2018 - தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் சித்ரா Vயுடன் கலந்துரையாடல்
Chithra V
Chillzee வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒருவர் சித்ரா V
2015ஆம் ஆண்டு தை பிறந்தாச்சு சிறுகதையின் மூலம் chillzeeயில் அறிமுகமாகி, கடந்த இரண்டு + ஆண்டுகளாக தொடர்ந்து பல வசீகரிக்கும் கதைகள் எழுதிக் கொண்டு இருப்பவர்.
chillzee டீமை சேர்ந்த விசாலி தமிழ் புத்தாண்டிற்க்காக சித்ராவுடன் நடத்திய சுவாரசியமான கலந்துரையாடல் இதோ உங்களுக்காக.
விசாலி – வணக்கம் சித்ரா! உங்களை பற்றி எங்களுக்கு சொல்லுங்களேன்.
சித்ரா V - என் பெயர் சித்ரா.. நான் முழு நேர இல்லத்தரசி, கணவன், ஒரு மகள், மாமியார் இது தான் என்னோட குடும்பம். எனக்கு 19 வயதில் திருமணம் ஆகியது. அதில் இருந்து என்னோட வீடு தான் என்னோட உலகமா இருந்தது. முக்கால்வாசி நேரம் வீட்டு வேலையிலேயே என்னோட பொழுது போய்விடும், இப்போதும் அப்படித்தான்.. ஆனா கடந்த மூன்று வருடமாக கதை எழுதுவது, படிப்பது, முகநூல் நண்பர்கள் என்று எனக்காகவும் நேரத்தை செலவளிக்கிறேன். மனதிற்கு ஒரு நிறைவாக உணருகிறேன்.
விசாலி - உங்க பதில் கேட்கும் போது Chillzee போன்ற ஒரு site நடத்துவதற்கு கூடுதல் ஊக்கம் கிடைத்திருப்பதாக எனக்கும் தோணுது! ஆனால் நம்முடைய வாழ்க்கை என் குடும்பம் + WhatsApp / Facebook + Chillzee போன்ற sitesன்னு குறுகி போய்விட்டதாகவும் தோன்றுது. உங்களுக்கு அதே போன்ற feel வருதா??? மனிதர்கள் சந்தித்து பேசி, பகிரும் நேரங்கள் ரொம்ப குறைந்து கொண்டே இருக்கிறதோ?
சித்ரா V - அதை முழுதாக ஒத்துக் கொள்ள முடியாது. கூடுதலாக பொறுப்புகள் சேரும் போது சிலவற்றை இழக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விடுகிறோம். ஆண்கள் எப்படின்னு தெரியல. ஆனா பெண்கள் அதுவும் திருமணமான பெண்கள் வீட்டில் இருந்தாலும் சரி, வேலைக்கு சென்றாலும் சரி, அதிகப்படியான வேலைகளுக்கு நடுவில் கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்தில் தான் இதுபோன்ற விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குகிறோம். ஆனால் நண்பர்களையோ உறவினர்களையோ சந்திக்க வேண்டுமென்றால் அதற்கு தனியாக திட்டமிட வேண்டி உள்ளது. போனில் பேச வேண்டுமென்றால் கூட இருவருக்கும் எப்போது ஓய்வு நேரம் என்று பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். ஆனால் இங்கே நம் ஒய்வு நேரத்திற்கு தகுந்தபடி செலவிடுகிறோம்.
ஆனால் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களோடு கூட உரையாடாத சூழ்நிலையும் சில இடத்தில் இருக்கத் தான் செய்கிறது. அது அவரவர் சுபாவம், மனநிலை, வீட்டுச் சூழல் இது பொருத்து தான் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான திருமணமான பெண்கள் வீட்டு வேலை, வெளி வேலை, குடும்ப உறுப்பினர்களுக்கு என நேரங்கள் போக மீதி நேரம் தான் இங்கே செலவிடுகிறார்கள்.
என்னைப் பொறுத்த வரை திருமணம், உடனே குழந்தை, வயதான மாமியார் என்பதால் வீட்டு வேலைகளை நானே செய்ய வேண்டும், நான் வேலை செய்யும் முறை இதையெல்லாம் வைத்து நான் என்னை அங்கே பொருத்திக் கொண்டேன். படிப்பு, வேலை விஷயத்தில் எப்போதும் எனக்கு குறை உண்டு. அந்த வகையில் 15 வருடங்கள் கழித்து எனக்காக நேரம் செலவிடுவதில் தான் இந்த நிறைவு.
விசாலி - சரி, சீரியஸ் பேச்சை விட்டு விட்டு, ஜாலியாக பேசுவோம்! நாவல் அல்லது தொடர்கதை எழுத வேண்டும்ன்னு எப்போ உங்களுக்கு தோணிச்சு???
சித்ரா V - பள்ளி காலத்திலிருந்தே புத்தகங்கள் படிப்பது பிடிக்கும், ஆனால் நிறைய புத்தகங்கள் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது இல்லை. அப்போதே கதைகளும் கற்பனைகளும் மனதில் தோன்றியிருக்கிறது. வீட்டில் சில சமயம் யாருமில்லாத நேரத்தில் வசனமாக கூட பேசி பார்த்திருக்கிறேன். திருமணத்திற்கு பிறகு கூட என் வேலை நேரங்களில் அப்படி கற்பனைகளை மனதில் ஓட்டிப் பார்த்ததுண்டு. ஆனால் அதற்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து பார்த்ததில்லை.
திருமணத்திற்கு பிறகு தொலைக்காட்சி பார்ப்பதெல்லாம் வெகுவாக குறைந்துவிட்டது. வெளியில் சென்று நிறைய புத்தகங்கள் வாங்கி வாசிக்கவும் நேரமில்லை, ராணிமுத்து, கண்மணி போன்ற புத்தகங்கள் சில சமயம் வாசிப்பதுண்டு.. அப்போது ரமணி சந்திரன் நாவல்கள் ஓரிரு புத்தகங்கள் படித்திருக்கிறேன். இதில் ஸ்மார்ட் போன் வாங்கியதும், அது மூலமாகவே கதைகள் படிக்க தேடிய போது தான் சில்சீ சைட் என் கண்ணில் பட்டது. அப்போது அதிலிருந்த முடிவடைந்த கதைகளை முழுதும் படித்து முடித்தேன். அதன்பிறகு தான் சில்சீயில் உள்ள மற்ற விஷயங்களில் என் பார்வை பட்டது. அதில் write @ chillzee என் கண்ணில் பட்ட போது தான் நாமளும் எழுதலாம் போலயே என்று நினைத்தேன். ஆனா அதற்கான வழிமுறைகள் எனக்கு தெரியவில்லை. யார்க்கிட்டேயும் கேட்கவும் தோன்றவில்லை. அதன்பிறகு நானே அதையெல்லாம் கண்டுபிடித்து, அதன்பிறகு என்ன எழுதலாம் என்று யோசித்து, பின் சிறுகதை தான் முதலில் எழுத வேண்டும் என்று அதற்கான கதையை யோசித்து என்று அதிலேயே எனக்கு ஆர்வம் தொற்றிக் கொண்டது. சில்சீ பார்த்து தான் முதலில் எனக்கு எழுத தோன்றியதே! அதற்கு அடிக்கடி என்றாலும் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன்.