(Reading time: 4 - 7 minutes)

குழந்தைகள் ஸ்பெஷல்  குட்டிக் கதைகள் – 87. கழுதை மனிதனான கதை!

ரு ஊரில் ஒரு மனிதன் இருந்தான். எல்லோரையும் விட தான் அதி புத்திசாலி என்ற எண்ணம் அவனுக்கு எப்போதும் இருந்தது. இந்த பூமியின் புத்திசாலி மனிதன் தான் மட்டுமே என்பது போல மற்றவர்களை எதற்கெடுத்தாலும் நையாண்டி செய்வதும், கேலி செய்வதுமாக இருந்தான்.

  

ஒரு நாள், அந்த மனிதன் ஒரு கழுதையை வாங்க சந்தைக்கு சென்றான். சந்தையில் இருந்ததிலேயே சிறந்த கழுதையைத் தேர்ந்தெடுத்து வாங்கினான்.

  

அவனுக்கு அந்த கழுதையை ரொம்பவும் பிடித்துப் போனது! அதனால் வீட்டை நோக்கிச் சென்றபோது அதன் முதுகில் அவன் சவாரி செய்யவில்லை, பொதிகளையும் வைக்கவில்லை. அதற்கு பதிலாக, கழுதையின் கயிறை பிடித்துக் கொண்டு அவன் முன்னே நடந்தான், கழுதை அவனின் பின்னால் வந்தது!

   

இரண்டு தந்திரமான திருடர்கள் எதை திருடலாம் என்று வேவு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மனிதனையும், கழுதையையும் பார்த்த உடன் அந்த கழுதையை திருட முடிவு செய்தார்கள்.

  

இருவரும் என்ன செய்வது என்று அவசரமாக திட்டம் தீட்டினார்கள்.

  

பின் இரண்டு திருடர்களும் அந்த மனிதனின் பின்னால் பதுங்கி சென்று, கழுதையின் கழுத்தில் இருந்த கயிற்றை கவனமாக எடுத்து விட்டார்கள். ஒரு திருடன் கழுதையை தன்னுடன் அழைத்துச் சென்றான், மற்ற திருடன் தன் கழுத்தில் கழுதையின் கயிற்றை போட்டுக் கொண்டு அந்த மனிதனின் பின்னால் நடந்துச் சென்றான்.

  

ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, கழுதையின் உரிமையாளன் திரும்பிப் பார்த்தான். அங்கே கழுதைக்கு பதிலாக ஒரு மனிதன் இருப்பதை பார்த்து அதிர்ந்தான்.

"என் கழுதை எங்கே?" என்று அவனைக் கேட்டான்.

  

அதற்கு திருடன், "ஐயா, நான் தான் உங்கள் கழுதை!" என்றான்.

  

"கழுதை எப்படி மனிதனாக மாற்ற முடியும்? நீ சொல்வதை நான் நம்ப மாட்டேன்," என்றான் மனிதன்.

   

"ஐயா, சில வருடங்களுக்கு முன்பு நான் என் அம்மாவை காயப்படுத்தினேன். அதற்காக கழுதையாக இருக்க சபிக்கப் பட்டேன். என்னை மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று, என் மாமா என்னை அங்கே விற்றார். என்னை வாங்கியவர் மிகவும் புத்திசாலி மனிதர் என்பதால் நான் மீண்டும் ஒரு மனிதனாக மாறி விட்டேன்." என்று திருடன் கூறினான்.

  

இதைக் கேட்ட அந்த மனிதனுக்கு பெருமிதம் தாளவில்லை!!!! அவன் திருடனிடம், "இப்போது ​​நீ உன் வீட்டிற்குப் போகலாம். இனிமேலாவது உன் தாயைக் காயப்படுத்தாதே!" என்று சொல்லி அனுப்பினான்.

  

திருடனும் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு நடந்தான்.

  

இரண்டு திருடர்களும் கழுதையை மனிதன் வாங்கிய அதே இடத்திற்கு கொண்டு வந்து விற்றனர். கழுதை எப்படி தங்களிடம் வந்தது என்ற உண்மைக் கதையை அவர்கள் முன்பு கழுதையை விற்றவரிடமும், மற்ற விற்பனையாளர்களிடமும் சொன்னார்கள். அந்த மனிதனைப் பற்றி தெரிந்தவர்கள் என்பதால் கதையைக் கேட்டு அனைவரும் நன்றாக சிரித்தனர். என்ன நடந்தது என்ற செய்தி கிராமம் முழுவதும் வேகமாக பரவியது.

   

அடுத்த நாள், அந்த மனிதன் இன்னொரு கழுதையை வாங்க சந்தைக்கு வந்தான். அவன் முன்பு வாங்கிய அதே கழுதை மற்ற கழுதைகளுக்கு மத்தியில் விற்கப்படுவதைக் கண்டதும் தான் ஏமாற்றப் பட்டுவிட்டதை உணர்ந்தான்.

  

ஆனால் அதை மற்றவர்க்கு காட்ட விருப்பம் இல்லாமல்,

" இளைஞனே, நான் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன் ஆனால் நீ என் யோசனையைக் கேட்கவில்லை. இப்போது ​​நீ மீண்டும் கழுதையாகி விட்டாய். ஆனால், இந்த முறை நான் உன்னை வாங்க மாட்டேன்!" என்றான்.

 

அத்துடன் சந்தையில் இருந்து வீட்டை நோக்கி நடைக் காட்டினான்!

  

விபரம் தெரிந்த மற்றவர்கள் அவனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள்!

  

கருத்து:

  

தன்னை அதி புத்திசாலி என்று நினைக்கும் மனிதன் அடி முட்டாள்!!!!

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.