Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 11 - சு. சமுத்திரம்
சென்னைப் பெருநகர் காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்குள், அந்த ஆட்டோ ரிக்ஷா பயபக்தியுடன் நின்றது. புலி போன்ற உறுமல் சத்தத்தை நிறுத்தி விட்டு, அது பூனை மாதிரி நின்ற போதும், ஒரு வெள்ளை யூனிபார போலீஸ்காரர், அங்கே ஓடிவந்து டிரைவரை செல்லமாகத் திட்டினார்:
"ஏம்பா, நீ, பெரிய ஆட்களை கூட்டிட்டு வந்ததாகவே இருக்கட்டும். அதுக்காக எங்க கண்ணு முன்னாலேயே நாலு பேர ஏத்திட்டு வரணுமா? கேட்டுல ஒருத்தர இறங்கி வரச் சொல்லக்கூடாதா? போலீசுன்னா அவ்வளவு கிள்ளுக்கீரையாப் போச்சா?"
பாமாவும் இளங்கோவும் டிரைவர் பதில் சொல்லட்டும் என்பது போலவும், அந்த கான்ஸ்டபிளிடம் பேசுவது தகுதிக் குறைவு என்பது போலவும் நினைப்பதாய், வெள்ளைச் சட்டைக்காரர் நினைத்துக் கொண்டார். ஆனால், ருக்குமணியை ஒரு ஓரத்தில் தள்ளிவிட்டு, இடுப்பில் இடுப்பு உரச, தோளில் தோள் மோத, ஜோடி சேர்ந்து அமர்ந்திருந்த அவர்களுக்கு ஆட்டோ அங்கே நின்றதே நினைவில்லை. ருக்குமணிதான், தனது பையனைப் பிடித்துக் கொண்டே, கீழே குதித்தாள். பூ மாலைகள் வைக்கப்படும் மேசையையும், பூக் கூடைகளையும், லத்தியால் தட்டி கீழே இழுத்துப் போடுவது இந்த வெள்ளைச் சட்டைக்காரர்கள் தானே... ஆகையால் அவள் பயந்து போனாள். அவளைப் போலவே அந்த டிரைவரும் தலையைச் சொறிந்து கொண்டே அந்த போலீஸ் மனிதர் முன்னால் பல்லைக் காட்டினார். பாமாவும், இளங்கோவும் போட்டி போட்டுக் கொடுத்த ஆட்டோ கட்டண ரூபாய் நோட்டுகளை வாங்காமல், ஆட்டோவிள நம்பர் பிளேட்டை லாவகமாக டிரைவர் மறைத்து நின்றார். போலீஸ்காரர் தன்னுடைய பரிபாலனத்துக்கு எதிர்ப்பு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு போய்விட்டார்.
சென்னை நகருக்கே காவல் சக்ரவர்த்தியான அந்த வளாகம், எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருந்தது, ருக்குமணிக்கு ஆச்சரியமாக இருந்தது. 'நாயே பேயே' என்று கத்தாமல் ஆங்காங்கே நிற்கும் போலீஸ்காரர்களையும், போலீஸ் வேன்களையும், கராமுரா சத்தம் போடும் ஜீப்புகளையும் பயபக்தியோடு பார்த்தாள். அவளுக்கே சந்தேகம்... அது போலீஸ் ஆபீசா... இல்லை சாதாரண ஏதோவொரு அலுவலகமா என்று. அங்கே நின்ற சிவில் உடைக்காரர்கள் அனைவரும் காவல் நிலையத்தில் நிற்பவர்களைப் போல் நிற்காமல் சாதாரணமாக நிற்பதைப் பார்த்ததும், இவளும் தன்னை வழக்கத்திற்கு அதிகமாக தனது