(Reading time: 8 - 16 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 33 - ஸரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் : 33. என்னுடைய குற்றம்

லைத் தீபாவளிக்கு மாப்பிள்ளை வரவில்லை என்கிற ஒரு காரணமே மங்களத்தை மறுபடியும் படுக்கையில் தள்ளி விட்டது எனலாம். எந்த அழைப்பை வைத்துக்கொண்டு மாப்பிள்ளை வருவான் என்று எதிர்பார்த்திருந்தாளோ, அந்த அழைப்பை அவன் லட்சியம் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொண்டாள் மங்களம். இரு குடும்பங்களுக்கும் சௌஜன்ய பாவம் நிறைந்திருந்தால் ஒரு வேளை மாப்பிள்ளை அழைக்காமலேயே வந்திருப்பான்: ஓர் இடத்தில் பிரியமும், மதிப்பும் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் செய்யும் பெரிய குற்றங்களைக்கூட மறந்து விடுகிறோம். அவர்கள் நம்மை 'வா' என்று கூப்பிடாததற்கு முன்பே, நாமாகவே வலுவில் அங்கு போகிறோம். அவர்கள் முகங் கொடுத்துப் பேசாமல் இருந்தாலும் பாராட்டாமல் வந்து விடுகிறோம். "அவர்கள் சுபாவம் அப்படி" என்று நம் மனத்துக்கே நாம் தேறுதல் கூறிக் கொள்கிறோம். பிடிக்காத இடமாக இருந்தாலோ, ஒவ்வொரு விஷயத்தையும் தவறாக எடுத்துக்கொண்டு பிரமாதப்படுத்துவது மனித சுபாவம்.

சாதாரண சமயமாக இருந்தால் சந்துரு எழுதிய கடிதமே ரகுபதி வருவதற்குப் போதுமானது. ராஜமையர் வேறு எழுத வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சாவித்திரி தீபாவளிக்கு ஒரு மாசம் முன்பே கணவனுக்கு அன்புக் கட்டளை இட்டிருந்தால் வேறு ஒருத்தருமே கடிதம் போட்டிருக்க வேண்டாம்! ரகுபதி ஓடோடியும் வந்திருப்பான். நிலைமை மாறி இருக்கும்போது இவ்வளவு சரளமான சுபாவத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.

வீட்டில் எப்போதும் சண்டையும், சச்சரவும், வாதப் பிரதி வாதங்களுமாகச் சேர்ந்து மங்களத்தின் மனத்தை வெகுவாகக் கெடுத்துவிட்டன. சிறு வயதிலிருந்து மரியாதை செலுத்தி வந்த தன் மாமியாரிடம் மங்களத்தின் மனம் கசந்தது. மனஸ்தாபம் முற்றி விடுவதற்கு முன்பே ராஜமையர் தாயாரைத் தம் சகோதரியிடம் அனுப்பிவைத்தார். குடும்பத்துச் செய்திகள் ஒன்றுக்குப் பத்தாக ஊரில் பரவுவதை அவர் விரும்பவில்லை.

'சாவித்திரியின் மனம் ஒரு பெரிய புதிர். அவளுடைய மனத்தில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறதா? கணவனைப் பார்த்து, அவனுடன் சென்று வாழ்க்கை நடத்த வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாளா?' என்பதை யாராலும் அறிய முடியவில்லை. பெற்ற தாயிடமும், உடன் பிறந்த சகோதரியிடமுமே அவள் மனத்தை ஒளித்தாள் என்றால் வேறு யார் அவளை அறிய முடியும்? அவள் மனம் உற்சாகமில்லாமல் இருந்து வருவதை மட்டும் சீதா கண்டுபிடித்துவிட்டாள். வீட்டை விட்டு வெளியே எங்கும் போவதில்லை. கூடப் படித்த சிநேகிதிகளிடம் அதிகம் பேசுவதில்லை. அவர்களாகத் தேடி வந்தாலும், அவள் முகங்கொடுத்துப் பேசாவிட்டால் தாமாக விலகிச்சென்று விடுவார்கள்.

2 comments

  • ஒவ்வொருவர் மனத்தையும் அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார், ஆசிரியர். பாராட்டு!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.