இளங்கோ, சக்கரங்கள் கழலாமல் அவை அப்படியே நிற்பது போன்ற அசுர வேகத்தில் பைக்கை பாயவிட்டான். அந்த கிராஸ் தெருவைத் தாண்டி, பிரதான சாலைக்கு வந்து, வலது பக்கமாக வண்டியைத் திருப்பியபோது, பழைய முனுசாமி இரண்டு கைகளையும் முறுக்காய் விரித்துப் போட்டு, பிறகு, காக்காய் இறக்கைகளை ஆட்டுவது போல இரண்டு பக்கமும் கைகளை ஆட்டி வண்டியை நிற்க வைத்தான். அவன் தள்ளாடித் தடுமாறி நின்றிருந்தால் இளங்கோ வண்டியை வேறு பக்கம் திருப்பி விரைந்திருப்பான். ஆனால், முனுசாமியோ நிதானம் இழக்காமல் நின்றான். கண்களால் காரணம் கேட்ட இளங்கோவிற்கு அவன் பதிலளித்தான் :
"இன்னடா, சரோசா கொடுத்த சாராயத்துல நம்மள அம்போன்னு விட்டுட்டு அலாக்கா படுத்த முனுசாமி இப்போ முழுசா வந்து நிக்றானேனு பார்க்கிறியா? நானு வேணுன்னுதான் அப்படி நடிச்சேன். ஒரு மூட்டைப் பூச்சியை நாமே நகக்குறப்போ அது செத்தது மாதிரி சுருண்டு கீழே அப்படியே கெடக்குமே... எதுக்காம்? நாம அதை வுட்டுடுவோமுன்னுதானே... இதே போல இந்த முனுசாமி அப்படியே வீந்தா... அவளோட தோஸ்துங்க எனக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லன்னு நினைக்கணும்பாரு... இல்லாட்டி ஒன்னோட இந்த தோஸ்து இப்போ ஒரு முக்கியமான சமாச்சாரத்தைச் சொல்ல முடியாமல் போயிருக்குமே."
முனுசாமி தமாசாய் பேசுவது போல் பேசிவிட்டு, மோட்டார் பைக்கின் கண்ணாடி முன்னால் முகத்தைத் தடவிவிட்டபடியே இளங்கோவின் அருகே நெருங்கிப் போனான். அடித்தொண்டையில் ரகசியம் பேசுவதுபோல் பேசினான் :
"எதுக்கும் போலீஸ்லே சொல்லி ஒரு துப்பாக்கி வாங்கி வச்சுக்கோ."
"துப்பாக்கியா? ஒரு குருவியைச் சுட்டாக்கூடப் பொறுக்காதவன் நான். நரிக்குறவங்க இந்தப் பக்கம் வில்லும் கல்லுமா வந்தால், அவங்களை சத்தம் போட்டு துரத்துறவன் நான். எனக்கு எதுக்குப்பா துப்பாக்கி?'
"ஏதோ உன் தோஸ்து, சொல்றதச் சொல்லிட்டேன். அப்புறம் ஒன்னோட இஷ்டம்.”
"விவரமாத்தான் சொல்லேன் முனுசாமி.”