அதுக்குள்ள ஒன் புத்திய காட்டிட்டியே! ஆபீசருகிட்ட போய் ஏன் கம்ப்ளைண்ட் செய்யுறே?”
"நான் வேணும்னு சத்தியமா..."
"இனிமே ஒனக்குப் பாஸே தரமாட்டேன். வேணுமுன்னா நான் சொன்னேன்னு உள்ளே கிடக்கறதுகிட்ட சொல்லு. ஒன் மினுக்கத்த பார்த்தால் நீயே ஒரு பாஸ் மாதிரிதான்."
எல்லோரும் அவளைப் பார்த்துச் சிரித்தார்கள். சரோசா தனக்குத்தானே புரியாத புதிராய் தவித்தாள். அந்தச் சமயம் பார்த்து, உயரம், கனம், வயது ஆகிய முப்பரிமாணங்களிலும் நடுத்தரமான ஒருவர் உள்ளே வந்தார். அனைவரும் அவருக்கு சல்யூட் அடித்தார்கள். அவர், அவற்றை தலையாட்டி அங்கீகரித்தபடியே பிளைவுட் அறையின் புஷ் கதவைத் திறந்தார். அது, அவரது கையை இடுக்குப்பிடி போட்டுக் கொண்டு தலையில் ஒரு போடு போட்டது. அவர் தலையை தடவியபடியே புதுப்பெண் போல் நின்ற சரோசாவை சுட்டிக்காட்டி "இது யாரு" என்றார்.
"புது கேஷ்வல் சார்..."
'இந்தாம்மா, கேஷ்வலு. நான் உள்ளே இருக்கிறவர் மாதிரியே ஒரு ஆபீசரு. என்னப் பார்த்துட்டு அந்தக் கதவ திறந்து வச்சிக்கிட்டு நிக்கணும்னு ஒனக்கு ஏன் தோணல? நானே கதவ திறந்துக்கிட்டு போகணும்னா அப்புறம் நீ எதுக்கு? ஒனக்கு எதுக்குத் தண்டச் சம்பளம்?”
சரோசா, குறுக்கே வந்த பூதம்போன்ற அவரைப் புரியாமல் பார்த்தபோது, அந்த மனிதர் அவள் கதவைத் திறப்பாள் என்று எதிர்பார்த்தார். அவள் சும்மா நின்றதைப் பார்த்துவிட்டு மீண்டும் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனார். ஒரு நிமிடத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டர் அருணாசலம், "சரோ" என்று காலிங்பெல் தாள நயத்தோடு சொன்ன வார்த்தையை, அவர் முடிக்கும் முன்பே சரோசா அங்கே போனாள். அவர் எள்ளுங் கொள்ளுமாய் வெடித்தார்:
"இந்தாம்மா, நீ சரிப்படாதுன்னு தோணுது. இவர் சொன்னப் பிறகும் கதவத் தொறந்து விடலைன்னா ஒனக்கு எவ்வளவு திமிரு இருக்கணும்? இன்னொருவாட்டி இப்படிச் செய்தே. சீட்டக் கிழிச்சிடுவேன். அப்புறம் ஏ.வோ. சார்! இந்த மோகன் பயல் சரிப்பட மாட்டேங்கறான்;