(Reading time: 28 - 56 minutes)

ந்தப் பகல் பொழுது முழுவதும் அங்கிருந்த புல்வெளிகளில் கழிந்தது அந்த மனிதருக்கு...அங்கிருந்த ஓர் பெரிய மரத்தடியில் அமர்ந்து சுற்றுப் புறத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். சமீர் ஆடு மேய்ப்பதும் அவன் சகாக்களோடு விளையாடுவதுமாய் இருந்தான்.

அச்சமயம் அவரை அறியாமலே கண்ணயர அவரின் நினைவுகளில் நேற்று இரவு உதித்த சிறுமியின் முகம் மீண்டும் மீண்டும் வந்து போனது.

திடுக்கிட்டு கண் விழித்தவர் சூரியன் அந்த மலையின் பின்னே ஒளிந்து கொண்டிருப்பதைக் கண்டார். ஆடுகளை வீட்டினை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தனர் சமீரின் உறவுப் பையன்கள்.

"மாமா வாங்க போகலாம்" அவர் கை பிடித்து சமீர் அழைத்துச் சென்றான்.

அப்போது மலையில் ஏற்றமான ஓர் இடத்தில் ஓர் சிறு ஆட்டுக் குட்டி திசை மாறி வேறு புறம் தவறி செல்ல அதன் பின்னே சமீர் ஓடினான்.

சமீர் ஓடவும் அந்த மனிதரும் சமீர் பின்னே ஓடினார்.. சமீர் ஆட்டுக் குட்டியைப் பிடித்து எடுத்து திரும்ப வந்து கொண்டிருக்க தனது கட்டுப்பாடு இழந்து அந்த மனிதர் அந்த சரிவில் நில்லாமல் கீழ்நோக்கி சரிந்து கொண்டிருந்தார்.. ஓர் பெரிய கல் மீது கால் வைக்க அது உருளவே அந்த மனிதர் அந்தப் பள்ளத்தாக்கினில் உருண்டு விழுந்தார்.

"மாமா" அவர் பின்னே செல்ல இருந்த சமீரை அவன் உறவுப் பையன்கள் பிடித்துக் கொண்டனர். இருள் படரவே தங்கள் குடில்கள் நோக்கி திரும்பினர்.

சமீர் மீண்டும் மீண்டும் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே மனமே இன்றி வீடு திரும்பினான்.

வெண்மதி மெல்ல மெல்ல தத்தித் தத்தி வானில் பவனி வந்து கொண்டிருந்தாள். அன்று வானம் தெளிந்தே இருந்தது. ஓர் புதர் மண்டிய பாறை அந்த மனிதரைப் பள்ளத்தாக்கு விழுங்கி விடாமல் காப்பாற்றியது..

தலையில் அடிப்பட்டதன் அடையாளமாக குருதி கசிந்து கொண்டிருந்தது. மெல்ல கண் விழித்து பார்த்த அவர் கண்களுக்கு அந்த நள்ளிரவு இருட்டும் நிலவொளியும் பழக சிறிது கணம் பிடித்தது.

மெதுவாக அமர்ந்து அந்த பாறை மீது சாய்ந்து கொண்டவர் வானத்து நிலவையே வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். பௌர்ணமி முடிந்து இரு தினங்களே ஆகியிருந்த படியால் அன்றும் முழுமதியாகவே காட்சி அளித்தது வெண்ணிலவு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

திடீரென அழகிய  கைகுழந்தையின் பிம்பம் ஒன்று மெல்ல மெல்ல சிறுமியாக மாற்றம் பெற்று ஓர் எழில் மிகுந்த யுவதியின் முகத்தை தாங்கி இருந்தது வான் நிலவு.

"பூக்குட்டி"  அவர் உதடுகள் உச்சரிக்க இப்போது அந்த வார்த்தைகள் ஒலி அலைகளாக வெளிவந்தன. அவை  காற்றிலே தவழ்ந்து நிலவின் ஒளியோடு இரண்டறக் கலந்து உரிய இடத்தில் சேரப் பயணித்தன...

ஓர் திடுக்கலுடன் அதிர்ந்த அந்த மனிதர் மெல்ல கண் மூட அவரின் மனத்திரையில் காட்சிகள் வேகமாக ஓடிக் கொண்டிருந்தன.

“ஐ ஆம் விஜயகுமார். பிளைட் லெப்டினன்ட். இந்தியன் ஏர் போர்ஸ்" நினைவில் கண்டதை உதடுகளும் முணுமுணுக்க அந்த இதழ்கள் தானாகவே புன்னகையில் மலர்ந்தன.

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1080}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.