இந்தக் கொடிய தொத்து நோயாகிய நரசோரத்திற்குள் பெருஞ் சோரமாகிய கற்பைப் பங்கம் செய்ய எண்ணும் புண்ணிய வான்களின் கண்ணில் நமது கோமதி இங்கு வேலைக்கு வந்து சுமார் ஒரு வருடத்திற்கு மேல் படாமலிருந்தாள்; எனினும் அதற்குமேல் அந்த பாதகர்கள் தங்கள் எண்ணத்தை வெளியிட்டுக் கூறியதை அறிந்த கோமதி அவர்களைத் துரும்பிலும் துரும்பாக மதித்து வெகு அலக்ஷ்யமாகப் பேசி உதாசீனம் செய்து "ஏ பாதகர்களே! உங்கள் அநியாயத்தைக் கண்டிக்க எந்த தெய்வமும் முன்வரவில்லை; உங்களுடைய பேய்க் குணத்தை அடக்க எந்த கவர்ன்மெண்டும் கவனிக்கவில்லை என்னும் மமதை உங்களை இத்தகைய அடாத செய்கையில் புகுத்துகின்றது. இதையழிக்கக் கடவுள் பார்த்துக் கொண்டு தானிருப்பார். என்னுயிரை இழந்தாலும் இழப்பேன். என் கற்பை உங்களுக்கு அர்ப்பணம் செய்யமாட்டேன்” என்று முறைப்பாகக் கூறிவிட்டாள். இதுகேட்ட அவர்களுக்கு ஆத்திரம் மூண்டுவிட்டது.... இந்த ஆத்திரத்தினால் அவளை இன்னும் கொடுமையாக நடத்தினார்கள். அந்தத் தீவை விட்டு வருவதற்கு ஒருவித வழியும் தெரியாமல் விழித்தவாறு கடவுளை வேண்டிக்கொண்டு தன் காலத்தைக் கடத்தலானாள். இக் குழந்தைகளுடன் அங்கு கோமதி யடைந்த துன்பத்தை நேரில் கண்டவர்கள் தானறிவார்கள்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
முற்றும்!