Flexi Classics தொடர்கதை - பரிமள கேசவன் - 03 - வை. மு. கோதைநாயகி அம்மாள்
பற்றுடையோரன்பு - சிற்றின்பத் துன்பம்
மரத்தடியில் தாயைக் காணாது தத்தளித்த கேசவன் அக்கம் பக்கத்தில் விசாரித்தான். ஒரு தகவலும் தெரியவில்லை; கண் கலங்கினான், "ஐயோ! என் தாயே! என்னை விட்டு நீ எங்கு சென்றாய்? உன்பொருட்டு நான் எத்தனை வேகமாய் வந்தும் உன் முகதரிசனம் கிடைக்காது உன்னையே பறிகொடுத்தவன் போலத் திண்டாடுகின்றேனே! ஹா! அம்மா! அம்மா! பாலா! லீலா!" என்று கதறினான். கேசவன் தந்தையை என்றும் அதிகமாக பக்ஷத்துடன் நேசித்தறியமாட் டான். தாயிடத்திலேயே பெரும் பாசம் வைத்திருந்தான். ஆதலால் தாயின் பிரிவும், தங்கைகளின் பிரிவும் அவன் சிறிய பாலகனாயினும் அபாரமான துக்கத்தை பளித்தன. இனிமேல் தான் தங்கைகளையும், தாயாரையும் எங்குத் தேடுவது? தான் யாரிடம் அண்டி விசாரிப்பது, என்ற கட்டுமீறிய கலக்கத்தினால் விம்மி விம்மிப் புலம்பிக்கொண்டே வழியோடு செல்லலானான்.
வழியில் பார்ப்பவர்களெல்லாம் "ஏனப்பா அழுகிறாய்? " என்று கேட்டால் “என் தாயாரைக் காணவில்லை" என்று தன் கதையைக் கூறுவான். இவன் தாயாரைக் கண்டவர்கள் யார்? இக் கலியின் முதிர்ச்சியில் செல்வவந்தர்களைச் சிறப்பித்து ஆதரிப்பதும், தனத்தின்மேல் தனத்தைத் தேடிப் புதைப்பதும், தன்னுடைய சுய நலத்தை மட்டும் கவனித்துப் பிறரின் விஷயத்தில் எது எவ்விதமாயினும் அக்கரை, இன்றி அதிலும் ஏழை என்றால் சற்றும் இரக்கமின்றி அவர்களை அலக்ஷ்யம் செய்துத் திட்டி வேலை வாங்குவதுமாக இருக்கும் நிலைமையில் இந்த அனாதைச் சிறுவனைக் கவனிப்பார் உண்டா! விசாரிப்பதும் விலகுவதுமாகவே வெகுபேர்கள் சென்று விட்டார்கள்.
-----
இவனுக்குத் தான் படித்த இலவச பாடசாலையின் உபாத்தியாயரையும் சில பையன்களையும் தவிர வேறு யாரையும் தெரியா தாகையினால் தனது பாடசாலையை நோக்கி நடந்து உபாத்தியாயரைக் கண்டு அவரிடத்தில், நடந்த சகலமான விஷயங்களையும் தெரிவித்தான். உபாத்தியாயர் கேசவனின் புத்தி சூக்ஷ்மத்தைக்கண்டு என்றும் அவனிடம் பக்ஷமாயிருப்பவராதலால் கேசவனின் கதையைக் கேட்டதும் மிக்க துயரமடைந்து "அப்பா! நான் இவ்விஷயத்தைப் போலீசாரிடத்தில் தெரிவிக்கிறேன். உன்னுடைய தாயார் வரும்வரையில் நீ என் வீட்டிலேயே சாப்பிட்டுக்கொண்டு பாடசாலையில் படித்துவா; பிறகு பார்க்கலாம்" என்றார்.
இது கேட்ட கேசவன் அதற்கு ஒப்புக்கொண்டு, அவர் வீட்டிலேயே இருந்தான். அவனுடைய