அங்கேயே இறங்கி விடுங்கள் - என்றான்.
இதுகேட்ட கோமதி அதற்கிசைந்து வண்டியில் தன்னிரு பெண்களோடு அமர்ந்தாள். வண்டி செல்லலாயிற்று. சுமார் ஒரு மைல் தூரம் சென்றதும் வண்டியை ஒரு வீட்டின் வாசலில் நிறுத்தி அவன் "பையன் எழுந்து போய்விட்டானா!" என்று வீதியிவிருந்த கிழவியைக் கேட்டான். அதற்குக் கிழவி "பையன் நம்முடைய பங்களாவுக்குப் போயிருக்கிறான்" என்றாள். இது கேட்ட மனிதன் கோமதியை நோக்கி “அம்மா! உங்கள் மகன் என்னுடைய பங்களாவுக்குச் சென்றிருக்கிறானாம். வாருங்கள்; அங்கேயே போகலாம்" என்று கூறினான்.
கோமதிக்கோ, "நம் மகன் விரைவில் ஆகாரம் கொண்டு வருவதாகக் சென்றவன் இவ்விதம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறானே!" என்ற கோபமும் சற்று உண்டாயது, அதை அடக்கிக் கொண்டு அவனோடு பங்களாவிற்குச் செல்ல இசைந்தாள். வண்டி பின்னும் பலத் தெருக்களில் சென்று ஓர் பெரிய சவுக்குத் தோப்புக்குள் சென்றது. இருபுறமும் சவுக்கு மரங்கள் அடர்ந்திருந்தன. அந்த சவுக்கு மரங்கள் நல்ல செழிப்பாயும் உயரமாயும் வளர்ந்திருந்தமையினால் அவ்விடத்தில் சூரியனுடைய ரஸ்மி பூமியில் படாதவாறு நிழலாக இருந்தது. அந்த அடர்ந்த இடத்தில் வண்டி செல்கையில் கோமதியின் முகத்தில் உண்டான மாறுதலைக் கண்டு அந்த மனிதன், "அம்மா! அதோ தெரியும் பங்களாதான் என்னுடையது. இந்த சவுக்குத் தோட்டமும் அந்த பங்களாவும் அதைச் சுற்றியுள்ள அனேக தோட்டங்களும் என் சொந்தமானவை. கடவுள் எனக்கு ஏராளமான செல்வம் கொடுத்திருக்கிறார்" என்று பேசிக்கொண்டே யிருக்கையில் பங்களாவின் முன்பு வண்டி நின்றது.
வண்டியினின்றும் அம்மனிதன் இறங்கி, கோமதியையும் இறங்கச் செய்து உள்ளே அழைத்துச் சென்றான். அப் பங்களா வாசலில் நின்றிருந்த வேலைக்காரன் இவர்களை வெகு மரியாதை யோடு அழைத்துச் சென்றான். வந்த மனிதன் அவனை நோக்கி "பையன் உள்ளே இருக்கிறானா?" என்றான். "இருக்கிறான்" என்கிற பதிலைப் பெற்றதும் கோமதி மனம் மகிழ்ந்து "கேசவா! என் கண்மணீ! கேசவா! கேசவா!" என்று வெகு பக்ஷத்துடன் அழைத்துக்கொண்டே உள்ளே சென்றாள். பதில் ஒன்று மில்லாமையினால் தன்னை அழைத்துக்கொண்டு வந்த மனிதனை நோக்கி "ஐயா! என் குழந்தை எங்கே! இங்கிருப்பதாகத் தெரிவித்தீரே! என் குழந்தையைக் கூப்பிடும். நான் செல்லவேண்டும்" என்றாள்.
இதுகேட்ட அம் மனிதன் “அம்மா! நீங்கள் முதலில் சாப்பிடுங்கள்; பிறகு பேசிக் கொள்வோம்."