(Reading time: 19 - 38 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

போவதைப் பார்த்துவிட்டு வாயில் அந்த வார்த்தையை சுமந்து கொண்டு நின்றாள். பிறகு அவர் ஒரு மாதிரி டெலிபோனில் பேச்சை இழுப்பதைப் பார்த்துவிட்டு, சத்தம் போட்டு ஒரு தாங்க்ஸை சொல்லிவிட்டு மற்றவர்களோடு வெளியேறினாள்.

   

சென்னைப் பெருநகர் காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திலிருந்து உருண்டோடி வந்த இன்னொரு ஆட்டோ ரிக்ஷா, சரோசாவுக்கு அடி உதைகளை வாடகையாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் பழைய காவல் நிலையத்திற்குள் வந்தது. இங்கேயும் ஒரு போலீஸ்காரர் வந்து அந்த டிரைவரை திட்டக்கூடாது என்பதற்காக, ருக்குமணி வாசலிலேயே இறங்கிக் கொண்டாள். ஆனாலும், அம்மாம்பெரிய போலீஸ் அதிகாரியைப் பார்த்ததால், அவளுக்கு, இந்தக் காவல் நிலையம், மகுடம் இல்லாத பிசாத்தாய் தோன்றியது.

   

பாமா, தயங்கித் தயங்கி பின்னால் நடந்த ருக்குமணியை வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து இழுத்தாள். பின்னால் மெல்ல நடந்த இளங்கோவை முதுகைப் பிடித்துத் தள்ளினாள். அந்த மூவரும், ஆறுமுகப் பயலும், மாடிமேல் குடிகொண்ட இன்ஸ்பெக்டர் அறைக்குள் வந்தார்கள். இப்போதும் அங்கே அதே கிரைம் இன்ஸ்பெக்டரும் இருந்தார். அவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், இவர்களைப் பார்த்ததும் உடனடியாக வாயை மூடிக்கொண்டு, முறைத்தார். பாமா அதை பொருட்படுத்தாதது போல் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, இளங்கோவையும் உட்கார வைத்துவிட்டுப் பேசினாள்:

   

“ஸார், என் பெயர் பாமா. டி.சி.கிட்டே போயிட்டு வாரோம்!" "நாங்களெல்லாம் சின்னவங்க. பெரியவங்கக்கிட்ட போன பிறகு எங்ககிட்ட என்ன வேலை?"

   

இதற்குள், சப்-இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டுப் பேசினார்:

   

“ஒன்று மட்டும் நினைச்சுக்கங்கம்மா. நீங்க டைரக்டர் ஜெனரல்கிட்ட போனாலும், கடைசியில அது நல்லதோ, கெட்டதோ அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, ஒரு சப்-இன்ஸ்பெக்டர்கிட்ட, அல்லது ஒரு கான்ஸ்டபிள்கிட்டதான் வந்து விழும். இந்த இளங்கோ அந்த சரோசாகிட்ட முறை தவறி நடக்கப்போனார்னு அந்த டெப்டி கமிஷனர்கிட்ட நாங்க சொன்னோமுனா, அவரால மூச்சுவிடக்கூட முடியாது. நீங்கள் எங்களப் பார்த்துட்டு, அப்புறம் முடியாட்டால்தான் டெப்டி கமிஷனர்கிட்டே போயிருக்கணும்."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.