(Reading time: 5 - 9 minutes)

கருத்துக் கதைகள் – 43. பணம் பத்தும் செய்யும்... - தங்கமணி சுவாமினாதன்

money

புதையப்புதைய சோஃபாவில் அமர்ந்திருந்தார் கிரீஷ்ராஜ்.இடது கையில் க்ளாஸில் ஐஸ் க்யூப்ஸ் மிதக்கும்  ஃபாரின் சரக்கு.வாயில் 555 சிகரெட் புகைந்து கொண்டிருக்க வலது கையால் காலருகே நின்றுகொண்டிருந்த உயர்தர கலப்பின நாயின் முதுகை வருடிக்கொண்டிருந்தார்.அன்றுதான் அது நாய்களுக்கான அழகு(?) நிலயம் சென்று வந்ததோ என்னவோ அப்படியொரு மினுமினுப்பு பளபளப்பு அதனிடத்தில்.மாதம் முப்பதாயிரமல்லவா அதற்கு மட்டன் வாங்கவும் பிடிக்ரீ வாங்கவும் செலவு செய்கிறார்.அது அப்படி இருப்பதில் வியப்பொன்றும் இல்லைதான்.அதற்கு செலவாகும் தொகையில் பாதிக்கும் பாதி கூட இல்லாத குடும்பங்கள் நாட்டில் எத்தனை எத்தனையோ?

ஐயா..ஐயா கத்திக்கொண்டே ஓடிவரும் சன்னாசியை தங்க ஃப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடியை மூக்கு நுனியிலிருந்து மேலே தூக்கிவிட்டபடி என்ன என்பது போல் பார்த்தார் கிரீஷ்ராஜ்.

ஐயா..நம்ம சின்னையா...கார ஓட்டிக்கிட்டு வரக்கொள்ள ஒரு பொம்பளையையும் அதும் இடுபுல இருந்த மூணு வயசு ஆம்புள்ளப் புள்ள மேலையும் ஏத்திட்டாராம்.ரெண்டு பேருமே ஸ்பாட்டுலேயே அவுட்டாம் யா.. நம்ம கனேசு போன் பன்ணுனான் ..என்னாங்காய்யா பன்ணுரது இப்ப..?

கையிலிருந்த க்ளாஸை தூக்கி அடித்தார் க்ரீஷ்..டேய்..எவண்டா பாத்தது எம்புள்ளதான் அதுங்க மேல கார ஏத்துனதுன்னு..?எவண்டா சொன்னது எம் புள்ளதான் கார ஏத்திக் கொன்னான்னு...?ரோட்டுல நடந்து வருதுங்கன்னா அதுங்க பஞ்சப் பராரியாகதான் இருக்குங்க...அதுங்க கூட்டம் வந்து சத்தம் போட்டுச்சுங்கன்னா..மூஞ்சில பணத்த எறிஞ்சிட்டு வரவேண்டிதுதானே? வெய்யக் கொளுத்துது..எம் புள்ள வையிலுலயா நிக்கிறான்..?..உயிர் போன ஏழைகளைப் பற்றி எள்ளளவும் நினைக்காமல் பிள்ளை வெயிலில் நிற்பானோ என பேசவைத்தது அவரின் பணம்.

அழைப்பு அழைக்க போனை எடுத்தார் க்ரீஷ்...

ஐயா..நாந்தான் பி2 போலிஸ் ஸ்டேஷன்லேர்ந்து இன்ஸ்பெக்டர் பேசரேன்யா...

யோவ்...என்னையா சொல்ற எம் புள்ளன்னு தெரிஞ்சும் ஸ்டேஷனுக்கு கொண்டு போக ஒனக்கு என்ன தைரியம்...

ஐயா..நெலம அப்பிடி..அரசியல் கட்சி தலைவருங்க சிலபேரு அந்த சனங்களுக்கு ஆதரவா வந்துட்டாங்கையா..

ஆமாம் ஆமாம்..தேர்தல் வந்தாச்சில்ல..இப்பிடி ஏழ ஜனங்களுக்கு ஆதரவு தர மாரி கோஷம் போட்டா பத்து ஓட்டாவது கூடக் கெடைகாதா டெபாசிட்டாவது மிஞ்சாதான்னு வருவானுக...அவனுங்கள நான் பாத்துக்கறேன்...

டுத்த பத்தாவது நிமிடம் என்ன மாயம் நிகழந்ததோ காரில் அடிபட்டுச் செத்த அந்த பெண்ணின் பிணமும் அவளின் மூன்று வயது மகனின் பிணமும் அக்குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் சில பேர் என்று பத்து பேரே மிஞ்சியிருந்தனர் சம்பவம் நிகழந்த இடத்தில்.108 ஊர்தி வந்து அள்ளிச் சென்றது பிணங்களை.

