(Reading time: 26 - 52 minutes)

'ப்போ நான் எடுத்து பேசப்போறேன் பாரு..'

'பேசு.. நீ யார்கிட்டே பேசினா எனக்கென்ன???' கண்களை திறக்காமலே பதில் சொன்னான் விஷ்வா. நிஜமாகவே எடுத்து பேசிவிடலாமா??? பரபரத்தது கைப்பேசியையே பார்த்திருந்த பரத்துக்கு. அதற்குள் ஒலித்து நின்று போனது அலைப்பேசி

அவன் பள்ளியில்  பத்தாம்  வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் 'நீ இந்த வீட்டிலே பிறந்த பிள்ளை இல்லை... போதுமா??? இனிமே இங்கே வந்து சொந்தம் கொண்டாடாதே. நீ வந்தாலே என் நிம்மதி போகுது...' வெடித்து சிதறின அம்மாவின் வார்த்தைகள்.

அன்று ஒலித்த அம்மாவின் வார்த்தைகள் இன்னமும் அடி மனதில் கனக்கிறதே???  தனிமையில் கதறித்துடித்த கணங்களை நினைத்தால் இன்னமும் கண்ணீர் துளிர்க்கிறதே??? ஆழமான மூச்சை எடுத்துக்கொண்டான் பரத்.

உழைப்பு என்ற ஒன்றை கற்ற பிறகு, தனது தேவைகளை தானே பார்த்துக்கொள்ளும் தைரியம் வந்த பிறகு அந்த வீட்டு வாசல் படியை மிதிக்க கூடாது என்ற வீம்பு பரத்தினுள்ளே எழுந்தது உண்மை. ஆனால் இன்று???

எல்லா வீம்பும் விஷ்வா என்ற அன்பு மழையில் கரைந்து ஓடிகிறதா என்ன??? மனம் பாசத்தை மட்டும் தேடுகிறதா என்ன?? கைப்பேசியையே இன்னமும் பார்த்திருந்தான் பரத். ஐந்து நிமிடங்களாக அங்கே நிலவிக்கொண்டிருந்த மௌன காற்றை கிழித்துக்கொண்டு மறுபடி ஒலித்தது போன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

திரை அம்மா அம்மா என ஒளிர்ந்துக்கொண்டிருக்க.... விஷ்வா அப்படியே படுத்திருக்க, என்ன நினைத்தானோ??? எது செலுத்தியதோ??? பரத் சட்டென கையிலெடுத்தான் கைப்பேசியை.

அவன் அதன் திரையை வெறித்துக்கொண்டிருக்க, மெல்ல கண் திறந்தான் விஷ்வா. அவன் உதடுகள் ரகசியமாக உச்சரித்தன

'எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!!'

அழைப்பை ஏற்று 'ஹலோ...' சற்றே தழைந்த குரலில் சொன்னான் பரத்.

'டேய்... எங்கேடா இருக்கே.. அம்மா எவ்வளவு நேரமா கூப்பிடறேன்???' அழைப்பை ஏற்றது விஷ்வா என்ற எண்ணத்துடன் மறுமுனையில் ஒலித்தது அம்மாவின் குரல்.

இங்கே மூச்சை இறுக்கி பிடித்துக்கொண்டவனாக அமர்ந்திருந்தான் பரத். வருடங்கள் ஆகின்றன இந்த குரலை கேட்டு!!! யுகங்கள் ஆகின்றன அவருடன் பேசி!!!

'வி....ஷ்.....வா..' அம்மா மறுபடியும் அழைக்க

மெது மெதுவாக எழுந்தது பரத்தின் குரல் 'நான் விஷ்வா இல்லை.. அம்... மே.. மேடம்... பரத் பேசறேன்...' ஒரு நொடி உறைந்து மீண்டது மறுமுனை.

பின்னர் சற்றே வியப்பு கலந்த குரலில் வந்தது கேள்வி 'பரத்தா???'

'ஆ.. ஆமாம்... விஷ்வா இங்கே தூங்கறான். அதான் நான் எடுத்தேன்... நீங்க எப்படி இருக்கீங்க மேடம்???' பரத்தையே பார்த்திருந்த விஷ்வாவின் இமைகள் மறந்தும் கூட கீழே இறங்க மறுத்தன.

தலையை பிளந்துக்கொண்டிருக்கும் வலியின் இடையே அந்த 'மேடம்...' ஏனோ சுளீரென கீறியது அம்மாவை. கண்களில் இன்னமும் அதிகமாகவே வழிந்தது அருவி. பதில் மொழி வரவில்லை அவரிடமிருந்து.

'ரொம்பவே நாள் ஆச்சு உங்க கிட்டே பேசி...' என்றான் கொஞ்சம் இளகிக்கிடந்த குரலில். அவனையே பார்த்திருந்த விஷ்வாவை கவனிக்கவே இல்லை பரத். விஷ்வாவின் கண்களின்  ஓரத்தில் கொஞ்சமாக நீர் துளிர்த்திருந்தது

'ஆ... ஆமாம்பா ரொம்பவே நாள் ஆச்சு...' என்று சொன்ன குரல் உடைந்துவிடுவேன் உடைந்துவிடுவேன் என மிரட்டிக்கொண்டிருந்தது அம்மாவை!!!! நடந்தவை எல்லாவற்றையும் மறந்தவனாகவே பேசுகிறானே இவன். எப்படி முடிகிறது இவனால்???

'உடம்புக்கு எதுவும் முடியலையா உங்களுக்கு???' எதை வைத்துக்கேட்டானோ!!!! எப்படி கேட்டானோ!!! கேட்டான் பரத்.

'உடம்புக்கா ஆமாம்பா கொஞ்சம் முடியலை' கரைந்தது குரல் அங்கே 'தலை ரொம்ப வலிக்குது..'

'இன்னும் எத்தனை நாள் நான் இருப்பேனோ தெரியலையே பரத்..' அவனிடம் உடைந்துவிட  துடித்தது மனம் ஆனால் சொல்லவில்லை அவர்!!!

'அய்யோ.. ரொம்ப வலிக்குதாமா???' மாத்திரை ஏதாவது போட்டீங்களா??? இதமாக மாறியிருந்த குரலில் கேட்டான் பரத். அவனே அறியாமல் உச்சரித்த 'அம்மா' வை அவனே உணரவில்லை ஆனால் அதை உணர்ந்துக்கொண்டது மறுமுனை.

'ஆங்??? ம்???' அம்மாவின் குரலில் தடுமாற்றம் 'போட்டேன்பா போட்டேன்..'

'சரி அப்படியே தூங்குங்க. சரியாயிடும்...' அவன் சொல்ல அவன் அருகிருந்து தலை கோதுவதை போல் இருந்தது அம்மாவுக்கு.

'சரிப்பா... விஷ்வா எழுந்தா வீட்டுக்கு வரச்சொல்லு நான் வெச்சிடறேன்..' துண்டித்தார் அழைப்பை. கைப்பேசியை அருகில் வைத்துவிட்டு தலையணையில் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அழத்துவங்கினார் அம்மா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.