(Reading time: 24 - 47 minutes)

நீங்க அவளுக்கு அண்ணா மாதிரி சிற்பி சார்…..ரியா புரிஞ்சுப்பா….” சத்தியமாய் இதைத்தான் சொல்ல நினைத்திருந்தாள் ப்ரியா…..ஆனால் வார்த்தை கிடைக்கா தடுமாற்றம்……அதற்குள் இவள் சார்பாய் சொல்லி முடித்திருந்தான் விவன்…..

இத்தனைக்கும் சிற்பி விவனை இவர் அவர் என ஒரு மரியாதை ர் சேர்த்து பேசுவது சூழ்நிலைக்காக மட்டுமே என்பது இவளைப் போல விவனுக்கும் தெரிந்துதான் இருக்கும்….. மற்றபடி கழுத்தை முறிக்கும் கோபம் இருக்கிறது அவனுக்கு இவன் மேல்…..

“மிசர்ஸ் ப்ரியா ஜெரோம்…” இதே நேரம் இவளுக்கான அழைப்பு வர….பெயர் சொல்லி கூப்பிட்டார் நர்ஸ் ஒருவர்….

பெயரைக் கேட்கவும் ப்ரியாவிற்கே திக் என்கிறதுதான்…..பின்ன தினமும் கேட்டு பழகிய பெயரா என்ன…..சிற்பியோ திடுக்கிட்டுப் போய் ப்ரியாவைப் பார்த்தான்…. பின் விவனையும்தான்….அடுத்த கணம் எதற்காக இப்படி பெயர் கொடுக்கப் பட்டிறுக்கும் என புரிய….. என்ன செய்யவென தெரியாமல்  திகைத்தான்….

சிற்பியிடம் என்ன சொல்லவென தெரியாமல் ஒரு கணம்…எதுவும் சொல்ல தேவையில்லை என மறுகணமுமாயும் நின்ற ப்ரியா இப்போது நர்ஸின் பின் டாக்டர் ரூமைப் பார்த்து நடக்க தொடங்க….

“அவங்க ஹஸ்பண்ட் மட்டும் கூட வாங்க சார்….” நர்ஸ் சொல்லிவிட்டு கர்டெய்னுக்கு பின் சென்று மறைந்தார்.

ப்ரியா அந்த டாக்டர் ஹெப்சிபா முன்னால் சென்று அமரும் போது அடுத்த இருக்கையில் வந்து அமர்ந்தான் விவன்.

பரஸ்பர அறிமுகத்துக்குப் பின்…. அவர் எடுத்தவுடன் “சொல்லுமா உன் எல்எம்பி என்ன…..? உன் லாஸ்ட் பீரியட் டேட்” என தொடங்க…. அன்னியனை ஹஸ்பண்ட் என கொண்டு நிறுத்துவதின் அத்தனை அலைகழிப்பையும் அருவருப்பையும் மொத்தமாக உணர்ந்தாள் இவள்…..

அடுத்து அவர் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில்…அருகிலிருந்தவன் புறம் அரை டிகிரி கூட திரும்பவில்லை இவள்….

கடைசியில் “நாளைக்கு டெஸ்ட் ரிசல்ட் வரவும் கன்ஃபார்ம் செய்துக்கலாம்….இப்பல்லாம் எல்லோரும் ஸ்ட்ரைப் டெஸ்ட் பார்த்துட்டுதான் எங்கட்டயே வருவாங்க….இது கன்ஃபர்மேஷன்க்குதான் “ என அவர் முடிக்க போக

ப்ரியாவிற்கு இதை நாளை வரை தள்ளிப் போடவா என ஆகிவிட்டது….. இவள் கொடுத்த குட்டிப் ப்ரஷரில்…

“ரொம்ப க்யூரியஸ்னா….இப்ப ஒரு ஸ்ட்ரைப் டெஸ்ட் எடுத்துக்கலாம்….பொதுவா மார்னிங்க் தான் செய்வாங்க….நீங்க இவ்ளவு ஆன்ஸ்ஷியஸா இருக்றதால வேணும்னா பாருங்க…” என அவர் அறையோடு இணைந்திருந்த அடுத்த அறைக்கு அனுப்பி வைத்தார்…..

