(Reading time: 21 - 42 minutes)
Irulum oliyum
Irulum oliyum

சேலையை மார்புவரைக்கும் கட்டிக் கொண்டு, வீட்டின் ஒரு மூலையில் இருந்த குழாய்க்கருகே, மல்லிகா குளித்துக் கொண்டிருந்தாள். ஒரு ஈயப்பாத்திரத்தி, பாதி தண்ணீர் இருந்தது. அவள் அக்காள் சந்திரா, குழாயருகே போய் ஒரு தவலைப் பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்கப் போனாள்.

மாடியில், ரமணன், மல்லிகாவை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையை தடுக்க முடியாத ஆதங்கத்தில், தன் உடம்பைத்தான் மறைக்க முடியாது, முகத்தையாவது மறைக்கலாம் என்று நினைத்தவள் போல், மல்லிகா, ஈயப்பாத்திரத்தில் இருந்த தண்ணீரைத் தலையில் ஊற்றி காலியாக்கிவிட்டு, கண்களை மூடி, முகத்திற்கு சோப்புத் தேய்த்துவிட்டு, பின்பு எரிச்சல் தாங்க முடியாமல் “சீக்கிரமாய் தண்ணீர் பிடிக்கா, முகமெல்லாம் எரியுது” என்று சொல்லிக் கொண்டிருந்த போது, திடீரென்று, ‘தவலை’யுடன் ‘தவலை’ மோதும் சத்தம் கேட்டது.

அப்போது, காலைப் பொழுது மணி சரியாக எட்டரை. இந்த எட்டரை மணி, அங்கே ‘ஏழரை நாட்டான்’ சனி மாதிரி ‘வீட்டுக்கார அம்மாவின்’ குடங்களுக்கு, குடித்தனக்காரக் குடங்கள் வழிவிட வேண்டும். அரைகுறையாக இருந்தாலும் சரி, அப்போதுதான் நீர் பிடித்துக் கொண்டிருந்தாலும் சரி, குடங்கள் எடுக்கப்படவில்லையானால், படிக்கட்டுகளில் தூக்கி, ‘டங்’கென்ற சத்தத்துடன் வைக்கப்படும். கேட்டால் “காலிபண்ணு.”

அந்த வழக்கமான பழக்கப்படி, வீட்டுக்கார அம்மா மாடியில் உதட்டைப் பிதுக்கிக் கொண்டே உலா வந்த போது, வீட்டு வேலைக்காரப் பெண், மடமடவென்று குழாய்ப் படிகளில் இறங்கி, சந்திரா பிடித்துக் கொண்டிருந்த தவலைப் பாத்திரத்தைத் தூக்கி, அங்கிருந்தபடியே சுவருக்கு மேலே தூக்கி, மேல் தளத்தில் வைத்துவிட்டு, எஜமானியின் எவர்சில்வர் தவலைப் பாத்திரத்தை வைத்துவிட்டு, இன்னும் இரண்டு மூன்று சாதாரண தவலைப் பாத்திரங்களைக் கொண்டு வரப் போனாள். சந்திராவோ வாயடைத்து, நெஞ்சடைத்து நின்றாள். அந்த வேலைக்காரப் பெண், உடம்பால் ‘ரூபி’ என்றாலும் குணத்தால் ‘அரூபி.’

“இன்னுமா தண்ணீர் பிடிக்கவில்லை?” என்று சொல்லிக் கொண்டே கண் திறந்த மல்லிகா, எஜமானி பாத்திரங்களால், தங்கள் தவலைப் பாத்திரம் ஒதுக்குப்புறமாக இருப்பதைப் பார்த்துவிட்டு, தவித்தாள்.

அன்றைக்கு வேலைக்குப் போகாத ராக்கம்மா, அந்தப் பக்கமாக வந்து “இந்த அநியாயத்தைக் கேட்டுதான் ஆகணும்” என்று சொல்லிக் கொண்டே, முந்தானைச் சேலையை இடுப்பில் செருகிய போது, மல்லிகா அவளைக் கண்களால் கெஞ்சி, கால்களைப் பிடித்து இழுத்துத் தடுத்துவிட்டாள். இன்னும் இரண்டு மூன்று பெண்கள், ஏதோ கேட்கப் போனார்கள். பிறகு

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.