(Reading time: 7 - 14 minutes)
Irulum oliyum
Irulum oliyum

நகரத்திலே குற்றங் குறைகள் யாருடைய கண்களிலும் அவ்வளவாகத் தென்படாது. குற்றத்தைக்கூட ஒரு நாகரிகம் என்று நினைத்து ஒதுங்கிப் போவார்கள். இங்கே அப்படி இல்லை: ஒன்றுக்குப் பத்தாகக் கதை கட்டிவிடுவார்கள். ஆமாம்....!"

ரகுபதி அவளைப் பார்த்து அழகு காட்டும் பாவனையாக, "ஆமாம்!" என்றான்.

"உன்னை என்னவோ என்று நினைத்திருந்தேன். நன்றாகப் பேசுகிறாயேடி அம்மா நீ! பெண்களே பேச்சில் வல்லவர்கள் என்று நினைக்கிறேன்!" என்று கூறிவிட்டு அவள் கையிலிருந்த புஷ்பக் குடலையைப் பற்றி, “இங்கே கொண்டு வா அதை. நான் எடுத்து வருகிறேன். தோளில் ஈரத் துணிகளின் சுமை அழுத்துவது போதாது என்று கையிலே வேறு!" என்று கூறிக் குடலையை வாங்கினான்.

தங்கம் பதறிப்போனாள். சட்டென்று குடலையை நழுவ விடவே அது கீழே விழுந்து மலர்கள் சிதறிப்போயின. மை தீட்டிய விழிகளால் அவனைச் சுட்டுவிடுவது போலப் பார்த்தாள் தங்கம்.

"அத்தான்! என் பெயருக்கு மாசு கற்பிக்காதீர்கள். என்னைத் தனியாக வந்து எங்கேயும் சந்திக்க வேண்டாம். மாசற்றவளாக இருக்கும்போதே என்னைச் சமூகம் கீழே தள்ளி மிதிக்கிறது. பிறகு கேட்கவே வேண்டாம். நான் ஏழைப் பெண் அத்தான்!" என்று கூறிவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு நடந்து விட்டாள் தங்கம்.

பெண் குலத்தின் பெருமையைக் கலையின் மூலம் உயர்த்த வேண்டும் என்று பாடுபட்டு வந்த ரகுபதியா அவன்? சந்தர்ப்பக் கோளாறுகளால் அவன் ஏன் இப்படி மாற வேண்டும்? கணவனின் நன்மை தீமைகளில் பங்கு கொள்ளாத மனைவியை அடைந்த குற்றந்தான் காரணமாக இருக்க வேண்டும். சாவித்திரிதான் அவன் இப்படி மாறி வருவதற்குக் காரணமானவள்.

ரகுபதி இனிமேல் கிராமத்தில் இருப்பதில்லை என்று தீர்மானித்துக் கொண்டான். அன்றே பகலில் சாப்பிடும்போது அலமுவிடம், "அத்தை! ஊருக்குப் போகிறேன். அம்மாவை விட்டு வந்து எவ்வளவோ நாட்களாகின்றன. ஸரஸ்வதியும் ஊரில் இல்லை!" " என்றான்.

இவ்வளவு நாட்கள் இங்கே இருந்துவிட்டு உன் வேட்டகத்துக்குப் போகாமல் திரும்புவது நன்றாக இல்லை ரகு. போய் உன் மனைவியை அழைத்துப் பாரேன். என்னவோ அப்பா எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன். அந்த வீட்டுக்கு உங்களால்தான் ஒளி ஏற்படவேண்டும். மன்னிக்கு ஒன்றுமே தெரியாது. பாவம், அவள் மனம் புழுங்கிச் சாகிறாள் ரகு. அவளுக்காகவாவது நீ சாவித்திரியுடன் வாழ்ந்துதான் ஆகவேண்டும்!" என்று உருக்கமாகக் கூறினாள் அலமு.

ரகுபதி எவ்விதத் தீர்மானத்துக்கும் வராமல் பெட்டி, படுக்கையைக் கட்டிக் கூடத்தில் வைத்துவிட்டு வெளியே போய் விட்டான்.

-----------

தொடரும்

Go to Irulum oliyum story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.