(Reading time: 3 - 5 minutes)

குழந்தைகள் ஸ்பெஷல்  குட்டிக் கதைகள் – 89. சிறுமியின் நல்ல மனம்

தாமஸிற்கு கடற்கரையோரம் நடப்பது ரொம்பவும் பிடிக்கும். மழை இல்லாத நாட்களில் எல்லாம் தினம் தினம் விடிகாலையில் கடற்கரையோரம் நடக்க வந்து விடுவார்.

  

காற்று மழை என்று இருக்கும் நாட்களை தொடரும் நாட்களில், தாமஸ் நடக்கும் பாதையில் புயலினால் கரைக்கு வந்த பல நூறு நட்சத்திர மீன்கள் இருப்பதை பார்த்திருக்கிறார். அந்த மீன்களுக்காக வருத்தப் பட்டுக் கொண்டே தன் நடையை தொடர்வது அவருடைய வாடிக்கை.

   

அன்றும் அப்படி புயலடித்து ஓய்ந்த பின் தாமஸ் கடற்கரைக்கு வந்திருந்தார். எப்போதும் போல பல மீன்கள் மணலில் இருந்தன!

  

அங்கே சிறுமி ஒருத்தி மணலில் இருந்து எதையோ எடுத்து அலைகள் பக்கம் சென்று வீசுவதையும், பின் மீண்டும் மணலுக்கு வந்து அதே வேலையை தொடர்வதையும் தாமஸ் பார்த்தார்!

  

அந்த சிறுமி என்ன செய்கிறாள் என்பது புரியாததால், அவளிடம் சென்றார்.

  

”என்ன செய்கிறாய்? எதை எடுத்து கடலில் வீசுகிறாய்?” என்று தாமஸ் அவளிடம் கேட்டார்.

  

“நட்சத்திர மீன்கள் புயலினால் கரைக்கு வந்து விட்டன. அவற்றை மீண்டும் கடலில் சேர்க்கிறேன். வெயில் வந்து விட்டால் அவற்றை காப்பாற்ற முடியாது!” என்றாள் சிறுமி.

  

“இங்கே பல நூற்றுக் கணக்கான மீன்கள் இருக்கிறதே, உன்னால் எல்லாவற்றையும் காப்பாற்ற முடியுமா? இது வேண்டாத வேலை. நீ ஒருத்தி இதை செய்வதால் ஒன்றுமே நடந்து விடாது!” என்றார் தாமஸ்.

  

சிறுமியோ பேசிக் கொண்டு சும்மா நிற்காமல் மீண்டும் ஒரு மீனை எடுத்து கடலில் விட்டாள். பின் தாமஸிடம்,

   

“ஏன் ஒன்றும் நடக்காது? நான் கடலில் விட்ட அந்த ஒரு மீனுக்கு மீண்டும் வாழ வாய்ப்பு கிடைத்து விட்டதே. எல்லா மீன்களையும் காப்பாற்ற முடியா விட்டாலும் என்னால் முடிந்த அளவிற்கு காப்பாற்றுவேன்” என்றாள்!

  

தாமஸ் திகைத்துப் போனார்!

  

இத்தனை நாட்களாக ஒன்றும் செய்யாமல் வேடிக்கைப் பார்த்த தன் செய்கையை எண்ணி வெட்கப் பட்டார்.

  

சிறுமியைப் போல அவரும் ஒதுங்கி இருக்கும் மீன்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுப் படலானார்!!!

  

கருத்து:

   

சிறிய அளவிலான செயல்களால் கூட பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்!

   

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.