காவல் நிலையம்...காரில் அடிபட்டு இறந்த பெண்ணின் கணவன் அவனோடு அவனின் சொந்தக் காரர்கள் ஓரிருவர் இருந்தனர்.

மனைவியையும் மகனையும் பறி கொடுத்துவிட்டு அழுதபடி யிருக்கும் அவனை..ஏய் ஒம்பேரு என்ன?

இன்ஸ்பெக்டர் அதட்டினார்.

எம்பேரு மருதுங்க..

குடிப்பியா..

உண்டுங்க...

நேத்து குடிச்சிட்டி ஒம் பொண்டாடிய அடிச்சியாமே..?

இல்லீங்க..

ஏய் பொய் சொன்ன..

சத்தியமா அடிக்கிலீங்க எம் பொண்டாட்டின்னா எனக்கு உசிருங்க..ஒரு தபா கூட அடிச்சதில்லீங்க..

ஏய் பொய்யா சொல்லுற...ஒம் பொண்டாடிக்கும்..........க்கும் கள்ள ஒரவு இருக்குதாமில்ல..அது தெரிஞ்ச நீ ஒம் பொண்டாட்டிய சாவுடி..சாவுடின்னு அடிப்பியாமில்ல...

ஐயோ.ஐயோ..இப்பிடி எம் பொஞ்சாதி மேல அபாண்டமா பழி சொல்லாதீங்க..செத்துப் போய்ட்ட அவள இப்பிடி பேசுரது ந்யாயமில்லீங்க..ஆண்டவனுக்கே அடுக்காதுங்க..

ஏய் தொ பாரு..ஒ பொஞ்சாதி ஒன்னோட அடியும் அவள நீ சாவு சாவுன்னு சொல்ர வார்த்தையும் தாங்காம தானா கார்ல வந்து விழுந்து செத்துட்டா.தனக்கு அப்பரம் புள்ளைய நீ கவுனிப்பியொ மாட்டியோன்னு அதையும் தன்னோட கொண்டு போய்ட்டா..அதுனால ஒம் பொஞ்சாதிய நீ தற்கொலைக்கு தூண்டியதா ஒம் மேல கேஸ் போடலாம்.அப்பிடி போட்டா நீ ஆயுள் முழுக்க ஜெயில்லதான்.ஒம் மேல கேஸ் போட்டட்டா..இல்ல..எதுனாச்சும் கொஞ்சம் பணம் வாங்கி தரேன் கம்முன்னு நீட்டுன எடத்துல கையெழுத்து போட்டுட்டு போறியா?பொணத்தையும் ஆசுப்பத்திரிலேந்து ஈஸியா கெடைக்க ஏற்பாடு செய்யுறேன்...என்ன சொல்லுர?

மாட்டேன்யா.. மாட்டேன்...மாட்டேன் இத சும்மா வுட மாட்டேன்...

கடகட வென்று சிரித்தார் இன்ஸ்பெக்டர்.நீ ஒண்ணும் பண்ண முடியாது..கொஞ்ச நேரம் முன்னாடி ஒனக்கு ஆதரவா கோஷம் போட்ட அரசியல் தலைவருங்களும் சாட்சி சொல்ல வரதா காட்சிய பாத்தவங்க சொன்னதும் என்னாச்சு...?ஒரு பய வரமாட்டான்.நான் ரொம்ப நல்லவன்..அதுனாலதான் ஒங்கூட இவ்வளவு நேரம் பேசுறேன்.. இன்னும் ரெண்டு நிமிஷம் டயம் தரேன்.பதிலச் சொல்லு.இல்லாட்டி ஒன்ன கைது செய்ய வேண்டியிருக்கும்.

முடிந்தது.கையெழுத்துப் போட்டுவிட்டு காவல் நிலயம் விட்டு வெளியேறினான் அந்த ஏழை. அவனால் முடிந்தது ஒன்றுதான் அந்த களவாணிக்கூட்டதிடம் கை நீட்டிக் காசு வாங்கவில்லை.பணக்காரர்களுக்கு ஒரு நீதி..ஏழைகளுக்கு ஒரு நீதிதான் இன்றைய உலகில்.பணப்பெட்டியொன்று இன்ஸ்பெக்டருக்குக் கைமாறியது கைமாறாக.......பணம் பத்தும் செய்யும்.

 

கதை சொல்லும் கருத்து:

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை...

 

Story # 42 - Innaa seithaarukkum iniyave seithiduga

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.