(Reading time: 20 - 40 minutes)

வனைப் பார்க்கும்போதெல்லாம் ஓரிண்டு வார்த்தைகளாவது பேசிவிடுபவள், இன்று கண்டுக்கொள்ளாமல் போவது புகழுக்கு முதல் அதிர்ச்சி என்றால்,அவள் இந்நேரத்தில் கண்ணீருடன் வீட்டை விட்டு வெளியேறி நடப்பது அவனுக்கு கூடுதல் அதிர்ச்சி. ஏதோ சரி இல்லை என்று உணர்ந்தவனாய் அவளை முன்னே நடக்கவிட்டு பொறுமையாய் நடந்தான் அவன். அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்த ஆயிஷா முகத்தை மூடிக் கொண்டாள். சில நொடிகள் தூரத்தில் இருந்தபடி அவளையே பார்த்தான் புகழ். அவளின் சோகம் அவனது மனதைப் பிசைந்தது.

மெல்ல அவள் அருகில் சென்றான்.

“ இந்த நேரத்தில் இங்கென்னம்மா பண்ணுற?” . அவனது கனிவான குரலில் நிமிர்ந்தாள் ஆயிஷா. அவன் கண்களை தவிர வேறு எதையுமே அவளால் கவனிக்க முடியவில்லை. வலி நிரம்பிய பார்வையை பார்க்கும் இவன் யார் ? என்ற கேள்வி மனதில் எழுந்தது. ஆனால், இப்போது அதை தெரிந்துகொண்டு அவள் என்ன செய்ய போகிறாள் ? மீண்டும் விரக்தி! அவன் விழிகளை மீண்டும் சந்திக்க விரும்பாமல் அவள் முகத்தை திருப்பி கொண்டாள்.

தாமதிக்கவில்லை அவன்! அடுத்த நொடியே அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான் புகழ். “ வீட்டுல ஏதும் பிரச்சனையா? எதுவா இருந்தாலும் இப்படித்தான் வெளில வருவியாம்மா ? இங்க எவ்வளோ ஆபத்து இருக்கும்னு யோசிச்சியா? யார் உன்னை அழ வெச்சது ? அவங்க சார்பாய் நான் உன்கிட்ட சாரி கேட்கவா?” ஏதோ சின்ன பிள்ளையை சமாதானப்படுத்துபவன் போல மண்டியிட்டு பேசியவன் அவள் மனதில் லேசாய் நம்பிக்கை எனும் விதையை விதைத்திருந்தான். “இவன் நல்லவன்” என்ற எண்ணம் அவள் மனதில் தோன்றியது.

“ நீ யாரு” என்றாள் ஆயிஷா. அவள் எப்போதுமே அவனிடம் இடக்குமடக்காய் கேள்வி கேட்பவள்தான். அதனால், “நீ யார்” என்ற கேள்வியை கூட, “ மன்னிப்பு கேட்க நீ யார்” என்று அவள் கேட்கிறாள் என்று எண்ணிக் கொண்டான் அவன். உடனே கனிவான புன்னகையுடன்,

“நானா? நான்.. உன்னோட.. ப்ரண்டுன்னு நெனைச்சிக்கோ” என்றான் எப்போதும் சொல்வது போல. ஆயிஷாவின் கண்களில் மின்னல் தோன்றி மறைந்தது. அவளுக்கு பிடித்த உறவு நட்பு. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவளுக்கு யாரை நம்பவேண்டும் என புரியவில்லை. “ஏதாவது ஒரு முடிவு எடுத்து தானே ஆகவேண்டும் ? இவனை நம்பினால்தான் என்ன? அப்படியே என் பெண்மைக்கு தீங்கு வந்தால் உயிரையும் மாய்த்துக் கொள்வேன்”என்று நினைத்தவளாய்,

“ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறியா?” என்றாள். அவள் உரிமையாய் உதவி கேட்கவும் இப்போது அவன் விழிகளில் மின்சாரம் பாய்ந்தது. அவனின் ஆயிஷா முதன்முறையாய் அவனிடம் உதவி கேட்கிறாள்.. அவன்தான் உயிரையே கொடுக்கவும் தயாராய் இருக்கிறானே!

“என்ன சொல்லு” என்றான் ஆவல் நிறைந்த குரலில்.

“ என்னை பீச்சுக்கு கூட்டிட்டு போக முடியுமா?”

“ ஓ கண்டிப்பா.. நாளைக்கு போகலாம்”

“இல்ல.. இப்போவே போகனும்..”

“ இப்போ மணி என்ன தெரியுமா? இது பேய்கள் வாக்கிங் போற டைம்”

“ எனக்கு பேய்கள் மேல பயமே இல்ல.. ஆனா மனுஷங்களை பார்க்கத்தான்..” என்று சொன்னவள்,

“ ப்ளீஸ்..” என்று கெஞ்சினாள்.

“ சரி உன் அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டு போகலாம் வா” என்று புகழ் எழுந்துகொள்ள,

“ அவங்க என் அப்பா அம்மா இல்ல..உன்னால் கூட்டிட்டு போக முடிஞ்சா கூட்டிட்டு போ.. இல்லன்னா நானே பார்த்துக்குறேன்” என்று கோபமாய் சொன்னாள் ஆயிஷா.

“ சரி சரி கூல்… வா போகலாம்” என்றவன் அவளை விட வேகமாய் நடந்து முன்னேறினான்.அவள் தனது பைக் அருகே வர இருந்த அந்த சில நொடிகளில் ஆயிஷாவின் அப்பாவிற்கு தகவலை குறுந்தகவல் மூலமாக சொல்லி இருந்தான்.

“போகலாமா?” என்று அவன் கேட்க “ம்ம்” என்றபடி அவனுடன் கிளம்பினாள் ஆயிஷா.

கடற்கரை..!

விரல்விட்டு எண்ணிடும் அளவிற்கே மக்கள் இருந்த பகுதியில் ஆயிஷாவுடன் நடந்து கொண்டிருந்தான் புகழ். எத்தனையோ நாட்கள் இந்த நாளுக்காக அவன் காத்திருந்தான். தன்னருகில் இருப்பது பெரிய புதிர் என்பதை புரியாமல் அவன் சந்தோஷமான மனநிலையில் இருந்தான்.

“கடல்ன்னா உனக்கு ரொம்ப பிடிக்குமா?”

“ கடல் எனக்கு இன்னொரு வீடு..”

“அப்படியா இதுவரை நீ இதை சொன்னதே இல்லையே.. அதுசரி, நீ இன்னைக்குதான் என்கிட்ட இவ்வளவு நீளமாக பேசி இருக்க” என்றான் அவன் துள்ளலுடன். அவன் பேச்சு அவளுக்கு துளியும் எரிச்சலை தரவில்லை.. காரணம் ஒருமுறை கூட அவளை அவன் “ ஆயிஷா” என்று அழைக்கவில்லை..

காரணம் அவள் ஆயிஷாவே இல்லை! அது யார் என்பதே அவளுக்கு தெரியாது. நம்மை யாராவது வேறு பெயர் சொல்லி அழைத்துக் கொண்டே இருந்தால் எவ்வளவு கோபம் வரும் ? சற்றுமுன் அவளுக்கு அப்படித்தான் இருந்தது. இப்போது புகழ் அவள் பெயரை அழைக்காமல் பேசவும் அவளின் கோபம் கொஞ்சம் தணிந்திருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.