(Reading time: 12 - 23 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

மேடையில் அதே கணவன்களோடு போலிக் கல்யாணம் செய்து வைக்கும் அமைப்பும் அல்ல, இவரது அமைப்பு. ஓசைப்படாமல் ஆங்காங்கே உதவி செய்கிறவர்கள். இவர்கள் எப்போதாவது ஓசை எழுப்பினால், அதை துப்பாக்கி ஓசையாலும் தடுக்க முடியாது என்பது இன்ஸ்பெக்டருக்குத் தெரியும். ஆகையால், "ஒன் மினிட் மேடம்" என்று சொல்லிவிட்டு யாருக்கோ அவசர அவசரமாய் டெலிபோன் செய்வதுபோல், டயலில் ஒன்பது எண்களைச் சுழற்றினார். பிறகு லைன் கிடைக்காதவர்போல் முகத்தைச் சுளித்துக்கொண்டே அந்தம்மாவைப் பார்த்தபோது, அவள், நேரிடையாகவே கேட்டாள் :

   

"இந்தப் பெண்ணோட பேக்ரவுண்ட் எனக்கு நல்லாவே தெரியும் சார். பாவப்பட்டவள். இவளோட அண்ணாத்தே, அதான் ஒங்களுக்கும் தெரிஞ்ச பெரிய மனுஷன் இருக்காரே..."

   

இதற்குள் எஞ்சிய நான்கு பெண்களில் வாய் தூக்கலான ஒருத்தி இடைமறித்தாள்:

   

"எதுக்காக, ஒரு தாதாவுக்கு 'ரே' போடுறீங்க?”

   

"நீ சும்மா இரும்மா. அந்தப் பெரிய மனுஷன் இந்தப் பெண்ணை, ராத்திரியோட ராத்திரியா வேட்டையாடி இருக்கான். எப்படியோ தப்பித்து இந்தப் பொண்ணு, கமிஷனருக்குப் புகார் செய்திருக்காள். ஒங்களுக்கு நேரடியாய் எழுதாதது தப்புத்தான். அதுக்காக இவ்வளவு பெரிய குற்றத்த அவள்மேல் சுமத்தப்படாது. ஒங்களுக்கும் பிள்ளகுட்டி இருக்கு."

   

இன்ஸ்பெக்டருக்கு, இப்போதும் ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும்போல் இருந்தது. அதை, அந்தம்மா ஆட்சேபிக்கப் 19 போவதில்லை; ஆனாலும் ஒரு தயக்கம். இந்தச் சமயம் பார்த்து நழுவப் போன கிரைம் சப்-இன்ஸ்பெக்டரை ‘சிட்-டவுன்' என்றார். பிறகு பட்டும், படாமலும் பார்த்தபடியே, நீதிமன்றங்களில் கூறப்படுமே கசங்கிப்போன வார்த்தை, "சொல்வது அனைத்தும் உண்மை, உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை” என்ற தொனியில் பேசினார் :

   

"நீங்க நினைக்கிறது மாதிரி இல்லம்மா. இந்தப் பொண்ணோட புகார் கமிஷனர் கிட்டேயிருந்து என்கிட்டே என்கொயரிக்கு வந்தது. நான் விசாரிக்கப் போனேன். அப்போதுதான் ஒரு அக்கிரமம் தெரிஞ்சுது. துரை என்கிற கள்ளச்சாராயக் காரனோட பிணம், ஒரு கோணிப்பையில் மகாபலிபுரம் கடலுல மிதந்ததுக்கும், இவளுக்கும் சம்பந்தம் இருக்குது. நாங்காளா தேடாமல் தானாக கிடச்ச கேஸ்."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.