(Reading time: 9 - 17 minutes)
Vata malli
Vata malli

இப்படியுமாய் ஒரு தோட்டத்தை அடகு வைத்து, இருபது நாட்கள் கழித்தே அவனை இங்கே சேர்த்தார்கள். இங்கே வந்து ஒரு வாரமாகிவிட்டது. அப்பா ஒரு தடவை வந்தார். அண்ணன் பலதடவை வந்தான். மோகனா வெளியே நின்றே பார்த்துவிட்டுப் போய்விட்டாள். அக்கா வர முடியாது. அண்ணி வரவில்லை.

  

சுயம்பு, அந்தக் கல்யாண அழைப்பிதழை மாறி மாறிப் படித்துவிட்டான். கொல்லனுரர் ராமசாமியின் சத் புத்திரன் மலைச்சாமிக்கும், நல்லாம்பட்டி பிள்ளையார் மகள் செளபாக்கியவதி மரகதத்துக்கும், பெரியவர்கள் நிச்சயித்த திருமணம். வருகையை விரும்புவோர் என்ற பட்டியலில் சித்தப்பா, சித்தி, சண்முகம், ருக்குமணி பெயர். நிலக்கிழார் என்ற பட்டத்தில் ஆறுமுகப்பாண்டி. சுயம்பு என்ஜினியராம்... அழைப்பிதழின் முகப்பில், அண்ணன் ஆதி நாராயணன் தங்கை ஆதிபராசக்தியை எல்லாம் வல்ல ஈஸ்வரனுக்கு சந்திரர், சூரியர் சாட்சியாய் கைபிடித்துக் கொடுக்கும் டபுள் கலர் காட்சி!

  

சுயம்பு, அந்த அழைப்பிதழை இரண்டாய்ப் பிரித்து, தனது பேரை பெருமையாகவும் பார்த்தான். பார்த்துப் பார்த்து வெறுமையாகவும் சிரித்தான். இப்போதுதான் அவன் பெயர் பட்டி தொட்டி அளவில் முதல் தடவையாய் அச்சில் வந்திருக்கிறது. அதுவும் எப்படிப்பட்ட அறிமுகம். என்ஜினியர்!

  

சுயம்பு பல்லைக் கடித்தான். அண்ணன் வந்தான்; அழைப்பிதழ் கொடுத்துவிட்டுப் போனான். ஆசையோடு பேசிய அண்ணன் கடைசியில் தன்னைக் கூட்டிக்கொண்டு போவதற்குப் பதிலாக “கலியாணத்தைப் பார்க்க முடியலியேன்னு ஏண்டா கலங்குறே. அக்கா, ஒரேயடியாவா போயிடப்போறாள். பத்து மாதத்துக்குள்ளே நம்ம வீட்டுக்கு வந்துதானே ஆகணும்” என்று நம்பிக்கையோடு சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

  

சுயம்பு தனிமையில் தவித்தான். அவனிடம் பேச்சுக் கொடுக்க ஒரு காக்கா குருவிகூட கிடையாது. அந்தப் பக்கம் வரும் நர்ஸம்மாகூட, இவன் பொதுப்படையாக ஏதாவது கேட்டால்கூட, ‘சுகமாயிடும்’ என்று ஒரே வார்த்தையில் சுகமில்லாமல் பதிலளித்தாள். நர்ஸிங் படிப்பு படித்துவிட்டு, ஆயிரக்கணக்கில் பணம் பிடுங்கும் அந்த ஆஸ்பத்திரி - லாட்ஜில், அவளுக்குச் சம்பளம் ஐநூறைத் தாண்டவில்லை என்பது இவனுக்குத் தெரியாது. அவளும், தன்னை உதாசீனம் செய்வதாக நினைத்தான்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.