Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 33 - சு. சமுத்திரம்
அந்த ஆட்டோ போலீஸ் வளாகத்திற்குள் பாய்ந்தது. ஆட்டோவிற்குள் சரோசாவிடம் கரிசனம் காட்டிய அந்த போலீஸ்காரர், இப்போது லத்திக் கம்பாலேயே சரோசாவை நெட்டித் தள்ளி கீழே இறக்கினார். கூட வரப்போன முனியம்மாவை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டார்.
சரோசா, அந்தப் போலீஸ்காரரோடு முதல் மாடிக்கு வந்தாள். இன்ஸ்பெக்டரின் அறைக்கு வெளியே அவளுக்கு வேண்டியவர்களும், வேண்டாத ஒருத்தியும் சுவரோடு சுவராய் நின்று கொண்டிருந்தார்கள். தலையை தொங்கப்போட்டு நின்றருக்குமணி, அவள் தோளைத் தட்டிக் கொடுக்கும் கோவிந்து, அவள் கையைப் பிடித்து வீட்டுக்குப் போகலாம் என்பது மாதிரி தன்பக்கம் இழுக்கும் ஆறுமுகப்பயல், பத்துப் பதினைந்து குடிசை வீடுகளுக்குச் சொந்தக்காரியான ஒரு கிழவி, எல்லாவற்றுக்கும் மேலாக தரையில் முட்டிக்கால்களை மேலே தூக்கி, முகத்தைக் கீழே வளைத்துக் கிடக்கும் நாயினா.
வீட்டுக்காரி, சரோசாவைப் பார்த்துக் கத்தினாள் : "பாவி, கெடுத்தியேடி. கொலைகாரிக்கு என் வீடுதானா கெடைக்கணும்? ஆமை புகுந்த வீடு மாதிரி என் வீட்டை ஆக்கிட்டியேடி. போலீஸ்காரங்க உன்னால என்னையும் பிடிச்சு வைக்கிறது என்னடி நியாயம்? உடனே போய் அந்தக் கொலைக்கும் வீட்டுக்காரம்மாவுக்கும் சம்பந்தம் இல்லேன்னு போலீஸ்ல போயிச் சொல்லுடி."
சரோசா, வீட்டுக்காரியை விநோதமாகப் பார்த்தாள். ருக்குவைப் பார்த்த போது பீறிட்ட அழுகை நாயினாவைப் பார்த்தபோது வெறும் ஒலி வடிவங்களாய் உருமின.
அதே போலீஸ் இருக்கையில் இன்ஸ்பெக்டர் முன்பு மாதிரியே உட்கார்ந்திருந்தார். மீசை மட்டும் கொஞ்சம் தடித்திருந்தது. அவர் அருகே பழைய கிரைம் சப்-இன்ஸ்பெக்டர்; இன்ஸ்பெக்டர் ஊதிக் கக்கிய புகையால் கண்ணீர்ப் புகை பிரயோகத்திற்கு ஆளானதுபோல், கண்ணெரிய உட்கார்ந்திருந்த சப், தனது எரிச்சலைக் காட்டுவதற்கு ஆள் தேடிக் கொண்டிருந்தார். கோபம் வந்தால், இவர் உதடுகளையே பற்கள் மாதிரி சில மடிப்புகளை ஏற்படுத்திக்கொண்டு, அவற்றை முன்பக்கமாகக் குவித்துக் கொள்கிறவர். இது 'கரும்பு மாமூல்' கான்ஸ்டபிளுக்குப் புரியும். ஆகையால் உள்ளே எட்டிப் பார்த்தவர் பின்வாங்கிக்கொண்டார்; சுவரோடு சுவராய் பதுங்கிக்கொண்டார். இந்தச் சமயத்தில்தான், சரோசா ஒப்பாரி போட்டாள். புகைத் தாக்குதலில் புகைந்துபோன சப்-இன்ஸ்பெக்டர் கத்தினார் : "இந்தாப்பா, ஒப்பாரி