(Reading time: 22 - 43 minutes)

21. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

சோமநாதனுடன் இஷானும் தைஜூவும் ஜெய்யின் வீட்டிற்கு வந்து ஜெய்யின் அறைக்கதவைத் தட்டினர்…

சதியின் நினைவுகளின் தாக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டவன், மெல்ல வந்து கதவைத்திறந்தான்…

“என்னடா இப்பவே தூக்கமா?...” என்றபடி இஷான் வேகமாக உள்ளே வர, அவனைத் தொடர்ந்து வந்தாள் தைஜூவும்…

நண்பனின் கேள்விக்கு பதில் சொல்ல வாயெடுத்தவன் தைஜூவைக்கண்டதும்,

“வாம்மா… என்ன இந்த நேரத்துல?...” என்றான்…

“ஒன்னுமில்லண்ணா… சும்மா உங்களைப் பார்த்துட்டு போகலாம்னுதான்…”

“உட்காரும்மா…” என சோபாவை கைகாட்டியவன்,

“பேசிட்டிருங்க… நான் போய் சாப்பிட எதாவது எடுத்துட்டு வரேன்…” என நகரப்போக, அவனின் கைப்பிடித்து தடுத்தான் இஷான்…

“நீ எங்கயும் போகவேண்டாம்… போன வரைக்கும் போதும்….”

இஷான் சற்று கோபமாக சொல்ல, ஜெய் அமைதியாக இருந்தான்…

“ஆமாண்ணா… எதுவும் வேண்டாம்… நாங்க ஹோட்டலில் சாப்பிட்டோம் நல்லாவே… நீங்க தான் எழுந்து வந்துட்டீங்க… அவசர வேலை எதுவும் இருந்திருந்தா சொல்லிட்டு வந்திருக்கலாமே அண்ணா…”

தைஜூ தன்மையாக சொல்ல ஜெய் என்ன பேச என்று தெரியாமல் மௌனமானான்…

“கேட்குறால்லடா உன் தங்கச்சி… பெருசா சொன்ன என் தங்கச்சிக்கு இல்லாத ட்ரீட்டான்னு… இப்படி பாதியிலேயே எழுந்து வர்றதுக்குத்தான் எல்லாம் செஞ்சியா?..”

இஷானின் கேள்வி ஜெய்யை சுட, அவன் தைஜூவைப் பார்த்தான்…

“சாரி தைஜூ… கொஞ்சம் அவசரமான வேலை… அதான் சொல்லமுடியலை… சாரிம்மா…”

மனமாற அவனும் மன்னிப்புக் கேட்க, அவனையே பார்த்தவள், எதுவும் பேசவில்லை…

“சாரிம்மா…. மன்னிச்சிடு…”

அவன் மீண்டும் மன்னிப்பு கேட்க அவள் தன் முகத்தினை திருப்பிக்கொண்டாள்…

“நீயாச்சும் சொல்லுடா…..” என ஜெய் இஷானிடம் கூற,

“அய்யோ… எனக்கு தெரியாதுப்பா… என்னை ஆளைவிடுங்க… நீயாச்சு உன் தங்கச்சியாச்சு…” என கையை விரிக்க, ஜெய் தைஜூவிடம் சென்றான்…

“நான் செஞ்ச தப்பை நானே சரி செய்யுறேன்… உனக்கு என்ன வேணும்னாலும் கேளு… நான் செய்யுறேன்… இப்போ சொல்லு எங்க வேணா போகலாம்… உங்கூட நான் வரேன்…”

அவனை தீர்க்கமாக பார்த்தவள், “நிஜமா தான் சொல்லுறீங்களா?...” எனக் கேட்க

“ஆம்…” என்றான் ஜெய்…

“இன்னைக்கு மாதிரி பாதியிலேயே விட்டுட்டு வந்துடமாட்டீங்களே?...”

“இல்லம்மா… இனி அப்படி செய்யமாட்டேன்… ப்ராமிஸ்… என்னை நம்பலாம்…”

“சரிண்ணா… நம்புறேன்…” என்றவள், அவனிடம் அடுத்து சொன்னதைக் கேட்டு அவன் என்ன பேச என்று தெரியாது போனான்…

“இதையும் நீங்க கேட்கப்போய் தான் சொன்னேன்… நானா கேட்கலை…” என கொஞ்சம் இழுத்தவள், பின் சட்டென்று நீங்க எங்களோட ஊட்டிக்கு வரணும்... இன்னும் இரண்டு நாள்ல…” என சொல்ல,

“வாட்…………….” என அதிர்ந்தே போன ஜெய், தைஜூவிடம் எப்படி மறுப்பது என யோசனையிலிருந்த போது,

“என்னடா?.. எப்படி அவாய்ட் பண்ணலாம்னு யோசிக்கிறியா?... மகனே அப்படி எதாவது செஞ்ச… நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்… சொல்லிட்டேன்…”

இஷான் கிட்டத்தட்ட கர்ஜிக்க, ஜெய் ஒருவார்த்தைகூட பேசவில்லை…

அவனின் பேச்சில்லா மௌனத்தைக் கண்டவள், “என்ன அண்ணா?.. வரமாட்டீங்களா?... இப்பதான் எங்க வேணும்னாலும் போகலாம்னு சொன்னீங்க… இப்போ இப்படி எதுவும் சொல்லாம அமைதியா இருக்குறீங்க?... என்னாச்சு?...” என நிதானமாக கேட்க,

“ஊட்டி வேண்டாமே….” என்றான் ஜெய்…

“ஏன் அங்க வந்தா உனக்கு என்ன?... நீ வர்ற…”

இஷான் திட்டவட்டமாக சொல்ல,

“இல்ல தைஜூ, நானும் இன்னும் இரண்டு நாள்ல வெளியூர் போகணும்மா… அதனால நான் என்ன சொல்லுறேன்னா…..” என சொல்ல வந்த ஜெய்யினை சொல்ல விடாது இஷான் தடுக்க,

“அப்போ வரமாட்டீங்களாண்ணா?... சரி… நீங்க வர வேண்டாம்… நான் கிளம்புறேன்…” என முகம் வாடிப்போனவளாய் தைஜூ கிளம்ப முனைய,

“நான் வரேன்ம்மா… ஆனா ஒரே ஒரு கண்டிஷன்….” என்றான் ஜெய்….

அவன் வருவதாக சொன்னதே சந்தோஷமாக இருக்க, அவன் சொல்லும் எந்த கண்டிஷனுக்கும் சரி சொல்ல தயாராய் இருந்தனர் இஷானும், தைஜூவும்…

“சொல்லுங்கண்ணா… என்ன கண்டிஷன் அது?...”

ஜெய் பதில் சொன்னதும், சற்று நேரம் யோசித்த இஷானும், தைஜூவும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு, பின் சரி என்றனர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.