(Reading time: 12 - 24 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

இடுப்பில் செருகி வைப்பதற்கும் எடுத்துச் செலவு செய்வதற்கும் ஒரு வாய்ப்பு, தலையில் கூடையும் மூட்டையும் இல்லாமல் நடந்தறியாத பெண்களுக்குக் கடைத்தெருக்களில் கைவீசி நடப்பதற்கு ஒரு வாய்ப்பு; இவ்வாறு பலதிற ஏழைமக்களுக்குப் பலவகை வாய்ப்பைக் கொடுத்து மகிழ்ச்சி அளித்தது அந்தத் திருவிழா. யந்திரம் போல் சுவையற்று இயங்கும் வாழ்வில் எந்த மாறுதல் வந்தாலும் அது வரவேற்கத்தக்க இன்பம் ஆகும். ஆகையால் கிராம மக்களுக்குத் திருவிழா பெரிய இன்ப நாளாகக் கழிந்தது. அவர்களின் கையில் இருந்து வந்த காசுகளால் பெட்டிகள் நிறைவதைக் கண்ட வியாபாரிகளுக்கும் திருவிழா இன்பம் தந்தது. பலவகைத் தொழிலாளர்க்கும் இன்பம் தந்தது. ஆடிய ஆட்டமே ஆடி, படித்த பாடத்தையே படித்து வந்த எங்கள் உள்ளத்திற்கும் அது இன்பம் தந்தது. ஆனால் என் உள்ளத்தில் கற்பகத்தின் நினைவுதான் இனிய புதிய பதிவாக நின்றது.

  

திருவிழா முடிந்ததும், கூட்டம் எப்படியோ கலைந்தது. எங்கள் ஊரை அடுத்து ஓடும் பாலாற்றில் வெள்ளம் வந்தால் ஏழுநாளுக்குள் முற்றிலும் வடிந்து போவது போல், திருவிழாக் கூட்டமும் வடிந்து போய்விட்டது. என் அத்தையும் கயற்கண்ணியும் மறுநாள் காலையில் விடைபெற்றுச் சென்றார்கள். சந்திரனுடைய தாயும் தங்கையும் அடுத்த நாள் பிற்பகல் விடைபெற்றார்கள். அவர்கள் போகுமுன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அப்போது பாக்கிய அம்மையார் எங்களோடு இருந்தார். அம்மா கற்பகத்தின் கையில் நான்கு வாழைப் பழங்களும் காலணாவும் கொடுத்து அவளுடைய கன்னத்தைக் கிள்ளி, "போய்வா அம்மா! அடுத்த விடுமுறையில் வந்து போ" என்றார். பாக்கிய அம்மையார் கற்பகத்தைக் கட்டி அணைத்துக் கன்னத்தில் முத்தம் இட்டு விடைகொடுத்தார். நான் பேசாமல் பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன். வாயிற்படியைத் தாண்டியபோது கற்பகத்தின் சுறுசுறுப்பான கண்கள் திரும்பிப் பார்த்து என்னிடம் விடைபெற்றன. நான் அவளையே பார்த்தபடி நின்றிருந்தேன். "நல்ல பெண்! இல்லையா அண்ணா?" என்ற என் தங்கையின் குரல்கேட்ட பின் திரும்பி வந்தேன்.

  

சிலருடன் வாழ்நாள் எல்லாம் பழகுகிறோம். ஆனால் பழகிய எல்லா நாட்களும் நினைவில் நிற்பதில்லை. முதலில் கண்டு பேசிய நாள், அதுபோல் முக்கியமான ஒரு சில நாட்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன. சந்திரனைப் பொறுத்த வரையில் காற்றாடிக்காக அவனுடன் முதலில் பேசிப் பழகிய நாள் பச்சென்று நினைவில் இருக்கிறது. கற்பகத்தைப் பொறுத்தவரையில், அன்று திருவிழா முடிந்து ஊர்க்குச் சென்றபோது பார்வையாலேயே விடை பெற்ற காட்சி நிலைத்து நிற்கிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.