அறிவித்தான்:
“எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை சார். ஆனால், நியாயத்துக்குத்தான் எதுவும் நடந்துடக்கூடாது. தயவு செய்து சரோசாவை விடுதலை செய்திடுங்க சார்."
மேஜையில் பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், அவனைப் பார்க்காமலேயே பேசினார்:
“ஆல் ரைட்... ரைட்டர் கிட்ட போய் உங்க புகாரை வாபஸ் வாங்குறதாய் ஒரு மனு கொடுங்க. ஒன் பேரு என்னம்மா? ருக்குமணியோ, மக்குமணியோ... ஒன் பையன் கிடச்சுட்டதாய் நீயும் எழுதிக் கொடு. இந்தாப்பா, இவங்கள ரைட்டர்கிட்ட கூட்டிட்டுப் போப்பா...ஓ.கே. மிஸ்டர் இளங்கோ! தாங்க்யூ மிஸ்-ஸா, மிஸ்ஸஸ்ஸா... விஷ்யூ... குட்லக் பாமா."
"சரோசாவை எப்போ சார் விடுவீங்க?”
"போலீசுக்கு எந்தச் சமயத்தில் என்ன செய்யணும் என்று தெரியும். எங்க டூட்டிய நீங்க செய்ய வேண்டாம். இனிமேலாவது, குப்பத்து காரிங்ககிட்ட நாசூக்கா நடந்துக்கங்க. டி.சி.கிட்ட இன்னொரு தடவை பேசி, என்ன முடிவு எடுக்கணுமோ அதை எடுப்போம். போயிட்டு வாறீங்காள?"
இன்ஸ்பெக்டர், அவர்கள் அங்கேயே தயங்கி நின்றபோதும், அவர்கள் அங்கே இல்லாததுபோல் அனுமானித்து, சப் இன்ஸ்பெக்டரிடம் பேசப் போனார். இதற்குள் அவர்களை ரைட்டரிடம் கூட்டிப் போகும் பொறுப்பை மேற்கொண்ட ‘கரும்பு மாமூல்' கான்ஸ்டபிள் பாமாவை கெஞ்சுவதைப் போலவும், இளங்கோவுக்கு அஞ்சுவது போலவும், ருக்குமணியை மிஞ்சுவது போலவும் ஒரே சமயத்தில் பல பார்வைகளை வீசிக் கொண்டு அவசரப்படுத்தினார். அவர்களும், அவர் பின்னால் போய் விட்டார்கள். உடனே, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து லேசாய் சிரித்தார். அந்தச் சிரிப்பைப் புரிந்து கொண்ட சப்... அதற்குரிய அர்த்தத்தை அவரிடமே விளக்கினார்.
"பயல் ஆறு மாதத்துக்கு தூங்க மாட்டான் சார். டெப்டி கமிஷனர் கிட்டயிருந்து வந்தங்கிறதுல ஆரம்பத்துல தெனாவட்டா நின்னவனை அப்படியே கூனிக் குறுக வைச்சுட்டீங்களே; அவனை