(Reading time: 16 - 31 minutes)

Chithra 

விசாலி - write@chillzee பக்கத்தை இன்னும் user friendly ஆக மாற்றும் வேலைகள் நடைபெற்று வருகிறது. சீக்கிரமே அந்த பக்கம் புது பொலிவுடன் வலம் வரும்ன்னு நம்புவோம்.

Coming back to our discussion, உங்க முதல் தொடர்கதை “காதலை உணர்ந்தது உன்னிடமே” கதையில் வரும் அந்த சஸ்பென்ஸ் ஆரம்பத்திலேயே நீங்க ப்ளான் செய்ததா அல்லது அதன் போக்கில் வந்ததா?

சித்ரா V - இல்லை.. கதை எழுதும்போது பிருத்வி, யுக்தா காதாப்பாத்திரம், கதைக் கரு இதை வைத்து மட்டும் தான் ஆரம்பித்தேன். இரண்டாவது அத்தியாயம் எழுதும் போது தான் சங்கவி, தேவா கதாப்பாத்திரமே உருவானது. அதேபோல் வருண் கதாப்பாத்திரமும் சில அத்தியாயங்களுக்கு பிறகு தான் உருவானது. ஆனால் பத்து அத்தியாயங்கள் எழுதும் போதே கடைசி முடிவு வரை எப்படி கதையை கொண்டு போக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அப்படி தான் அந்த சஸ்பென்ஸும் உருவாகியது.

 

விசாலி - interesting!!!! உங்க கதைகளை பற்றி உங்க குடும்பத்தினர் என்ன சொல்றாங்க?

சித்ரா V - கதை எழுத ஆரம்பித்த போது என் மகளிடம் மட்டும் தான் சொல்லியிருந்தேன். அப்புறம் கொஞ்சநாள் கழித்து அம்மாவுக்கும் தங்கைக்கும் தெரியும்.. இருந்தும் அவர்களோட முக்கிய வேலையில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. “கண்களின் பதில் என்ன மௌனமா?” முடியும் தருவாயில் தான் என் கணவருக்கு என் மகள் மூலமாக விஷயம் தெரியும்... மனதார மகிழ்ந்து வாழ்த்தினார். அவருக்கு இதுபோன்ற கதைகள் படிப்பதில் ஆர்வம் இல்லை. அதனால் அவர் படித்தது கிடையாது. புத்தகம் வரும் சமயத்தில் தான் என்னோட உறவினர்களுக்கு விஷயம் தெரியும்.. அதற்கு முன்னரே முகநூல் மூலமாக நான் ஷேர் செய்த போது சிலர் தெரிந்துக் கொண்டனர். இதுவரை கதை எழுதுவது, வெளியிடுவது என்று எங்கள் குடும்பத்தில் முன்னர் யாரும் இருந்ததில்லை. இப்போது விஷயம் தெரிந்து அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். என் தங்கையும் இப்போது சில்சீ வாசகி, என் கதை படிக்க வந்து இப்போது மற்ற எழுத்தாளர்களின் கதையும் படிக்க ஆரம்பித்து விட்டாள்.

 

விசாலி - Trend setter ஆகிட்டீங்க! வாழ்த்துக்கள்! சரி, இது வரை நீங்க எழுதிய கதைகளில் உங்க மனசுக்கு நெருக்கமான கதை & கதாபாத்திரம் என்ன & யார்?

சித்ரா V - மனதிற்கு நெருக்கமான கதையென்றால் அது “உன் நேசமதே என் சுவாசமாய்” தான்.. முதல் கதை எழுத ஆரம்பித்த நாட்கள் போல் இப்போது அதிக நேரம் கிடைப்பதில்லை. முன்பு சீக்கிரம் கதை எழுதி முடிக்க வேண்டும் என்று ஒரு வேகம் இருந்தது. அதன்பின் வேலை பளு காரணமாக சில நாட்கள் எழுத ஆரம்பித்தால் கூட என்ன எழுத என்று அப்படியே தொக்கி நிற்கும், ஆனால் இந்த கதை எழுத ஆரம்பித்தால் என்னை அறியாமலேயே அடுத்து என்ன என்று எழுத ஆரம்பித்து விடுவேன். இந்த கதை ஆரம்பிப்பதற்கு முன்னரே கடைசி வரை கதை யோசித்து வைத்திருந்தேன்.. “கண்களின் பதில் என்ன மௌனமா?” முடிந்த பிறகு தான் இதை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஆர்வம் தாங்காமல் உடனே தொடங்கிவிட்டேன். இப்போது எந்த இடையூறுமில்லாமல் வெற்றிக்கரமாக முடிக்க வேண்டுமே என இருக்கின்றது. அப்படி இப்படியென்று இறுதி கட்டத்தை நெருங்கியாச்சு. நானா இப்படி ஒரு கதை எழுதுகிறேன் என்று அடிக்கடி வியந்ததுண்டு.

அதேபோல் பிடித்த கதாப்பாத்திரம் என்றால் “காதலை உணர்ந்தது உன்னிடமே” சம்யுக்தா, “உன் நேசமதே என் சுவாசமாய்” கங்கா. இந்த இரண்டு காதாப்பாத்திரங்களும் யோசிக்கும் போது நெகட்டிவ்வா யோசித்து, பின் மற்றவர்கள் நெகட்டிவ்வா நினைச்சா எப்படி இருக்கும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து, பின் என்னோட எழுத்து மூலமாக அவர்கள் இருவரையும் வேற லெவல்க்கு கூட்டிட்டுப் போனதாகவே நினைத்துக் கொள்வேன்.

 

விசாலி - கங்காவை எனக்கும் ரொம்ப பிடிக்கும். கங்கா போல எத்தனை பேரை பற்றி இன்றைய காலத்தில் தெரியாமலே புரளி பேசுகிறார்கள். அப்படி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அவங்களுக்கு கதாநாயகி அந்தஸ்தும் கொடுத்து எல்லோருக்கும் புரிவது போல எழுதி எடுத்து சொல்வது அதுவும் ஜனரஞ்சகமான முறையில் சொல்வது மிக பெரிய விஷயம்! அதுக்கு என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

“உன் நேசமதே என் சுவாசமாய்’ போட்டி ஞாபகம் இருக்கா? அதற்கு எப்போ முடிவு சொல்ல போறீங்க?

சித்ரா V - கேட்பதற்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி.. போட்டிக்கான வெற்றியாளர் யார் என்று நான் எப்போதோ தேர்ந்தெடுத்து விட்டேன். இருந்தும் சில்சீ குழு முன்பு சொன்னது போல், தொடர் முடியும் போது சொல்கிறேன். தொடர் எப்படியும் 5,6 அத்தியாயங்களில் நிறைவு பெற்றுவிடும்.. அதனால் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த நேரத்தில் இப்படி ஒரு போட்டி வைக்கலாம் என்று யோசனை கூறி, அதற்கு ஏற்பாடு செய்த சில்சீ குழுவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.