இளங்கோ, ருக்குமணியை முந்திக் கொண்டு பேசினான். தோளில் விழுந்த பாமாவின் கையை தனது இடது கையால் எடுத்து, வல்து கைக்குள் சங்கமமாக்கி உறுதிபடப் பேசினான் :
"நமக்கு எதிர்காலத்தில் ஓர் ஆபத்து ஏற்படுறதாய் நினைத்து இப்போ, சரோசாவுக்கு வந்திருக்கிற ஆபத்தை அலட்சியப் படுத்தக் கூடாது... பாமா. என்ன ஆனாலும் சரி, நம்மால அவள் ஜெயிலுக்குப் போகக்கூடாது. இல்லாவிட்டால் நமக்கும் அவளோட செட்டுக்கும் வித்தியாசம் இருக்க முடியாது."
"தனக்குப் போகத்தான் தானம் சாரே... வளர்த்த கடா மார்புல பாயறது மாதிரி ஆயிடப்படாது பாருங்க."
ஒரு கடாயை நாம் வளர்க்கிறதே, அத வெட்டித் தின்கிறதுக்காகத்தானே. அப்போ அது மார்புல பாயுறதுல என்ன தப்பு? நாம் ஒருத்தருக்கு விசுவாசமா உதவினால், அவங்களும் விசுவாசமா நம்மகிட்ட இருப்பாங்க. இதுல, எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அதோட யதார்த்தமாய் பார்த்தால், சரோசாவை ஜெயிலுக்கு அனுப்பினால்தான், அவளோட செட்டுக்கு என் மேல கோபம் வரும். இன்ஸ்பெக்டரும், அவள விடுதலையா குறதுக்கு நாம் மேற்கொண்ட முயற்சிகளை சொல்லதான் போறாரு. இதனால் அவளுக்கும், அவளோட ஆட்களுக்கும் இப்போ கோபம் இருந்தாலும், அப்புறமா தணிஞ்சுடும். என்ன பாமா... நான் சொல்றது...சரிதானே?"
பாமா சரியா, சரியில்லையா என்று அவனையே திருப்பிக் கேட்பது போல் பார்த்தாள். ருக்குமணி மவுனமாய் இருந்ததில் இருந்து அவளுக்கும் இளங்கோ சொல்வது சரிஎன்று பட்டது போல் தோன்றியது. இருந்தாலும் பாமா பதறிப் பதறிப் பேசினாள்.
"எனக்குத் தலையே வெடிச்சிடும் போல இருக்குது. இது நாயர் பிடிச்ச புலிவால் மாதிரி தோணுது. விடவும் முடியல, தொடவும் முடியல... இவருக்கு ஏதாவது...”
விம்மப்போன பாமா, தன்னைச் சரிப்படுத்திக் கொண்டாள். இளங்கோ அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே, அவளையும், ருக்குமணியையும் கூட்டிக் கொண்டு உள்ளே போனாள். இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உரையாடலுக்கு தடங்கல் ஏற்படுத்தியபடி முடிவை