தர்மபத்தினியை அடிப்பதற்காக எழப்போன துரை அப்படியே கீழே விழுந்தான். அந்த மணல் தரையில் ‘அய்யோ, அய்யய்யோ' என்று அங்குமிங்குமாய்ப் புரண்டான். தன் தலையிலேயே அடித்துக்கொண்டான். மீண்டும் எழுந்து உட்கார்ந்து, வாயிலும் வயிற்றிலும் மாங்குமாங்கென்று அடித்தான். அவன் கையை சரோசா பிடித்தபோது, 'ஏம்மே... இவனுக்கு இங்கயே முந்தானை விரிக்கியா... விரி... விரி...' என்று தர்மபத்தினி கத்திவிட்டு, பின் கதவை அவர்கள் முகத்திலடிப்பது போல் சாத்தினாள். சரோசாவால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கதவுக்குள் மறைந்துகொண்டவளை, ஜன்னல் வழியாகப் பார்த்தபடியே கத்தினாள் :
“துரை அண்ணன இந்த நிலைக்கிக் கொண்டுவந்த நீ, வாயில புழு வச்சி சாகப்போறே. இதுக்கு துரோகம் பண்ணின ஒன் கள்ளப் புருஷன் நொள்ளக்கண்ணு அண்ணாத்த எய்டுன்னு ஏதோ ஒண்ணு புச்சா வந்திருக்காமே, அதால சாகப்போறான். அழாத துரையண்ணே. அழாதே; பேய்க்கி தாலி கட்டினா புளியமரத்துலதான் ஏறணும்."
இந்தச் சமயத்தில் தோஸ்து கோபாலு, பாம்பும் சாகாமல் பாம்படித்த கம்பும் நோகாமல் பேசினான் :
"நீ வேற, ஏம்மே பிராணன வாங்குறே? துரையண்ணன் காலையில் சரியாயிடுவார். புருஷன் பொண்டாட்டின்னா ஆயிரம் இருக்கும். ஒனிக்கி என்னம்மே வந்துது? ஒன்னால அண்ணாத்தே எங்களையும் சந்தேகப்படப்போறாரு.பழகின தோஷத்துல சொல்றேன், நாயினாவைக் கூட்டிக்கினு போயிடும்மே."
"ஆமாம்! கோபாலு சொல்றது மாதிரி ஜல்தியா போயிக்கினே இரு.'
சரோசா, குப்புறக் கிடந்த துரை அண்ணனையும், தன்னை அந்நியமாகப் பாவித்த, ஒரு காலத்தில் அன்யோன்யமான தோஸ்துகளையும் பார்த்துப் பொருமினாள். கீழே கிடந்த தந்தையை தூக்கினாள். அவர் துள்ளலாய் எழுந்து நீராவி எஞ்சின்போல் நடந்தார். சரோசாவை, இப்போது கேரேஜ்போல இழுத்துக்கொண்டு போனார். துரையின் தர்ம பத்தினி வீட்டுக்குள் டெலிபோனைச் சுழற்றி, கோபம் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தாள். அப்புறம் அழுதாள், இன்னிக்கே வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டாகணுமாம்.