(Reading time: 4 - 8 minutes)

குழந்தைகள் ஸ்பெஷல் நகைச்சுவைக் கதைகள் – 88. முட்டாள் சீடர்கள்

ல பல வருடங்களுக்கு முன், ஒரு குரு இருந்தார். அவருடன் பல மாணவர்கள் இருந்தனர்.

  

ஒரு நாள், குரு அவர்கள் அனைவரையும் ஒரு மாட்டு வண்டியில் அழைத்துச் சென்றார். குரு வயதானவர் என்பதால் சோர்வாக உணர்ந்தார்.

   

"மாணவர்களே, நான் மிகவும் சோர்வாக உணர்கிறேன். அதனால் ஓய்வெடுக்க விரும்புகிறேன். நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள். வண்டியில் இருந்து ஏதேனும் பொருள் விழுகிறதா என்றுப் பார்த்துக் கொண்டே இருங்கள்." என்று தன் மாணவர்களிடம் சொன்னார்.

  

மாணவர்களும், "சரி, குருவே!" என்று ஏற்றுக் கொண்டார்கள்.

  

சில நிமிடங்களுக்குப் பிறகு, வண்டி ஒரு கல் மீது இடித்தது. குரு தண்ணீர் அருந்த பயன்படுத்தும் பாத்திரம் வண்டியில் இருந்து விழுந்தது. அனைத்து மாணவர்களும் அது கீழே விழுந்ததைப் பார்த்தும் சும்மா இருந்தார்கள்!

  

சிறிது நேரம் கழித்து, குரு எழுந்து, "மாணவர்களே, நான் சொன்னதுப் போல எல்லா பொருட்களையும் பார்த்துக் கொண்டீர்களா?" என்று வினவினார்.

 

மாணவர்கள், "ஆம், குருவே!" என்று பாடினார்கள். மாணவர்களில் ஒருவன், "உங்கள் பாத்திரம் மட்டுமே வண்டியில் இருந்து விழுந்தது, குருவே!" என்றான்.

  

குரு மிகவும் கோபமடைந்தார்!

   

"என்ன? பாத்திரம் கீழே விழுந்ததா? இப்போது, ​​நான் எப்படி தண்ணீர் எடுத்துக் அருந்துவேன்?"

 

"ஆனால், குருவே நீங்கள் எங்களை வண்டியில் இருந்து விழும் பொருட்களை பார்க்க மட்டுமே கேட்டீர்கள், எடுக்க சொல்லவே இல்லையே?"

 

"முட்டாள்களே! நான் வண்டியில் இருந்து எதுவும் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தானே சொன்னேன்?! அடுத்த முறை, வெளியே விழும் எதையும் எடுத்து, மீண்டும் வண்டியில் வைக்க வேண்டும், புரிகிறதா?" என்றார் குரு!

  

மாணவர்களும் ஆம் என்று ஒப்புக் கொண்டனர்.

  

மாட்டு வண்டி நகர்ந்தது. குரு மீண்டும் உறங்கத் தொடங்கினார். சிறிது நேரம் கழித்து, காளைகள் சாணத்தை தரையில் போட்டன! அதைப் பார்த்ததும் மாணவர்களில் ஒருவர் கீழே குதித்து, சாணத்தை எடுத்து உருட்டி வண்டியில் வீசினார். சாணத்தினால் ஆன அந்த பெரிய பந்து குருவின் முகத்தில் விழுந்தது! அவர் அதிர்ச்சியுடன் எழுந்து அமர்ந்தார்!

  

“என்ன இது???”

   

"குருவே, எதற்கு கோபப் படுகிறீர்கள்? நீங்கள் சொன்னதுப் போல தரையில் விழுந்த எதையும் எடுத்து மீண்டும் வண்டியில் வைத்தோம். நீங்கள் சொன்னதை தான் செய்தோம்."

   

"கடவுளே! ஏன் உங்களால் எதையுமே புரிந்துக் கொள்ள முடியவில்லை?"

   

குரு கோபத்தை அடக்கி, அமைதியாக சிறிது நேரம் யோசித்தார். அவருக்கு ஒரு நல்ல யோசனை வந்தது. மாட்டு வண்டியில் இருக்கும் எல்லா பொருட்களையும் பட்டியலிட்டார். அதை மாணவர்களிடம் காட்டினார்.

  

"பாருங்கள், மாணவர்களே, இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் ஏதேனும் கீழே விழுந்தால், நீங்கள் கண்டிப்பாக எடுக்க வேண்டும்" என்று புதிய கட்டளை இட்டார்.

 

மாட்டு வண்டி மெல்ல நகர்ந்தது! குரு மீண்டும் தூங்கிவிட்டார். மாணவர்களும் தூங்க ஆரம்பித்தார்கள்.

  

மாட்டு வண்டி இப்போது மலை மீது ஏறத் தொடங்கியது. அப்படி மேலே செல்லும்போது, ​​தூங்கிக் கொண்டிருந்த குரு வண்டியில் இருந்து சறுக்கி, சாலையோரத்தில் ஓடிக் கொண்டிருந்த நீர் ஓடையில் விழுந்தார்.

  

அவர் விழுந்த பெரிய சத்தம் மாணவர்களை எழுப்பியது. குரு நீரில் இருப்பதை பார்த்து திகைத்தார்கள். அனைவரும் வண்டியிலிருந்து கீழே குதித்தனர். அப்போது குரு கூறியதை நினைத்து பட்டியலை எடுத்து குருவின் பெயரைத் தேடினர். அங்கே அவர் பெயரை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, ஒன்றும் செய்யாமல் நின்றனர்!

    

"மாணவர்களே! நான் மூழ்கப் போகிறேன்! என்னைக் காப்பாற்றுங்கள்! நான் உங்கள் குரு!" என்று குரு அலறினார்.

  

மாணவர்கள் நல்லவர்கள். அவர்களுக்கு தங்கள் குருவை மிகவும் பிடிக்கும். எனவே அதற்கு மேலே அமைதியாக நிற்காமல், விரைந்து சென்று அவரைக் காப்பாற்றினர்.

  

ஆனால் குருவிற்கு கோபம் குறையவில்லை!

  

“நீங்கள் யாரும் ஏன் முதலிலேயே என்னை காப்பாற்றவில்லை?"

  

"குருவே, நாங்கள் உங்கள் கட்டளைக்கு கீழ்ப்படிந்தோம்! பட்டியலில் உள்ளவற்றை மட்டும் எடுக்கும்படி நீங்கள் எங்களிடம் கேட்டீர்கள். உங்கள் பெயர் பட்டியலில் இல்லை. அதனால் தான் ஒன்றும் செய்யாமல் நின்றோம்!"

  

"என் கட்டளைக்கு கீழ்ப்படிந்தீர்களா? நான் உங்களிடம் சொன்ன எதையும் புரிந்துக் கொள்ளக் கூட நீங்கள் யாரும் முயற்சிக்கவில்லை. என் வார்த்தைகளை மட்டும் அப்படியே எடுத்துக் கொண்டுப் பின்பற்றினீர்கள்!!!" என்று தலையில் அடித்துக் கொண்டார் குரு!

   

2 comments

  • Very nice ... ஆசிரியர்கள் மாணவர்களிடம் எதைக் கூறும் போதும் அவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு தெளிவாக கூற வேண்டும் என்பதை இந்த கதை உணர்த்துகிறது

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.