(Reading time: 6 - 11 minutes)
Irulum oliyum
Irulum oliyum

எதிரியான ராமனையும் கழட்டி விட வேண்டும் என்ற பொது லட்சியம் அவர்களை ஒன்றுபடுத்தியது.

  

பார்வதி, இதை படிப்படியாகப் புரிந்து கொண்டாள். கணவனிடம், கதறிப் பார்த்தாள். அண்ணன்மாரின் பாசம், வெறும் பாசாங்கு என்பதைப் புரிய வைக்கப் பார்த்தாள். ஆனால் சொக்கலிங்கம், அவளிடமே பல தடவை “நான் எதுக்கு சொல்றேன்னா பேச்சி...” என்று, பேச்சியம்மாவையே பேச்சுக்குப் பேச்சு சொன்னதால்... அது முற்றிவிட்ட பைத்தியம் என்பதைக் கண்டு கொண்டாள். சகித்துக் கொள்ளப் பார்த்தாள். ஒரு தடவை “என் மகள் மல்லிகா கிட்டேயே போயிடுறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். சொக்கலிங்கம் அவளைப் பிடித்துக் கொண்டார். அவள், மார்க்கெட்டுக்குப் போகும் போது கூட கடைப்பையன்கள் மூலம் கண்காணித்தார். பார்வதியும் யோசித்தாள். எந்த முகத்தோடு என் மகளிடம் போக முடியும்? அவளை என்ன பாடு படுத்திவிட்டேன்... அவள் மனம் எப்படிக் கலங்கியிருக்கும்... அவள் இங்கே இருந்தால், இப்போ எப்படி இருக்கும்...!

  

பார்வதி யோசித்துக் கொண்டிருந்த போது, பின் யோசனை இல்லாமலே, சொக்கலிங்கத்திற்கும் பேச்சியம்மைக்கும் கல்யாணம் நிச்சயமாகி, தேதியும் குறித்தாகி விட்டது. சட்டாம்பட்டியில் இருந்து, சித்திக்காரி வந்து, வாயெல்லாம் பல்லாகப் பேசி, பணத்தை வாங்கிக் கொண்டு போய்விட்டாள். இனிமேல் பேச்சியைப் பிடித்துக் கொடுக்க வேண்டியது தான் பாக்கி.

  

விஷயத்தைக் கேள்விப்பட்ட ராமன் கொதித்தான். ‘ஒரு நாள் சின்ன மாமா கடையில், ஏதோ ‘தமாஷா’ சோடா பாட்டில் வீசினால், சோமாறி மாமன்கள் இப்படியா பண்றது. அந்த ‘கிழவன்’ இன்னாதான் நினைச்சிருக்கிறான். ஒரே பூடு பூட்டாத்தான் புத்தி வரும்! எனக்கு சொத்து தாரதாய் சொல்லிட்டு, என்னான்டயே, வேலையைக் காட்டுறான் கஸ்மாலம்’ என்று கொதித்து எழுந்தான். வயிறு முட்டக் குடித்து விட்டு, சொக்கலிங்கத்தின் முன்னால் வந்து கத்தினான்.

  

கிழவா... அந்தப் பெண்ணோட வயசென்ன ஒன்னோட வயசென்ன... யோசித்துப் பாருடா... அப்பாவிப் பொண்ணை ஏண்டா கெடுக்கிறே கஸ்மாலம்? மவனே... இப்போ சொல்றது தான், எப்போ சொல்றதும்... நீ எனக்கு சொத்து தராட்டியும் பரவாயில்லே... பேசாம மல்லிகாவை... கூட்டிக்கினு வா... அவள் எனக்கு வேண்டாம். ரீசண்டான மாப்பிள்ளையாப் பார்த்து கல்யாணம் செய்து வை. இல்லே... ஏண்டா கஸ்மாலம் பேச மாட்டே? சாவுற வயசுல ஆசயப் பாரு... ஏய்... டேய்... ஏய்...”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.