(Reading time: 5 - 10 minutes)
Irulum oliyum
Irulum oliyum

சாவதானமாக இப்பொழுதுதான் ஆராய ஆரம்பித்திருந்தாள். தீபாவளிக்குக் கணவன் வரவேண்டும். பரம சாதுவாகிய தன் மாமியார். பிள்ளையை அனுப்பி வைப்பார் என்றும் நினைத்துக் கொண்டாள், சாவித்திரி.

முற்றத்தில் காகம் உட்கார்ந்து கத்தும் போதெல்லாம், ' ஹோ! அவர் வருகிறார் போல் இருக்கிறது!' என்று நினைத்து உவகை எய்துவாள்.

அன்று ராஜமையர் காரியாலயத்திலிருந்து திரும்பி வரும் போது கையில் பெரிய துணி மூட்டையுடன் வந்து சேர்ந்தார். காப்பி அருந்தி சற்று இளைப்பாறிய பின்பு மூட்டையைப் பிரித்து, "இது சாவித்திரிக்கு. இது சீதாவுக்கு, இது சந்துருவுக்கு. இது உனக்கு" என்று துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து மேஜை மீது வைத்தார்.

எலோருக்கும் போக ஒரு ஜதை சரிகை வேஷ்டி மிகுந் திருந்தது. சீதா குறும்புத்தனமாக அதைப் பார்த்துக் கொண்டே, * அப்பா! மாப்பிள்ளையை மறக்கவில்லை போல் இருக்கிறதே! ஜம்மென்று சரிகை - போட்டுப் பிரமாதமாக வாங்கியிருக்கிறீர்களே!" என்று கூறிச் சிரித்தாள். மாப்பிள்ளை வருவான் என்று ராஜமையரும் எதிர்பார்த்துத் தான் ஜவுளி எடுத்திருந்தார்.

"அடியே! இரண்டு பவுனில் கைக் கடியாரத்துக்குச் சங்கிலி பண்ணச் சொல்லி இருக்கிறேன். கையோடு இருக்கட்டுமே ஒன்று" என மங்களத்தைப் பார்த்துக் கூறினார் அவர்.

"அழைக்காத விட்டுக்குச் சம்பந்தியாக வரமாட்டானோ, உங்கள் மாப்பிள்ளை! ரொம்பத் தெரிந்தவர், நீங்கள்! உங்கள் தலை தீபாவளிக்கு என் அப்பா எப்படி-யெல்லாம் உபசாரம் பண்ணி இருந்தார் என்பதை நினைத்துப் பாருங்கள். ஒரு மாசத்துக்கு முன்பே கடிதங்களில் உங்களை வரச்சொல்லி எழுதி இருந்தாரே" என்று சமயத்தை விடாமல் மங்களம் இடித்துக் காட்டினாள்.

ரகுபதியோடு ஸரஸ்வதியும் வருவாள் அம்மா. அவளுக்கு நாம் ஏதாவது தீபாவளிப் பரிசு கொடுக்க வேண்டாமா?" என்று சந்துரு கேட்டான்.

"ஒரு நிமிஷங்கூட ஸரஸ்வதியை நீ மறக்கமாட்டாய் போலிருக்கிறதே! உன் வியாச புஸ்தகம் பூராவும் ஸரஸ்வதி நாம ஸ்மரணையாக இருக்கிறதே! இந்த ஸ்துதியைக் கேட்டு சாக்ஷாத் ஸ்ரீ ஸரஸ்வதியே பிரசன்னமாகி விடுவாள்; இல்லையா அண்ணா?" என்று சீதா தமையனைச் சமயம் பார்த்துத் தாக்கினாள்.

வெட்கத்தால் பதில் ஒன்றும் கூறாமல் சந்துரு மென்று விழுங்கினான். அந்த வீட்டில் ஒவ்வொருவரும் ரகுபதி வர வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். சந்துரு யாருக்கும் தெரியாமல் நடராஜரின் சித்திரம் ஒன்றை வாங்கி வைத்திருந்தான். சாதாரணப் புடைவையும், ரவிக்கையும் உன்னத லட்சியங்களுக்கு இருப்பிடமான ஸரஸ்வதிக்கு அளிப்பதற்குத் தகுதி உள்ளவைகளாக இல்லை. ஸரஸ்வதியைத் தீபாவளியின் போது சந்தித்தால் இந்தக் கலைப் பரிசை அவளுக்குக் கொடுக்க வேண்டும்; அவன் தூய காதல் ஈடேற தில்லையம்பலத்து இறைவன் அருள் புரிவான் என்றும் நம்பினான்..

-------------

தொடரும்

Go to Irulum oliyum story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.