(Reading time: 20 - 40 minutes)

மோகனை பார்ப்பதற்கும், அவரின்பால் கவர்வதற்கும் புகழுக்கு ஒரு நொடி தேவைப்பட்டது என்றால், மோகனுக்கோ அவனை ஆராய அரை நொடியே போதுமானதாய் இருந்தது. வாழ்க்கை தந்த அனுபவமே இதற்கு காரணம். ! அடுத்த நொடியே ஸ்னேகமாய் புன்னகைத்தார் அவர். மின்னல் போல தோன்றியது அவர் முகத்தில் புன்னகை .. அதைக் கண்டதும்தான் நிம்மதியாய் மூச்சு விட்டாள் யாழினி.

“ சாரிப்பா” என்று யாழினி பேச ஆரம்பிக்க இடைப்புகுந்தான் புகழ்.

“ சாரிப்பா.. ட்ராஃபிக் ஜாஸ்தியா இருந்துச்சு ..அதான் லேட்” என்றான் அவன். அவன் தோளில் தட்டி கொடுத்தபடி,

“ இட்ஸ் ஓகே .. இந்த நேரத்துல நம்ம ஏரியா அப்படித்தான் இருக்கும். நீங்க ரெண்டு பேரும் வருவதற்கு லேட் ஆகும்ன்னு தெரியும்.. உள்ள வா புகழ்” என்றார். “ஆ” வென வாயை பிளந்து கொண்டு பார்த்தாள் யாழினி. அவள் பாவனையில் புகழுக்கு சிரிப்புத்தான் வந்தது.

“ இல்லப்பா ரொம்ப லேட் ஆச்சு.. நான் கிளம்புறேன்”

“ ஏன்? வெளில சாப்டிங்களா என்ன?”

“ இல்லையேப்பா” என்றாள் யாழினி.

“ அப்பறம் என்ன? நீயும் இன்னும் சாப்பிடல தானே புகழ் ? வந்து சாப்டு.. யாழினிக்கு ஒரு வாரமாய் நைட் சாப்பாடு கட் பண்ணிட்டேன்னு இன்னைக்கு விருந்தே ரெடி பண்ணிருக்கேன்.. உன்னை விட்டுட்டு எல்லாத்தையும் அவளே ஃபுல் கட்டு கட்டிடுவா! பரவாயில்லையா?” என்று குறும்பாய் கேட்டார்மோகன். முதன்முறையாய் இன்னொருவனிடம் தன் தந்தை இவ்வளவு இயல்பாய் பேசுவதை இப்போதுதான் காண்கிறாள் யாழினி.

“ போதும் யாழி.. நைட் டைம்ல கொசு ஜாஸ்தியா இருக்கும்! எல்லாம் உன் வாயில புகப்போகுது” என்று மோகனின் முன் நின்று கொண்டே அவளை வாரினான் புகழ். அவன் சொன்னதை ஆட்சேபிக்காமல் கண்களில் சிரிப்புடன் மகளை பார்த்தார் மோகன்.

“ அப்பா!!”

“ சொல்லும்மா?”

“ உங்களுக்கு புகழை ஏற்கனவே தெரியுமா?”

“ இல்லையே ஏன்?”

“ இல்ல, இவ்வளோ இயல்பா பேசுறிங்களே!” என்று ஆச்சர்யமாய் கேட்டாள் யாழினி. மோகனோ புகழை சந்தேகமாய் பார்த்தபடி

“ இவன் உன் ப்ரண்ட் தானே?” என்று கேட்டார்.

“ ஆமா அப்பா”

“ என் பொண்ணுக்கு ப்ரண்ட்னா எனக்கு எதிரியாகவா இருக்க முடியும்? எனக்கு நீ எப்படியோ அப்படித்தானே புகழும் ?” என்று இதெல்லாம் ஒரு விஷயமா என்பது போல கேட்டு வைத்தார் அவர். ஒரே ஒரு கேள்வியில் இளையோர் இருவரின் மனதிலும் உயர்ந்து நின்றிருந்தார் மோகன்.

அவர்தான் இப்படித்தான் ! இதுதான் அவரின் உண்மை சுபாவம். மோகன் கறார் பேர்வழித்தான், தன் மகளின் வாழ்க்கை சீராக அமைய வேண்டும் என்பதற்காக அனேக நேரங்களில் கடுமையாகத் தென்படுவார்.. ஆனால் அவரின் அன்பு, அவரின் இலக்கு,அவரின் வாழ்நாள் தவம், அவரின் லட்சியம் எல்லாமே யாழினிதான். அதை உணர்ந்திருந்தாலும் சில நேரம் குழம்பித்தான் போய்விடுவாள் யாழினி.. அவள் அப்படித்தான் !

அதன்பின் அதிகமாய் பேசாமல், தனது தந்தையும், புகழும் பேசிக்கொள்ளும் அழகை ரசித்து கொண்டிருந்தாள் யாழினி. புகழுமே அவருடன் பேசும்போது மிகவும் நிம்மதியாய் உணர்ந்தான்.அவன் வாழ்வில் தந்தை என்ற அத்தியாயம் பாதியிலேயே எழுத்தப்படாமல் இருந்தது. இன்றோ அது பூரணத்துவம் பெற்றது போல இருந்தது அவனுக்கு.

“ தனியாகவா? நீ வீட்டில் தனியாகவா இருக்க ? அம்மா உன் கூட இல்லையா புகழ்? போன வாரம் உன் அம்மவை மீட் பண்ணினதா யாழினி சொன்னாளே”

“ அம்மாவுடைய பூர்வீகமும், அப்பா கடைசியா வாழ்ந்த நாட்களும் டெல்லில தான்பா. அதனால அம்மாவுக்கு என்னோடு இங்க தங்குறதுக்கு மனசே இல்ல.. அப்பப்போ வந்து என்னை பார்த்துட்டு போவாங்க!”

“ அப்போ நீ எங்களோடவே தங்கிடு.. எதுக்கு தனியா இருக்குற? இந்த வயசுல அளவுக்கு மீறி தனியா இருக்க கூடாது.. உனக்கு பிடிச்சா நீ இங்கயே இருக்கலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்றார் மோகன். அவர் அப்படி சொல்வார் என்று இருவருமே எதிர்ப்பார்க்கவில்லை. யாழினிக்கும் ஒரு பக்கம் பூரிப்பு,இன்னொரு பக்கம் தனது நட்பினை சந்தேகிக்காமல் அங்கீகரித்த தந்தை மீது பெருமையாய் இருந்தது.

“ சரிப்பா.. அப்பப்போ நான் வந்து தங்கிட்டு போறேன்”. புகழிடம் இருந்து உற்சாகமான குரலில் பதில் வந்தது அவர் சொன்னதை எதிர்க்கும் எண்ணம் அவனுக்கு துளியளவே வரவில்லை. சில நிமிடங்களில் வாழ்வே அழகாகிவிடுமா ? இதோ இங்கு யாழினி,புகழ் இருவரின் வாழ்வுமே சந்தோஷத்தில் தான் துள்ளியது.

இன்னும் சில நிமிடங்கள் யாழினியின் வீட்டில் இருந்துவிட்டு கிளம்ப எத்தனித்தான் புகழ். மோகன் அவனுக்கு அங்கேயே விடைகொடுக்க, அவனை அனுப்பிவைக்க வாசல் வரை நடந்து வந்தாள் யாழினி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.