அங்கிருந்த சின்ன வயது நர்ஸ் சிரித்த முகமாய் இவளுக்கு அந்த ஸ்ட்ரைப் டெஸ்ட் கிட்டைப் பற்றி விளக்கியவள்…..கடைசியில் உங்களுக்கு மேரேஜாகிட்டுதான….?” என வெகு இயல்பாய் கேட்டு வைக்க….இவள் என்ன ஏது என புரியாமல் மீண்டும் சாட்டையடி உணர்ந்தாள்…திகைத்தாள்….திணறினாள்….

“நீங்க தாலிலாம் போடாம வெளிய வருவீங்களோக்கா….? எங்க சைட் அப்டில்லாம் கழட்டவே மாட்டோம்…. “ அவள் தொடரவும்தான் இவளுக்கு சற்றாய் மூச்சு வருகிறது…..ஆனாலும் இது வெகு தற்காலிக நிம்மதி……தாலி இல்லாமல் அதைகட்டிய கணவன் இல்லாமல் வயிற்றில் குழந்தையோடு இந்த சமூகத்தை எப்படி எதிர் கொள்வதாம்…..?????

“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்கக்கா….. இந்த மாதிரி ஹாஸ்பிட்டல் வர்றப்பவாவது போட்டுட்டு வாங்க….யாராவது எதாவது சொன்னாங்கன்னா….ப்ரெக்னென்டா இருக்கப்ப எல்லாத்துக்கும் மனசு சட்டு சட்டுன்னு டிஸ்டர்ப் ஆகும்னு சொல்வாங்க…..தேவையில்லாம உங்களுக்குதான கஷ்டம்….”

அவள் சொன்னதை கேட்டபடியே ரெஸ்ட் ரூம் போய், அந்த டெஸ்ட்டை எடுத்து முடித்து ரிசல்ட் பார்க்கும் போது….இவள் அதிர்ந்து அலறினாள் என எதுவும் இல்லை…..பேயறைந்தாற் போன்ற பெரு அமைதிக்குள் புகுந்து கொண்டாள்...எதிர்பார்த்திருந்த முடிவுதான் வந்திருந்தது…..

 இவள் கருவறையில் கவனமாய் வளர்ந்து கொண்டிருக்கிறது கரு ஒன்று…..இவளை தாயாக்கிக் கொண்டு….

லேபின் ரெஸ்ட் ரூமை விட்டு வெளியில் வரும் போதே அதன் வாசலில் நின்றிருந்தான் விவன்…. அவன் நம்பிக்கையாய் இருந்த ரிசல்ட்தானே…எங்க இவ அழுகையில் கீழ விழுந்து வச்சுடுவாளோன்னு வந்து நிற்கிறான் போலும்….

அறைவிட்டு வெளி வந்த இவள் முகத்தில் கல்நிலை அமைதி….அவன் முகத்தையேதான் பார்த்துக் கொண்டு வந்தாள். ஒருவித இயலாமை கலந்த தவிப்பில் அவனும் இருப்பது போல் தோன்றுகிறது….அவன் எதற்காக தவிக்கிறான்? இவளுக்காகவா? அல்லது இவளால் அவன் குழந்தையை இன்பமாய் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதாலா?????

ஆனாலும் போய் அவனது இரு கைகளையும் பற்றிக் கொண்டாள்…..இதயம் இரண்டாய் பிளந்துவிட்டது போல் வலித்துக் கொண்டிருக்க…அதை யாரிடம் இவள் இப்போது சொல்லி அழ முடியும் எதிரில் நிற்கும் இவனைத் தவிர…..

”நான் இனிமே என்ன செய்வேன்…..?” கேட்டுக் கொண்டிருந்த இவள் கண்களிலிருந்து வழிகிறது கண்ணீர் என்றால்….அவள் கைகளுக்குள் தன் கைகள் இருக்க அனுமதித்திருந்த அவன் கண்களிலும் நீர் கோர்க்கிறதோ????

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.