(Reading time: 20 - 40 minutes)

ன் அக்கறை எனக்கு புரியுது புகழ்.. என்னை நம்பு.. நான் தப்பான முடிவு எடுக்க மாட்டேன்..என் சக்திக்கு மீறினது மேல ஆசையும் பட மாட்டேன்.. அப்படியே தமிழ் என் வாழ்க்கையின் தப்புன்னு உனக்கு தோணினா, அதை சரியாய் மாத்தவேண்டியது என் கடமை .. நல்லா யோசிச்சு பாருடா.நம்ம வாழ்க்கையில ஏதோ ஒரு கட்டத்துல மத்தவங்களுக்கு முரண்பாடாக தெரியுற விஷயம் நமக்கு சரின்னு படும். அப்போ நாம மத்தவங்க பேச்சை கேட்டு பின்வாங்கிட போறோமா?அல்லது நம்ம மனசு சொல்றத கேட்க போறோமா? அங்கத்தான் இருக்கு வாழ்வின் ஸ்வாரஸ்யம்.” என்று சித்தாந்தம் பேசினாள் யாழினி. அவள் “ முரண்பாடு” என்று சொன்னதும் புகழின் அகக்கண்களில் தோன்றி சிரித்துவிட்டு போனாள் ஒரு பெண். அவளின் நினைவலைகள் லேசாய் மனதில் எழுந்திட, யாழினியிடம் வெறும் புன்னகையுடன் விடைப்பெற்றான் புகழ்.

அதே இனிய இரவில், தன் வீட்டில் அமர்ந்திருந்தாள் ஆயிஷா. இரவு உணவை முடித்துவிட்டு அவள் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள். சிந்துபைரவி திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். படத்தில் மூழ்கி போயிருந்தவளை அடிக்கடி தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டனர் அவளின் அன்னை தந்தை இருவரும். அவள் எந்த ஒரு சலனமும் இல்லாமல் படம் பார்ப்பதை கண்டவர்களுக்கு மனதில் நிம்மதி உண்டானது.. ஆனால் அந்த நிம்மதியின் ஆயுட்காலம் மிக சொற்பநொடிகளே!

“ மோகம் என்னும்” என்ற பாடல் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் பல உணர்வுகள் வந்து வந்து போயின. அந்த பாடல் காட்சியில், அடங்காமல் பாறைகள் மீது பாய்ந்திடும் கடல் அலைகளை காணும்போது அவளின்மண்டைக்குள் யாரோ “ஓ”வென கத்துவது போல இருந்தது.உடல் எல்லாம் வெடவெடத்து, முகத்தில் வியர்வை துளிகள் வழிய, அவள் கண்களுக்குள் ஏதேதோ காட்சிகள் தோன்றி மறைந்தன. தலையை இறுக பற்றிக்கொண்டு கண் மூடி அமர்ந்திருந்தாள் ஆயிஷா.

வினாடிகள் நிமிடங்களாய் கரைந்து போக, அவளின் விழிகளில் இருந்து கண்ணீர் துளிகள் அடங்காமல் துளிர்த்தன. சுத்தியில் யாரோ தலையில் அடிப்பது போல இருந்தது. அவள் இயல்புநிலைக்கு திரும்பாமலே மயங்கி தரையில் விழுந்து கிடந்தாள்.

“தொப்”பென கேட்ட சத்தத்தில் அவளின் அன்னை தந்தை இருவருமே ஓடி வந்தனர்.

“ ஆயிஷா.. ஆயிஷாம்மா..என்ன ஆச்சு ?” என்று அவள் தந்தை பதற..

“போச்சுங்க..என்னமோ ஆச்சு..அவ நம்மல விட்டு போகப்போறா!” என்று கண்ணீர் வடித்தார் அவளின் தாய்,

“ஷ்ஷ்ஷ..முட்டாள் மாதிரி பேசாத.. தண்ணி கொண்டு வா” என்று மனைவியை அதட்டியவர், அவளை சோபாவில் படுக்க வைத்தார். அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து ஈர்த்துணியால் அவள் முகத்தை துடைத்துகொடுக்க, கண் விழித்துக் கொண்டாள் ஆயிஷா.

அவள் எதிரில் இருந்த இருவரையும் மேலிருந்து கீழ் என குழப்பத்துடன் ஆராய்ந்தாள் அவள்.

“ ஆயிஷாம்மா.. உனக்கு என்னாச்சுடா ? டாக்டர் பார்க்க போலாமா?” என்று பதறினாள் அவளின் தாய்.

“ நிஷா.. கொஞ்சம் அமைதியா இரு” என்று மனைவியை அதட்டினார் அவரின் கணவர்.

“ இது..இது என்ன இடம் ? நான் ஏன் இங்க இருக்கேன்.. நீங்க யாரு?” என்றாள் ஆயிஷா.. அவளுக்குள் பெரிய பிரளயமே உண்டானது. தலை பாரமாய் இருந்தது அவளுக்கு.

“ ஆயிஷாம்மா… நான் தான் உன் அம்மாடா” கண்ணீருடன் அவளை அவர் கட்டி அணைக்க முயல சட்டென சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள் ஆயிஷா.

“ ஆயிஷா.. ஆயிஷா.. யாரு ஆயிஷா? நான் சஹீபா” என்று கத்தினாள் அவள். அவளது பெற்றோர் இருவரின் முகத்திலும் அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது.இத்தனை நாட்களாய் அவர்கள் பொத்தி வைத்த உண்மை அவர்களின் கண்ணெதிரில் வெடித்து நின்றது. எந்த நாள் வரக்கூடாது என்று இருவரும் வேண்டினார்களோ அந்த நாள் வந்தே விட்டது.

“ என் மக..என் மக ம்மா நீ “ என்று முணுமுணுத்தவாறே மயங்கிச் சரிந்தார் நிஷா.

“ நிஷா..அய்யோ நிஷா” என்று அவரின் கணவர் பதற, ஆயிஷாவோ அந்த வீட்டை விட்டு வெளியேறினாள். அவள் அங்கிருந்து சென்றதை கவனிக்கத் தவறி இருந்தார் அந்த தந்தை.!

அந்த வீட்டில் இருந்து வெளிவந்தவளுக்கு எதுவுமே புரியவில்லை. அவர்கள் யார் ? அவள் எப்படி இங்கு வந்தாள் ? இது எந்த இடம் ? எதுவும் புரியவில்லை. ஸ்வாசக்காற்று பற்றாமல் திணறுவது போல இருந்தது அவளுக்கு.. நிதானம் கொஞ்சமும் இல்லாமல் அந்த வீட்டை விட்டு சாலையில் நடக்கத் தொடங்கியவள் கொஞ்ச தூரத்தில் ஒரு பூங்கா தெரியவும் வேறேதும் யோசிக்காமல் அங்கு நடந்து சென்றாள்.

“முரண்பாடு” என்ற வார்த்தை கேட்டதுமே புகழின் மனதில் வந்து போனாள் ஆயிஷா. அவளைப் பற்றி நினைத்துக் கொண்டே தன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தவன், அவள் நடந்து வருவதை பார்த்து பைக்கை நிறுத்தினான். “இந்த நேரத்துல இவ யாரு வீட்டுக்கு பாடி கார்ட் வேலை பார்க்குறா?” என்று தன் பாணியில் கேலியாய் எண்ணியவன் அவள் தன் எதிரில் வந்த நொடியில் “ ஹாய்” என்று சொல்ல, அங்கு ஒருவன் நிற்பதையே பொருட்படுத்தாமல் அவனை கடந்து போயிருந்தாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.