பேர்வழிகள், வண்டிகளை கோலம் போடுவது மாதிரி அங்குமிங்குமாய் வளைத்து ஒரு போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது தற்செயலாக எதிர்த் திசையில் இருந்த பஸ் நிலையத்தைப் பார்த்த இளங்கோ நிமிர்ந்தான். இதனால் அவன் முதுகில் சாத்தி வைக்கப்பட்ட பாமாவின் மோவாயும் அங்குமிங்குமாய் அவன் முதுகைச் சுரண்டியது. இளங்கோ பார்த்த எதிர்த் திசையில் -
சந்தேகமில்லை. சரோசாதான். எப்படி இவள் சரோசாவாக இருக்க முடியும்? வயிறு முழுப் பானை மாதிரி முன்னுக்குத் தள்ளி இருக்கே? பின்புறம் வேறு ஒரு மாதிரி தெரியுதே. இந்த ஒரு வாரத்திற்குள் அவள் எப்படி ஒன்பது மாதக் கர்ப்பிணியாகி இருப்பாள்? ஒரு வேளை, இவள், அவள் அக்காவாக இருப்பாளோ? தன்னை நோட்டம் பார்ப்பதற்கு வந்திருப்பாளோ? இல்லையானால் போலீஸ் அவள் வயிற்றில் குத்தி வீங்க வைத்திருக்குமோ? அதே முகம்; அதே தோரணை.
இளங்கோ, குழம்பிப் போனான். அதே சமயம், அவள் அவனையே பார்ப்பதுபோல் இருந்தது. அப்படி அவள், தன்னைப் பார்க்கிறாளா என்பதைப் பார்ப்பதற்காக முன்பு கல்லூரிக் காலத்தில் ‘சைட்' அடிப்பவனைக் கண்டு பிடிப்பதற்கு ஒருவன் சொல்லிக் கொடுத்த டெக்னிக்கைப் பயன்படுத்தினான். குறுக்காகப் போய்க் கொண்டிருந்த ஒரு பஸ்சை அவன் பார்த்தான். உடனே அவளும் அந்தப் பஸ்சைப் பார்ப்பதுபோல இருந்தது. ஆகாயத்தைப் பார்த்தான். அவளும் அண்ணாந்து பார்த்தாள். சந்தேகமில்லை. இவள் பார்வையில் ஏதோ மர்மம் இருக்கிறது.
இதற்குள், பச்சை விளக்கு வந்துவிட்டது. அவன் போவதையே அந்தக் கர்ப்பிணிப் பெண்ணும், முகத்தை சுற்றவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துக் கொண்டே வண்டியைத் திருப்பிய இளங்கோ, ஒரு ஸ்கூட்டர்காரனிடம் திட்டு வாங்கினான். அவனை சரோசாவின் கையாளாக அனுமானித்துக் கொண்டு இவனும் பதிலுக்குத் திட்டியபடியே வண்டியை அழுத்தினான். கால்கிலோ மீட்டருக்கு அப்பால் அதை நிறுத்தினான். அவன் தோளில் கைபோட்டிருந்த பாமா அவனது முகத்தை தன் பக்கமாகத் திருப்பிக் கேட்டாள்:
"என்ன ஆச்சு உங்களுக்கு?"
“எங்க ஆபீஸரு. அதோ, அந்த லேபர் இன்ஸ்டிடியூட்லே ஒரு விவரம் வாங்கிட்டு வரச்