பேசிக்கொண்டு, தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு, இனிமேலும் ஏமாற மாட்டேன் என்று நினைத்துக்கொண்டு நின்றாள்.
இளங்கோ, அவளை வேகவேகமாக நெருங்கினான். பிறகு அவளருகே போக வேண்டாம் என்பதுபோல் பாதியிலேயே நின்றான். அப்புறம் அதை ஈடு செய்யும் வேகத்தில் நடந்தான். அவளோ, அவனைப் பார்த்தும் பாராததுபோல் முந்தானை முனையைத் தூக்கி முகத்தில் வீசிக்கொண்டு, அவனிடம் நாலு கேள்வி நல்லாக் கேட்கணும் என்ற தோரணையில் சாய்வாகப் பார்த்தபடியே நின்றாள். அந்தப் பார்வைச் சரிவாலோ என்னமோ, இளங்கோ அவளிடம் முன்னைப்போலவே நெருங்கி நின்றான். உடனே அவள் ஒரு அந்நியனிடமிருந்து விலகுபவள் போல் சிறிது விலகினாள். பிறகு இவனும் மரியாதைக்குரிய தூரத்திற்கு பின்வாங்கிக் கொண்டே, மரியாதையற்ற குரலில் கேட்டான் :
“அந்தப் பாவிப் பொண்ணு சரோசா, நீ நெனைச்சது மாதிரியே ஒரு கொலை கேசுல சிக்கிட்டாள். அதோ அந்த அறைக்குள்ளேதான், ஒருவேளை இந்நேரம் உதை வாங்கிட்டிருப்பாள். நீங்க எல்லாரும் விரும்பினதுமாதிரி அவளுக்கு ஆறு வருஷம் கிடைக்காது. தூக்குத் தண்டனைதான் கிடைக்கும். இப்போ ஒனக்கு திருப்திதானே? ஒங்கப்பா கிட்டயும் சொல்லு... எங்கம்மாக்கிட்டயும் சொல்லு. சந்தோஷப்படுவாங்க. பிறத்தியார் கஷ்டத்துல சந்தோஷம் பிறக்கும் என்கிறதை ஒங்க மூலம் தெரிஞ்சுக் கிட்டேன்."
பாமா, அவனை ஏறெடுத்துப் பார்த்தாள். அவன் முகத்தின் ஒவ்வொரு சுருக்கமும், வேதனையை இறுக்கிப் பிடித்து நிறுத்தி வைத்திருப்பதுபோல் தோன்றியது. அவளுக்கும் என்னமோ போலிருந்தது. ஆனாலும், வீம்பாகப் பதிலளித்தாள் :
"யாரும் யாரைப் பற்றியும் என்கிட்டப் பேசவேண்டிய அவசியமில்லை."
"நானும் இப்போ ஒன்கிட்ட ஆசையில பேச வரல. ஒரு ஆண், ஒரு பெண்ணுக்கு உதவி செய்தால், அது காதலின் சமிக்ஞைன்னு நினைக்கிற உன்னை மாதிரி பெண்கள் கிட்ட பேசியும் பிரயோஜனம் இல்ல. ஆனாலும், அவளோட மனிதாபிமானத்தை உன்கிட்ட சொல்லியாகணும். நானும் அவள்கிட்ட இன்-டிப்பரண்டா நடந்துக்கிட்டேன். ஆனாலும், அவள் போலீஸ்கூடப் போகிற நேரத்துல கூட, நாம ரெண்டு பேரும் ஒண்ணாச் சேரணுமுனு சொல்லிட்டுப் போறாள்; அப்படிச் சேரணும் என்கிறதுக்காக நான் சொல்லல. காலேஜ்காரியான ஒன்னையும்,