அதை ஞாபகம் வைத்துக்கொண்டு இப்போது அதை கொண்டு வந்திருக்கிறான் அவன். அவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு மறுபடியும் கணினியில் புதைந்துக்கொண்டாள். யூ ட்யூப்பில் ஏதேதோ பாடல் காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். ஆனால் மனம் அதில் நிலைக்கவில்லை.

'நீ போட்டு விடறேன்னு சொன்னா நான் கை நீட்டிட்டு வந்திடணுமா. இப்போ என்ன சூரியன் மேற்கு பக்கம் உதித்து விட்டதாமா???? எனக்கு இப்போ உன்னை லவ் பண்ற மூட் இல்லை போடா. இருக்கிறது ஒத்த கை அதிலே மருதாணி ஒண்ணு தான் கேடு...' பொங்கிய மனது தனக்குள்ளே புலம்பியது. ஆனால் அவள் கோபம் எப்போதுமே சில நிமிடங்களுக்கு மேல் தாக்கு பிடிக்காதே???

'அப்பா ... அம்மாக்கு கிஃப்ட் வேண்டாமாம்...'

'சரி விடுடா... நீ அதை அங்கேயே வெச்சிடு. நாம இப்போ தூங்கலாம்...' குழந்தையை  உறங்க வைக்கும் வேலைகளை ஆரம்பித்தான் ரிஷி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.